Book Type (புத்தக வகை) : கலைகள்
Title (தலைப்பு) : இசையும் சமூகமும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-12-02-029
ISBN : 978-955-1857-28-8
EPABNo : EPAB/02/18817
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 • இசை, மொழி, சமூகம் ஓர் உறவாடலின் வெளிப்பாடு
 • நாட்டார் பாடல்களின் இசைவளம்
 • இசையும் செவ்வியல் நெறியும்
 • இசையும் உளக்கவர்ச்சியியலும்
 • இசையும் பின்னவீனத்துவமும்
 • இசை உள்ளிட்ட கதை மரபு
 • இலங்கையின் கீர்த்தனை இலக்கியம்
 • இசையும் உளப்பகுப்பு உளவியலும்
 • சமூக அடித்தள மக்களும் தவில் நாகசுரமும்
 • அறியாதவற்றை நோக்கிய அழகியற் பரிமாணம்
 • தொன்மங்களும் இசையும்
 • பொதுவியல் இசை
 • ஆடலில் இசை
 • மேலைப் புலத்திலும் தமிழகத்திலும் இசை அறிகைப் புலப்பாடுகள்
 • உசாத்துணைகள்
Full Description (முழுவிபரம்):

பொதுவாக எங்கும் இசை இல்லாச் சமூகங்கள் எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. ஒரு நிலையில் இசையே மொழி, விஞ்ஞானம், தொன்மம், மதம் மற்றும் சங்கேத உத்திகள் அனைத்துக்கும் மூலமாக இருந்துள்ளது. 
தொல் சமூகங்கள் உணவுப் பொருள் சேமிக்கவும் வேட்டை-யாடவுமான கருவிக்கு அடுத்தபடியாக இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன. மனிதர்களை ஒருங்கிணைக்கும் முறைமையில் இசைக்கருவிகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இசை எல்லோரது நினைவுகளிலும் நடத்தைக் கோலங்களிலும் சிந்தனையிலும் செல்வாக்கு வகிக்கின்றன. ஆக தனிமனித உணர்வு-களையும் மீறிய ஒரு சமூகப் படிமமாகவே இசை விளங்குகின்றது. இசை உணர்வுகள் சமூக இருப்பிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன. தொல் சமூகங்களது நீண்ட இருப்பு வன்முக இசை உணர்வுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாகிறது. இன்னொருபுறம் சில அடிப்ப-டையான வகைப்பாட்டுக்குள் அடங்கும் பண்புகளையும் கொண்-டுள்ளன. இது தொன்ம இசைக்கு மட்டுமன்றி நவீன இசைகளுக்கும் நன்கு பொருந்தும்.
இசையை நாம் பயன்பாட்டு இசை மற்றும் அழகியல் இசை என ஒரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். பயன்பாட்டு இசை மதச் சடங்குகள் சமூகச் சடங்ககள் வாழ்வியல் சடங்குகள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவை. இவற்றுடன் மாந்திரிகம், மருத்துவம், வழிபாடு உபாசனை என்பனவும் சேர்ந்து கொள்-கின்றன. மந்திரமும் சடங்குகளும் புராதன கிராமிய வாழ்க்கையின் அறிகைக் கோலங்களையும் வெளிப்படுத்தின. சமூக வாழ்வின் அத்தனை தருணங்களும் இசையின் துணையின்றி நடக்காது. இந்த நிலை தொல்சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும் மற்றும் நாகரிக சமூகங்களுக்கும் பொருந்தும். அழகியல் இசை என்பது இப்படி நேரடிப் பயன்பாடு இன்றி நினைவுகள் கனவுகள் சிந்தனை என்பவற்-றுடன் தொடர்புடையவை. இதனால் உள இன்பம் உச்ச கிளர்வு நிலைப்பட்டதாகவும் அமையும். இசை ஒருவகையில் குறியீட்டுச் சடங்காகவே எல்லாச் சமூகங்களிலும் இருந்து கொண்டிருக்கிறது. 
பல சமூகங்களில் இசை அவர்களின் படைப்புக் கடவுள்க-ளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. கடவுள் வழிபாடு இசை கலந்த வழிபாடாகவும் பரிணமிக்கிறது. ஒவ்வொரு  கடவுள்-களுக்கும் ஓர் இசைக்கருவி உரியதாக உள்ளது. ஒவ்வொரு இசைக் கருவியும் ஒருவித தெய்வ நிலையில் வைக்கப்படுகிறது. வாழ்வியல் முழுமையில் இசையும் கருவிகளும் பிணைக்கப்பட்டவையாக உள்ளன. அவை மூலம் இனத்துவ அடையாளங்கள் பேணப்படு-கின்றன. தமது சமூகத்திற்கான இசைக்கருவி ஒன்றில்தான் தமது இனவாழ்வே அடங்கி இருக்கிறது என்று நம்பி அவற்றை வணங்-கவும் வழிபடவும் பாதுகாக்கவும் துடிக்கின்றன. தொல்சமூகங்கள் ஒவ்வொன்றிலும் நாம் இந்தப் பண்பைக் காணலாம். தமிழ் சமூகம் போன்ற நீண்ட மரபு கொண்ட தொல்சமூகங்களில் இசையுடன் கூடிய வாழ்வுதான் உள்ளது. இதற்கான வரன்முறையான பதிவு-களை தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளில் தெளிவாக இனங் காணலாம். உலக வரலாற்றை ஒவ்வொரு சமூகங்களுக்குமான வரலாற்றுடன் எழுதும் பொழுது அது இசைகளின் வரலாறாகவும் இருக்கும். அதேபோல் எந்தவொரு இசையின் வரலாறும் அது சார்ந்த சமூக அரசியல் பண்பாடுகளின் வரலாறாகவும் இருக்கும். 
