Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : இலக்கியத் தென்றல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-05-01-012
ISBN : 978-955-1857-11-0
Author Name (எழுதியவர் பெயர்) : சு.வித்தியானந்தன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 • பதிப்பாளர் உரை (முதலாம் பதிப்பு)
 • முன்னுரை (முதலாம் பதிப்பு)
 • பேராசிரியரின் புலமைச் சுவடுகள்
 • அணிந்துரை
 • அறிமுக உரை
 • பதிப்புரை
 • தமிழ் இலக்கியப்பரப்பு
 • தமிழ் இலக்கண நூல்கள்
 • ஐம்பெருங் காப்பியங்கள்
 • இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு
 • ஈழநாட்டுப் பெரியார் தமிழ்மொழிக்காற்றியதொண்டு
 • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
 • அகர வரிசைகள்
Full Description (முழுவிபரம்):

தமிழ் இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளை விளக்க எழுந்தநூல் இலக்கியத்தென்றல். ஒரு மொழியிலுள்ள நூல்களின் தோற்றத்தையும் தன்மையினையும் இலக்கிய வளர்ச்சியினையும் காலவரையறைப்படுத்தி வகுத்துக்கூறுவன, இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம், விசயநகர நாயக்க மன்னர்காலம், ஐரோப்பியர் காலம், இக்காலமென ஏழு பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு காலப்பகுதியின் அரசியல்நிலை, அக்காலப்பகுதியிலே தோன்றிய நூல்கள், அவற்றின் பண்பு முதலியனவற்றை ஒழுங்குபெற எடுத்துக்கூறுகின்றது. இந்நூலிலுள்ள இலக்கியப் பரப்பு என்னும் முதற்பகுதி.
தமிழிலே முதன்முதல் இலக்கண நூல் இயற்றியவர் அகத்தியர் என்பர். தமிழ்இலக்கண நூல்கள் என்னும் பகுதி இம்மரபு ஆராய்ச்சிக்கு முரண்பட்டதென்றும், தொல்காப்பியமே இப்பொழுது கிடைத்துள்ள பழம் இலக்கண நூலென்றும் சான்றுகாட்டி நிறுவுகின்றது. தொல்காப்பியத்துக்குப் பின் இன்றுவரையுள்ள காலப்பகுதியில் தோன்றிய இலக்கண நூல்களின் வரலாற்றினையும் காலவரையறுத்து இப்பகுதி கூறுகின்றது. 
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியன ஐம்பெருங் காப்பியங்கள் என்பர். பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களைத் தந்து சீவகசிந்தாமணியே பெருங்காப்பிய இலக்கணம் அமைய இயற்றப்பெற்ற நூல் என்பதனை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற பகுதி விளக்குகின்றது. 
தமிழகத்திற் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும் பல. அவை யாவும் தமிழ் மொழியைப்பேணி வளர்த்தன. சைவரும் வைணவரும் சமணரும் பௌத்தரும் கிறித்தவரும் தமிழ்த்தாய்க்குச் செய்த தொண்டினை யாவரும் நன்கறிவர். ஆனால், இஸ்லாமியரின் தமிழ்ப்பணியை அறிந்தோர் தொகை மிகவும் குறைவு. இஸ்லாமியர் தமிழிலே இயற்றிய நூல்களைக் காப்பியங்கள், பிரபந்தங்கள், இசைப்பாடல்கள், ஞானப்பாடல்கள், உரைநடை நூல்களெனப் பல பிரிவுகளாக வகுத்து, அவற்றைப்பற்றிக் கூறுகின்றது. இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு என்னும் பகுதி. 
'வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழநாடு தமிழகத்தோடு இணைந்திருந்தது. பல சமயங்களில் உண்டான கடல்கோள்களினால் ஈழம் தனித்ததாயிற்று' என்று சில அறிஞர் கொள்வர். இதன் உண்மை எவ்வாறாக இருப்பினும் பழங்காலந்தொட்டே ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததெனத் தெரிகின்றது. ஈழத்துத் தமிழரும் தமது தாய்மொழியைப் பேணி வளர்த்து வந்திருக்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பல துறைகளில் ஈழநாட்டினரே தமிழ் நாட்டவருக்கு வழிகாட்டினர்; இன்றும் வழிகாட்டுகின்றார்கள். இவையாவையுமே ஈழநாட்டுப் பெரியார் தமிழ்மொழிக்காற்றிய தொண்டு என்னும் பகுதியில் அடங்கியுள்ளன. 
கட்டுக்கிடையாக இருந்த தமிழ்மொழியை விடுதலை செய்து, அதற்குப் புத்துயிர் கொடுத்தவர் புதுமைக்கவி பாரதியார். அவர் வகுத்த வழியிற் சென்றவர் பாரதிதாசன், தேசிக விநாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை முதலியோர் இவர்களுடைய கவிதைகளிற் பொதுவான பண்புகள் பலவற்றைக் காணலாம். ஆயினும், இவர்களுடைய பாடல்களுக்கெனச் சிறப்பான பண்புகளுஞ் சில உள. இவை யாவற்றையும் ஆராய்வதே இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை என்னும் பகுதி. 
இந்நூலை ஆக்குந்தோறும் படி எழுதித்தந்தும், ஆயோலை தூக்கியும் உள்ளன்போடு நண்பர் பலர் உதவினர்.  அவர்களுக்கு நான் என்றும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 
இந்நூலினை வெளியிட முன்வந்த கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தாருக்கும், இதனை விரைவில் அச்சிட்டு உதவிய அருணா அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகுக. 

சு.வித்தியானந்தன்