Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : செவ்வாய் மனிதன்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-06-03-007
ISBN : 978-955-0367-06-1
Author Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 56
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

'பெரியவர்களுக்கான இலக்கியத்தைவிட சிறுவர்களுக்கான இலக்கியம் படைப்பது மிகவும் கடினமானதும் பொறுப்பு வாய்ந்ததுமாகும்' என நான் எனது பிறிதொரு சிறுவர் இலக்கிய நூலில் குறிப்பிட்டுள்ளேன்.  இதையும் விடக் கடினமானது இரண்டு வயதிலிருந்து நான்கு வயதுக் குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பதாகும். ஆனால் இது பற்றிய நுணுக்கமான விளக்கமுடையவர்களுக்கு, அறிவின் அரும்பு கட்டும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறுசுகளுக்கு கவிதையோ,  கதையோ எழுதுவது மிகவும் இலகுவானதாகவும் அமையலாம். காரணம், இவர்களுக்கான கவிதை என்பது ஆங்கிலத்தில் ரேசளநசல சுhவஅநள எனச் சொல்லப்படும்- வெறும் சந்தத்தால் ஆன வார்த்தைப் பிரயோகங்களே. சந்தத்தை கையாளும் திறமையுடையோருக்கு இது இலகுவான ஒன்றே. ஆங்கிலத்தில் இத்தகைய கவிதையொன்றுக்கு உதாரணமாக பின்வரும் கவிதையைக் காட்டலாம். 
Ding Dong Bell
Pussy’s  in  the well
who put her in?
Little Tommy Thin.
தமிழில் இதையொத்த கவிதைக்கு பின்வரும் கவிதையைக் காட்டலாம். 
தோசை என்றால் தோசை
தோணுதொரு ஆசை
அம்மா சுட்ட தோசை
அதிகம் தின்ன ஆசை.
இவ்வாறே இக்குழந்தைகளுக்கு கதைசொல்வதென்பதும் மிகவும் இலகுவானதாகும். காரணம் இரண்டொரு வார்த்தைகளை இடைக்கிடை தந்து, முழுவதையும் படத்தின்மூலம் விளக்குவதே இவர்களுக்குரிய கதையாகும். 
இது ஒரு புறமிருக்க, எந்த வயதினருக்கு இலக்கியம் படைத்தாலும் நாம் நமது சூழல், பண்பாடு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துச் செயற்படுவதே சிறப்புடையதாகும். இதோ நான் மேலே குறிப்பிட்ட வயதினருக்காக பாடப்பட்ட ஆங்கில 'நேர்சறிப்' பாடல் ஒன்றை உதாரணத்திற்குத் தருவதன் மூலம் இதை விளக்கலாம். 
Hush a bye Baby
On the tree Top
When the wind Blows
The cradle will Rock
When the bough breaks
The Cradle will fall
Down will come Baby
Cradle and all.
இங்கே இப்பாடல் சொல்லும் கருத்து வேடிக்கையானது.
மரத்தின் உயரே குழந்தை
காற்று வீசுகையில் தொட்டில் ஆடும்
கிளை முறிகையில் தொட்டில் வீழ,
குழந்தையும் தொட்டிலும் கீழே...
இவ்வாறு கிளை முறிந்து, தொட்டிலும் குழந்தையும் கீழே வீழ்வது போன்ற பாடலை நமது கலாசாரம் அனுமதிக்காது. இது ஒரு அமங்கலமான பாடலாகவே கருதப்படும். ஆங்கில நேர்சறிப் பாடல்களில் இவ்வாறு சந்தத்துக்காக எத்தனையோ, அபத்தமான கருத்துக்கள் விரவிவரும் பாடல்களைக் காணலாம். ஆனால் அதற்காக நாமும் அவற்றைப் பின்பற்றி நகைச்சுவைக்காகக் கூட எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. நமக்குரிய பண்பாட்டுக்கு இயைபாக இருக்க எழுதுவதே சிறப்பு. 
(2)
'செவ்வாய் மனிதன்' என்னும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ரேசளநசல சுhலஅநள என்று சொல்லப்படுகிற குழந்தைப் பாடல்கள் அல்ல. ஆறுவயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கான கவிதைகள். இவையும் சந்தத்தை அடியொற்றியவைகளே. அத்தோடு ஒவ்வொரு கவிதையில் அடியோடும் கருத்துக்கள் அவர்களின் ரசனைக்கு இனிப்பானவையாகவும் இருக்கப் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. 'செவ்வாய் மனிதன்' என்னும் பா நாடகத்தில் மாறிமாறி வரும் தாளலயமும் பேச்சோசைப் பாங்கும் இதற்கு உதாரணம். இது சில இடங்களில் மேடையேற்றப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. 
அடுத்ததாக மரபு வழிவரும் கவிதைகள் அனைத்துமே - அவை பெரியவர்க்கான கவிதையாயினும் சரி, சிறுவர் கவிதையாயினும் சரி - சந்தக் கவிதைகளே, அதாவது எதுகை, மோனை என்பவற்றின் அனுசரணையோடு கூட்டப்படும் சந்தங்கள். அப்படி எதுகை மோனைக்குட்படாத, மரபுவழிவராத கவிதைகளும் தமக்குரிய சந்தம் உடையவையே - இன்றைய புதுக்கவிதைகள் போல். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்றைய சிறுவர் கவிதைகளும் அத்தகைய புதுக்கவிதை முறையில் எழுதப்படலாம் என்பதைச் சுட்டவே. இப்படி எழுதுவதன் மூலம் சிறுவர் கவிதை என்பவை ஒரே வகையான சந்தங்களுக்குள்ளும் சிந்தனை முறைக்குள்ளும் நின்று சுழல்வதை மாற்றியமைத்து புதிய தடங்களில் நடைபோடச் செய்யலாம் என்பதை மனதில் இருத்தியே. அத்தகையவற்றை நான் செய்து பார்த்துள்ளேன். இத்தொகுப்பில் அந்தவகைக்கு உதாரணமாக 'ஒரே ஒரு ஊரில்' , இன்னொரு பூ, சிறுவர் கூடிக் கூடி, மழை என்பவற்றை  காட்டலாம். இது எதிர்காலத்துக்குரிய தேவை. இதை மனதில் இரு;தி ஆற்றலுள்ளவர்கள் முயலவேண்டும் என்பதே எனது அவா.

