Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-07-02-097
ISBN : 978-955-1857-96-7
Author Name (எழுதியவர் பெயர்) : க.சின்னத்தம்பி க.சுவர்ணராஜா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 216
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): ஐந்தாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • உளவியலும் ஆசிரியரும்
  • கவனமும் புலக்காட்சியும்
  • ஞாபகம்
  • எண்ணக்கரு விருத்தி
  • தூண்டல் - துலங்கற் கற்றற் கொள்கைகள்
  • கள - அறிகை கற்றற் கொள்கைகள்
  • கற்றல் இடமாற்றம்
  • படைப்பாற்றல்
  • மொழி விருத்தி
  • கற்றலின் தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை
  • பல்வகை நுண்மதிகள்
  • மனவெழுச்சி நுண்மதிகள்
  • கலைச்சொற்கள்
  • துணை நூல்கள்
  • விடயச் சுட்டி
Full Description (முழுவிபரம்):

முன்னுரை
ஆசிரியர் தன் பணியைச் செவ்வனே மேற்கொள்வதற்கு உறு துணையாக அமைவது அவரது கல்வி உளவியலறிவாகும். கற்போனின் விருப்பு வெறுப்பு உள்ளடங்கிய ஆயத்தநிலை, கற்றற் செயல்களில் அவன் ஈடுபடுகின்ற தோரணையும் அச்செயல்களினூடாக அவன் பெறுகின்ற தகைமைகளும், கற்றலின்போது, எதிர்ப்படும் தடங்கல் கள் அல்லது இடர்பாடுகளை வெற்றிக்கொள்ளும் வழிமுறைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பற்றிய பூரண அறிவை ஆசிரியர் பெற்றிருத்தல் அவசியம். இவற்றோடு கூடிய திறன்களைப் பெற்றிட வும் உரிய மனப்பாங்கினை வளர்த்திடவும் கல்வி உளவியலறிவு அவருக்கு இன்றியமையாததாகும். 
பாடத்தைப் போதிக்க விளையும் ஆசிரியன் பாடப்பொருளை மட்டும் அறிருந்திருத்தல் போதாது: தன் மாணவனையும் அறிந்திருத் தல் வேண்டுமென்பர் அறிஞர். மாணவனை அறிந்திருத்தல் எனும் போது, அவனது அறிகைசார், எழுச்சிசார், உள - இயக்கஞ்சார் விருத்திகள் பற்றி ஆசிரியர் அக்கறை கொண்டிருக்க வேண்டியமை வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளையினதும், ஒவ்வொரு வகை விருத்திக்கும் விருத்திப் படிநிலைகளுக்கும் ஏற்பக் கற்றல் நிலைமைகளைக் கையாளும் திறனையும் ஆசிரியர் கொண்டி ருத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவனிடத்தே காணப்படும் மாற்றங்களினூடாகவே அவனிடத்தில் ஏற்படும் கற்றல் பற்றி நாம் அறிய முடிகிறது. ஆயினும், மாணவனிடத்தில் ஏற்படக்கூடிய நடத்தை இயல்புகள் யாவற்றையும் நாம் எமது புலனனுபவங்களினூடாக நேரடியாக அறிய முடியாது. பிள்ளையில் அவதானிக்கப்படக்கூடிய, பிற செயல்கள் அல்லது நடத்தை மாற்றங்களினூடாகவே அவனது அறிகை விருத்தி பற்றிய அனுமானங்களை மேற்கொள்கின்றோம்.
இந்த வகையில், எமது புலனனுபவங்கள் மூலம் நேரடியாக அறியப்பட முடியாத அறிகைத் தொழிற்பாடுகள் பற்றிய, உளவியலா ளர்களின் கருத்துக்களையும் விளக்கங்களையும் அறிவதன் மூலமே, ஓர் ஆசிரியர் தனது மாணாக்கருக்கு உதவ முடியும். அறிகைத் தொழிற்பாடுகள் பற்றிய விளக்கத்தினை ஆசிரியர் பெற்றுக்கொள் ளும் வகையிலும், இவ்விளக்கத்தினைக் கற்றல் - கற்பித்தற் செயற்பாட்டின்பால் பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கிலும் இந்நூல் உருவாக்கம் பெறுகின்றது. இதன் காரணமாகவே இந்நூலானது அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும் எனும் பெயரைத் தாங்கி வருகின்றது. 
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியப் பணியின் அனுபவமும்  à®‡à®°à¯à®ªà®¤à¯à®¤à¯ ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்விப் பணியின் அனுபவமும் பின்னணியாக அமைந் திருக்க நூலாசிரியரின் கல்விசார் ஆய்வுகள், ஆசிரியர்க்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பவற்றுக்கூடாக முகிழ்ந்த கருத்துக்கள் இந்நூலில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. 
இந்நூலின் பருமனை மட்டுப்படுத்தும் நோக்கில் மிக முக்கிய மான சில அறிகைத் தொழிற்பாடுகள் மட்டும் இங்கு  à®‡à®Ÿà®®à¯à®ªà¯†à®±à¯ வதுடன், பல கருத்துக்கள் சுருக்கமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், பிரதானமான உளவியற் கருத்துக்கள் விரிவான விளக்கம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களில், குறித்த உளவியலாளர்களின் ஆய்வு தொடர்பான, எளிமையான பரிசோதனைகளின் விபரங்களுக் கும் வியாக்கியானங்களுக்கும் இந்நூலில் இடமளிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள விடயங்களின் ஒழுங்கமைப்பானது, கல்வி உளவியலறிவைப் பெறுவதில் ஆசிரியரின் நிலைப்பாட்டை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கல்வி உளவியல் பற்றிய ஒரு பொதுவான விளக்கத்தினை வழங்கும் வகையில் முதலாவது இயல் சுருக்கமாக அமைகின்றது. கற்றலில் கவனமும் புலக்காட்சியும் மிக முக்கியமான பங்கினை வகிப்பதுடன், சிறந்த புலக்காட்சி பெறுதல் சிறந்த கற்றலின் அடிப் படையாக அமைவதனைக் கருத்திற்கொண்டு இவ்விடயம் இரண் டாம் இயலில் எடுத்தாளப்பட்டுள்ளது. கற்கப்பட்டவை கற்போனின் மனதில் நிலை நிறுத்தப்படுதலும், வேண்டும்போது அவை நினைவுப் படுத்தப்படுதலும் கல்வியின் ஒரு பிரதான நோக்கம் மட்டுமன்றி, நாம் எல்லோரும் விரும்பும் ஒரு நிலைப்பாடுமாகும். இது கற்பிப் போனும் அக்கறை கொள்ளும் ஒரு விடயமாகும். இவ்விடயம் பற்றிய கருத்துக்கள் இயல் மூன்றில் விரிவாக நோக்கப்படுகின்றன. 
கற்றலின் முதற்படி எண்ணக்கருக்கற்றலாகும். புலக்காட்சி பெறுதலும், பெறப்பட்ட புலக்காட்சிகள் ஞாபகத்திலிருத்தலும் எண் ணக்கரு உருவாக்கத்தின் பிரதான படிகளாகும். இவற்றினைக் கொண்டு எண்ணக்கரு உருவாக்கம்  à®ªà®±à¯à®±à®¿ அடுத்த இயல் விரிவடை கின்றது. 
கற்றல் என்பதனாற் கருதப்படுவது யாது? அது எவ்வாறு நிகழ்கின்றது. கற்றலுடன் தொடர்புடைய காரணிகள் யாவை? வகுப் பறைக் கற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் யாவை? இவை போன்ற இன்னோரன்ன வினாக்களுக்கு விடைகாணும் தேவை ஆசிரியருக்குண்டு. இதன் பொருட்டு, பல்வேறு உளவியலாளர்க ளினதும் கற்றல் பற்றிய கருத்துக்கள், கோட்பாடுகள் என்பன அடுத்து வரும் இரண்டு இயல்களையும் அலங்கரிக்கின்றன. தூண்டல் - துலங்கல் வகையிலான கற்றலுடன் தொடர்புபட்ட கொள்கைகள் இயல் ஐந்திலும், கள- அறிகைக் கற்றற் கொள்கைகள் இயல் ஆறிலும் இடம்பெறுகின்றன. 
கற்கப்படும் எவ்விடயமும் பின்னால் வரும் நிலைமைகளில் பயன்படுத்தப்படக்கூடியனவாக அமைய வேண்டுமென்பதே கல்விச் செயற்பாடுகளின் ஒரு பிரதான நோக்கமாகும். எனவே, குறித்த ஒரு வேளையில் ஏற்படுத்தப்படும் கற்றலானது எதிர்காலத் தேவைகட் கும் பிரயோகிக்கப்படக்கூடியவாறு அமைய வேண்டும். இந்த அம்சத்துடன் தொடர்புடைய கற்றல் இடமாற்றம் பற்றிய கருத்துக்கள் இறுதி இயலில் இடம்பெறுகின்றன. 
ஆங்கில மொழிமூலமான வெளியீடுகளுடாக இத்துறைசார் அறிவினை மேம்படுத்த விளைவோரின் நலன்கருதி, இந்நூலில் இடம்பெறும் பிரதான உளவியற் பதங்களின் ஆங்கில வடிவத்தினை உள்ளடக்கிய கலைச் சொல் தொகுதியும், துணை நூற்பட்டியலும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் முக்கியமான கருத்துக்கள் அல்லது விடயங்கள் அமைந்துள்ள இடங்களை நூலிற் சுலபமாகக் கண்டறிய வழி செய்யும் வகையில் விடயச்சுட்டி பின்னி ணைப்பில் இடம்பெறுகின்றது. 
இந்நூலின் ஆக்கத்தின்பால் பலரின் உதவிகளும் ஒத்தாசை களும் எனக்குக்கிட்டின. அவர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவிப் பது எனது கடமைமட்டுமன்று, எனக்கு உளத்திருப்தியை அளிக்கும் ஒரு செயலுமாகும். 
முதற்கண், உளவியற் துறையிலே என்னை நாட்டங்கொள்ள வைத்த எனது நல்லாசான், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வி உளவியற் பேராசிரியர் ச.முத்துலிங்கம் அவர்கள் என் சிறப்பான நன்றிக்குரியவர். 
அடுத்து, இவ்வாறான ஒரு நூலை ஆக்குவது தொடர்பாக எனக்கு உற்சாகமும் ஆலோசனைகளும் வழங்கிய எனது துறைத் தலைவர் பேராசிரியர் வ.ஆறுமுகம், சகபாடியான கலாநிதி சபா.ஜெயராசா ஆகிய இருவருக்கும் எனது அன்புடன் கூடிய நன்றிகள்.
நூலின் உருவாக்கத்தின்போது, கருத்துப் பரிமாறல்களுடன் நின்றுவிடாது, கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிட்டு வேண்டிய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தந்துதவிய எனது சகபாடிகளான செல்வி.சுசீலா அருளானந்தம், திரு.தம்பிஐயா கலாமணி ஆகிய இருவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்.
கருத்துடன் அழகுபடுத்தும்பாங்கில் நூலின் முகப்புப்படத் தினை வடிவமைத்துதவிய நண்பன் ரமணி, ஒப்புநோக்கலிற் பொறுமையுடனும் சிரத்தையுடனும் ஒத்தாசைபுரிந்த அன்பர்கள், அழகுற அச்சிட்டு நூல் வடிவந் தந்த பாரதி பதிப்பகத்தினர் குறிப்பாக நண்பன் சங்கர் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
மேலே குறிப்பிட்டவர்கள் தவிர, எனது குடும்ப உறுப்பினர் உட்பட மேலும் பலரின் அரியசேவைகள் எனக்குக் கிட்டின. அவர் கள் ஒவ்வொருவரையும் இங்கு தனித்தனி குறிப்பிட முடியாவிடினும் அவர்களின் உதவிகள் என் நெஞ்சில் நிலைத்துவிட்டன. 
க.சின்னத்தம்பி