இந்தியச் சமூகம் சாதியப் படிநிலை இறுக்கமுள்ள சமூகமா-கவும் உள்ளது. இதனால் அந்த சாதியச் சமூகத்தின் பிரிவுகளுக்குள் இசையும் இசைக் கருவிகளும் உறவை வைத்துள்ளன. சிலவகை இசைகளை வேறுசிலர் கற்கவோ பழகவோ ஒருவகையில் கேட்-கவோ விலக்குதல்கள் உண்டு. சாதிய இறுக்கம் சாதியப் படிநிலை, இசைகளையும் கூறுபடுத்தி உள்ளன. இசையில் தீண்டாமையின் விதிகள் இயல்பாக செயற்படுகின்றன. இசைக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவு சாதியம் நிலைப்பட்டதாக உள்ளது. 
இந்த எதார்த்தம் இசை பற்றிய புரிதலில் முக்கியம் சாதியம் கடந்த இசை எம்மிடையே இன்னும் முகிழ்க்கவில்லை. மாற்று இசை மரபுக்கான புரட்சிகர உள்ளடக்கத்தை வேண்டி நிற்கும் சமூகமாகவே இன்றுவரை உள்ளோம். இசைப் பாரம்பரியத்தில் வடமொழியும் தெலுங்கும் ஆதிக்கம் செலுத்தும் மரபு தோன்றி-விட்டது. எமக்கான இசைமரபு தமிழிசையின் வேர்கள் அறுபட்டு தொடர்ச்சியற்ற இசை மரபாக கையளிக்கப்பட்டு வருகிறது. மொழியை இசையில் இருந்து பிரித்தல், சமூகத்தை இசையில் இருந்து பிரிக்கும் செயற்பாடாகவே மாறும். இந்த நிலைமை தமிழில் உருவாகிவிட்டது.  முன்பு அதிகாரத் திணிப்பும் ஆதிக்கமும் குரூரமாக நிகழாத தொல்சமூகங்களில் இசையும் மொழியும் இணைந்து நின்றது. எமது பண்டைய தமிழிசை மரபு இதனை நன்கு புலப்படுத்தும். இனத்துவ அடையாளங்களை வெளிப்படுத்தும் விசை கொண்ட சாதனங்களுள் இசை தனிச்சிறப்புடையது. தமிழர்-களுக்குரிய தனித்துவமான இசை மரபு இருந்தும் தற்போது அது கைவிடப்படும் ஒரு பண்பாட்டு முரண்நிலை தோன்றிவிட்டது. இது ஒரு வகையிலே சமூக முரண்பாடுகளுடன் ஏற்பட்ட வளர்ச்சியாயிற்று.
இன்று இசை தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கி-னால் அவற்றுள் பெரும்பாலானவை செவ்வியல் இசை என்று சொல்லப்படுகின்ற கர்நாடக இசை இராகங்களின் அமைப்பு பற்றியும் சமூக உணர்வற்ற முறையில் இராகங்களின் வரலாறு பற்றி-யும் விளக்குவனவாகவே இருப்பதை அறிந்து கொள்ளலாம். 
இந்தப் பின்புலத்தில் தான் 'இசையும் சமூகமும்' என்னும் நூல் வெளிவருகின்றது. இதுவரை இசையியல் குறித்த ஆய்வு ஒற்றைப் பரிமாணத்தில் தான் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதாவது 'இசைக்காக' என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையை மாற்றி சமூகப் பரிமாணம், அரசியல் பரிமாணம், உளவியல் பரிமாணம், கல்விப் பரிமாணம் போன்ற பன்முகப் பரிமாணத் தளங்களில் ஆய்வு வளர்க்கப்பட வேண்டு-மென்பதை இந்நூல் தெளிவாக சுட்டுகிறது. இதற்கான சிந்தனை மரபு கருத்தியல் தளம் நூலின் மைய இழையாக உள்ளது. 
'இசையும் சமூகமும்' தமிழ் போன்ற தொல் சமூகங்களின் பண்பாட்டு   வேர்களை, இசையின் அதிகார முகங்களை தேடுவதற்-கான உந்துதலை வழங்குகிறது. மரபு ரீதியான ஆய்வுச் சட்டக  வழி-யில் இருந்து விடுபட்டு மாற்று ஆய்வுக்கான களங்களை இந்நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது. 
பேரா.சபா.ஜெயராசா தொடர்ந்து நம்மை புதிய கோணங்களில் சிந்திக்க ஆய்வு செய்யத் தூண்டுகின்றார். இந்த மரபு இன்னும் தொடர வேண்டும். இசையியல் குறித்த ஆய்வு சமூகப் பண்பாட்டு அரசியல் பரிமாணமாகவும் விருத்தி பெற வேண்டும். இதற்கு இந்நூல் புதுத்தடம் அமைக்கிறது. 

-தெ.மதுசூதனன்-