மு. பொன்னம்பலம்

Full Description (முழுவிபரம்):

ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் மு.பொன்னம்பலம் முக்கியமான ஆளுமை. இவர் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர். 

மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற் கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை நல்கி வருகின்றார். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக்க உந்துதல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்கள் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அதிகம் அக்கறை காட்டுபவர். இத்தன்மைகளை அடையாளம் காட்டும் படைப்பாக்கமாகவே ‘செவ்வாய் மனிதன்” அமைகின்றது. 
 
எமது சமூகப் பண்பாட்டு அசைவியக்கத்தின் அறிவு, ஆற்றுகை மரபுகளையும் உள்வாங்கி மீறவேண்டிய இடத்தில் மீறி புதிதாக கிளைவிட்டு புதிய மனிதர்களுக்கான புதிய விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் மற்றும் வாழ்வியல் கோலங்களையும் உருவாக்கும் பண்பு இலக்கியமயமாகின்றது. இதுவே சிறார் இலக்கியத்தின் ஆதார தளமாகவும் இயங்குகின்றது. ‘செவ்வாய் மனிதன்” சிறுவர்களின் ரசனைக்கும் படைப்பாக்க உந்துதலுக்கும் புதிய கற்பனைகளுக்கும் வழிசமைக்கும் படைப்பாக விளங்குகின்றது. 
 
இதுபோன்ற சிறார் இலக்கிய நூல்களை தமிழில் உருவாக்கி சிறார் இலக்கியம் வளம்பெற கவிஞரிடமிருந்து நாம் இன்னும் நிறைய படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : செவ்வாய் மனிதன்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு