Book Type (புத்தக வகை) : கவிதை
Title (தலைப்பு) : ஏ.இக்பால் கவிதைகள் 100
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-12-01-056
ISBN : 978-955-1857-55-4
EPABNo : EPAB/02/00000
Author Name (எழுதியவர் பெயர்) : ஏ.இக்பால்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 280.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

(1) தொழிலாளி (2) இடை (3) சங்கமென எழுவோம் (4) உள்ளம் திறப்பாயே (5)முன்னேற்றம் (6)எண்ணெய்த் தாள்  (7) புதுயுகக் கவிஞன் பாரதி  (8)விழிகாட்டும் பெண்மை  (9)கண்டிக்கா செல்கின்றீர்?  (10)என்னைத் தேடியாம் வந்தவள் (11)ஜன்னலை இழுத்து மூடு (12)ஆசையின் அசைவு (13)முசுறுகள் (14)வந்தவழி (15)அந்த இரவு (16)கலையின் காவல் இழந்தாயே  (17)சீரழிவு  (18)முழுமை பெற்ற இலங்கை (19)மனிதனில் மனிதனில்லை  (20)மனம் போல வாழ்வு  (21)அழகிய இலங்கை காத்திடுவர் (22)வேலைக்கேற்ற கூலி (23)மனித குணரகங்கள் (24)நிறை (25)அடைய முடிந்தால் புகழ்பாடும் (26)இயலாமை  (27)வாழ்வில் காணும்  (28)ஆன்ம பலம் (29)பாம்பாட்டி (30)யதார்த்தம்  (31)நாளையே மாற்றுகிறார்  (32)வழி (33)ராம் ரஹீம் எங்கே (34)உரைகல் (35)எழு அதி மனிதனே (36)ஒற்றுமை (37)பொருள் முதல் வாதம் (38)கருணை? (39)ஒருவன் வருவான் (40)சமத்துவச் சிதறல்?  (41)தீர்வு எப்படி....  (42)ஒரு சமூகத்தின் சாபம்? (43)புதை பொருள்  (44)மாயை  (45)எங்களை விட்டு விலகுங்கள் (46)வாரும் இங்கே சேரும்  (47)ஊது குழல் (48)எது கல்வி  (49)கூக்குரல்  (50)நீ என்னில் தான் (51)ஆசாரக் கள்ளர் (52)கோழி முந்தியா முட்டை முந்தியா (53)நேர்மை வருமா (54)இளையவர் கையில் சமாதானம் (55)பெருமை  (56)கணக்கைக் கணி (57)எங்கும் நிறைந்த தமிழ்  (58)மாற்ற முடியாத மரபு (59)ஓட்டாண்டிகள் (60)பூமியின் வல்லமை (61)அபசகுனம் (62)கோவணமே (63)உரிமை உதயம்? (64)நங்கூரமிட்டோம் (65)ஒளி தரும் சமத்துவம் (66)சுழலும் வாழ்வு (67)ஒடுங்கி ஒதுங்கும் (68)அவன் நல்லவன் (69)குறி (70)நியாயங்கள் (71)ஒரு புலவரின் சாபம் (72)மொழி இனிமை (73)போதும் என்ற மனமே போதும் (74)சில்லறை (75)மனித உணர்வு (76)நடந்ததென்ன? (77)மடத்தனமழை (78)ஆளுக்கொரு கட்சி  (79)அவசர அபிவிருத்தி  (80)உலகப் போலாக்கம்  (81)பயனே சிறப்பு (82)கோச்சுக்கு என்ஜின் கோலோச்சும்? (83)அகந்தை ஒழியும் (84)பூட்டிய திறப்பு (85)பொழுதே விடியாதா (86)பெருமை ஒதுக்கும் சிறுமை (87)ஒன்று நம் தேசம்  (88)வாழ்வதா வீழ்வதா  (89)குழப்பம் (90)நோக்கும் போக்கும் (91)நீ தேன்தான் (92)கல்வியே பிரச்சினை தீர்க்கும் (93)பாதை (94)உருவம் அரூபம் (95)நாட்டை காப்பாற்று (96)அறிவே பலம் (97)மனிதன் உலகம் (98)ஆடிய ஆட்டம் (99)காலம் கழியும் (100)இயங்குவதை இடைநிறுத்தல் இயலாது
Full Description (முழுவிபரம்):

'எழுத்தாளனே
நீ யார் பக்கம்?
எழுத்தாளனே 
நீ உழைக்கும் 
மக்கள் பக்கமா?
அல்லது
உழைக்கும் மக்களின் 
உழைப்பை
சுரண்டுகின்றவன் 
பக்கமா?'
முற்போக்கு இலக்கிய முன்னோடி மார்க்ஸிம்  à®•à®¾à®°à¯à®•à¯à®•à®¿ எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கின்றான். 
அகிலத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம்தான்  à®‰à®±à¯à®¤à®¿à®¯à®¾à®• நிற்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்பதோடல்லாமல் அந்த மக்களின் போராட்டங்களில் ஏதோ ஒரு வகையில் பங்குபற்றி வருவதுடன் அவர்களுக்காக எழுதி வருகின்றார்கள். எங்கள் முற்போக்குக் கவிஞர் இக்பால் அவர்களும் இந்த உழைக்கும் மக்கள் எழுத்தாளர் அணியில் அன்றுதொட்டு இன்றுவரை உறுதியாக நின்று மக்கள் இலக்கியம் படைத்து வருகின்றார். 
முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?
முற்போக்கு இலக்கியம் ஒரு வாழ்க்கை நோக்கு. மக்கள் மேம்பாட்டுக்கான ஒரு சக்தி மிக்ககோட்பாடு. முற்போக்கு இலக்கியக் குரல், மனிதநேயக் குரல், மக்களின் போராட்டக்குரல் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையையும் ஒடுக்கு முறையையும், சுரண்டலும் சூறையாடலும் எங்குள்ளதோ அங்கு இந்தக் குரல் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 
முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி மார்க்ஸிம் கார்க்கி மக்களைப் பற்றி, அவர்களது போராட்டங்கள் பற்றி வலுவான, புரட்சிகரமான, சத்திய வேட்கையுடைய சிருஷ்டிகளைப் படைத்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் கார்க்கியின் அடிச்சுவட்டில் சென்று கொண்டிருக்கின்றோம். இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவது, மக்களை இலக்கியமயப் படுத்துவதுதான் எமது இலட்சியம். கவிஞர் இக்பாலும் எமது முற்போக்கு இலக்கிய இயக்கதில் நின்று இலக்கியம் படைத்து வருகின்றார்.
கவிஞர் இக்பால் ஒரு மூத்த முற்போக்கு எழுத்தாளர். 1950களில்  à®‡à®²à®•à¯à®•à®¿à®¯ உலகில் அடி எடுத்து வைத்த இக்பால் 1959 வரை உதிரியாக நின்று இலக்கியம் படைத்து வந்தார். இக்காலகட்டத்தில், அழகு இயற்கை, காதல் பற்றிய கவிதைகளைப் பெரும்பாலும் எழுதி வந்தார். 1959ல் முற்போக்கு எழுத்தாளர் எச். எம்.பி மொஹிதீனுடன் தொடர்பேற்பட்டதிலிருந்து, இக்பால் முற்போக்கு இலக்கியச் சுவட்டில் அடியெடுத்து வைத்தார். 1959இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தெற்குக்கிளை அக்கரைப்பற்றில் எச்.எம்.பி. மொஹிதீன் அவர்களது முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்திலிருந்து கவிஞர் இக்பாலின் இலக்கிய யாத்திரை மக்களுடன் இணைந்து புதிய தடத்தில், முற்போக்கு மக்கள் இலக்கியத் தடத்தில் வீறுடன் சென்று கொண்டிருக்கின்றது.
'சங்கமென எழுவோம்' என்ற அவரது கவிதையில்
அங்கம் குலுங்கி
ஆள்நிலைமை பாராது 
பங்கமெனப் பாயாதே 
பயனில்லை; ஒரு கொடியில் 
சங்கமென நாமெழுந்து 
சதி புரிந்தோர் அத்தனையும் 
பங்கப்படுத்திப்
பார் உயரக் கூறிவிட்டு
வெண்காய முரித்திதுகால்
வெறுநிலமாயான எங்கள்
தங்கமாம் நாடுதனைத் 
தயங்காது உயர்த்திடுவோம்'
மேலும் கவிஞர் இக்பால் 'தொழிலாளி' என்ற தமது கவிதையில்,
'நாட்டுக்குழைத்திடும் வர்க்கம் நாடுனதாவதில் ஏனிந்தத் தர்க்கம்' என்று கேட்கின்றார்.
கவிஞர் இக்பால் என்றும் மக்கள் பக்கம்தான் நின்று அவர்களை அணிதிரட்டி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதில் தனது படைப்புக்களிலும், தனது செயற்பாடுகளிலும் முனைப்புடன் உழைத்து வந்துள்ளார். என்றும் அவர் மக்கள் பக்கம்தான் நின்று போராடி வருகின்றார். இதனால் தான் கவிஞர் இக்பால் பிறந்த ஊரான அக்கரைப்பற்றில் 1971ல் அக்கரைப்பற்று மாணவர் பேரவை, ஊர்கூட்டி ஊர்வலம் வந்து 'கவிஞர் இக்பால்' என்னும் பட்டத்தை அவருக்கு சூட்டினர். அது மாத்திரமல்ல அவர் புகலிடமாகக் கொண்ட தர்க்காநகர் 'தர்க்காநகர் படிப்பு வட்டம்' என்ற அமைப்பினூடாக 'ஏ.இக்பாலின் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்' என்ற ஒரு சிறந்த மலரை 2008இல் உருவாக்கி வெளியிட்டுள்ளதுடன் தர்காநகர் மக்கள் ஒன்றுகூடி அவருக்கு பெருவிழா எடுத்து அவரைக் கௌரவித்தனர். 
முற்போக்கு எழுத்தாளர் அணியிலுள்ள முஸ்லிம் படைப்பாளிகளான எச்.எம்.பி.மொஹிதீன் இளங்கீரன், மருதூர்க்கனி, மருதூர்க்கொத்தன், முகமது சமீம், புரட்சிக் கமால், திக்வல்லை கமால் போன்றவர்களைவிட கவிஞர் இக்பால் வேறுபட்ட, விசேஷமான தனித்துவமான குணவியல்புக்களைக் கொண்டவர். இவர் எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவர். ஆனால், கறார்பேர்வழி, வெட்டொன்று துண்டு இரண்டென்று பேசுபவர். முகஸ்துதி பார்க்கமாட்டார். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமென்ற தோரணையில் பேசுவார். செயல்படுவார். அதே போலத் தான் அவரது கவிதைகளும் கெம்பீரமாக நிமிர்ந்து நின்று சத்திய வேட்கையுடன் பேசுகின்றன. 
கவிஞர் இக்பாலிடம் எள்ளளவேனும் சமரசத் தன்மையில்லை; அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை நெற்றிக்கு நேர் மறுதலித்து எதிர்த்துச் சமர் புரிவார். என்றும் எவ்விடத்திலும் பொய்மையை வீறுடன் சாடிப் போர் புரிந்துவருபவர் கவிஞர் இக்பால். 
மூத்த முற்போக்குப் படைப்பாளியான கவிஞர் இக்பால் நான்கு கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுதி உள்பட பன்னிரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பரிசுகளையும் விருதுகளையும் தேடி அலைபவரல்லர். 
'ஏ.இக்பால் கவிதைகள் 100' என்ற இந்த நூல் தேசிய நூலக சேவை சபையினால் வெளியிடப்படுகின்றது. 
இந்த நூலிலுள்ள கவிதைகள், ஏனைய முற்போக்குக் கவிஞர்களது படைப்புகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. இப்படைப்புக்கள் தனித்தன்மையுடையவை. இக்கவிதைகளின் உள்ளடக்கம், உருவம், சொல்லாட்சி, புனைவு ஆகியவை ஏனைய சமகால எழுத்தாளர்களது படைப்புகளிலிருந்து முற்று முழுதாக வேறுபட்டவையாக இருக்கின்றன. இந்த நூலிலுள்ள கவிதைகளில் கவிஞர் இக்பாலின் தனித்தன்மையுடைய பண்பைக் காண முடிகின்றது. 
முற்போக்குக் கவிஞர் இக்பாலின் இத்தொகுதியிலுள்ள கவிதைகளை சாதாரண மக்கள் படித்து இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இக்கவிதைகளில் அவர் சொற் சிலம்பமாடி வாசகர்களைத் திகைக்க வைக்கவில்லை. இக்கவிதைகளில் அவர் படிமங்களை ஏறுக்கு மாறாகத் தணித்து வாசகர்களுக்கு சித்து விளையாட்டு காட்டி அவர்களைத் திணறடிக்கவில்லை. 
கவிஞர் இக்பால் இன்நூலிளுள்ள கவிதைகளில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு, அவர் இருத்தல் வாதம், கட்டவிழ்ப்பு வாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற செத்துமடிந்து போன இலக்கியப் போக்குகளை கையாளவில்லை. அவரது பன்முகப் படைப்பாளுமை, அவரது இக்கதைகளில் இயல்பாகவே வெளிப்படுகின்றது. கவிஞர் இக்பாலின் இக்கவிதைகளில் அவரது கவிதாலங்காரமான படைப்பாற்றலையும் படைப்பாளுமையையும், உணர்ச்சி உத்வேகத்தையும் நாம் தரிசிக்க முடிகின்றது. 
-நீர்வை பொன்னையன்