Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : கலை இலக்கியக் களஞ்சியம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-03-01-090
ISBN : 978-955-1857-89-9
EPABNo : EPAB/02/18839
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 134
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அறிவுக்கும் அறியாமைக்கும் உள்ள முரண்பாடே கற்றலை முன்னெடுத்துச் செல்வதற்குரிய விசையை உருவாக்குகின்றது. 
கற்றல் முயற்சிவயமானது. முயன்றுதான் கற்கவேண்டும் - கற்றல் வளர்ந்து செல்லும் பொழுது எளிமையிலிருந்து சிக்கலையும் கடினத்தையும் நோக்கி நகர வேண்டிவரும். 
கற்றலிலே சோம்பல் தோன்றும் பொழுது சிக்கலானவை கடின மானவையாகத் தோன்றும். 
அறிவைத் தேடும் உற்சாகம் மிகும் பொழுது சிக்கலானவை உற்சாகத்தைத் தூண்டும் அறைகூவலாக மாற்றமடையும்.
அறிவைத் தேடல் என்பது எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கங்களுடன் இணைந்தது. 
கலை இலக்கிய எண்ணக்கருக்கள் (Concepts) தொடர்பான விளக்கநிலை நூல் ஒன்றின் தேவை உணர்த்தப்பட்ட நிலையில் இந்நூலாக்கம் தோற்றம் பெற்றுள்ளது.
இதனை வெளியிட்டுவரும் சேமமடு பதிப்பகம், வளம் பெற வாழ்த்துக்கள்.

சபா.ஜெயராசா

Full Description (முழுவிபரம்):

சமகாலத்தில் கலைஇலக்கியம் தொடர்பான ஆய்வுகளின் பிரவாகம் புதிய புதிய கலைச் சொற்களினதும் கோட்பாடுகளினதும் ஆக்கங்களோடு இணைந்து எழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது. அவை பற்றிய அடிப்படையான அறிவு செறிவான விமரிசனங்களை முன்னெடுப்பதற்குரிய முன்நிபந்தனையாகின்றது. தெளிவான எண்ணக்கருக்களின் அடிப்படையிலேதான் கனங்காத்திரமான கலை இலக்கிய விமரிசனங்களை முன்னெடுக்க முடியும். 
பல்வேறுபட்ட மொழிகளும் பண்பாடுகளும் நெருங்கி வருகின்ற இற்றைக்காலத்தில் ஒப்பிலக்கியம், இலக்கிய விமரிசனம், மொழிபெயர்ப்பு முதலான புதிய துறைகள் தமிழில் விரிந்தும் பரந்தும் பெருகி வருகின்றன. பிறமொழி இலக்கியத்தின் தாக்கமும் செல்வாக்கும் இற்றைநாள் தமிழ் நூல்களில் காணக்கிடைக்கின்றன. வளர்ந்துவரும் இவற்றின் தேவைக்கேற்ப தமிழ் மொழியின் இலக்கி யச் சொல் வளம் விரிவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 'கலை இலக்கியச் சொற்களஞ்சியம்' ஆக்கமாகின்றது.
நவீன கலை இலக்கியத்தில் பயின்றுவரும் பெருவாரியான கலைச்சொற்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் தமிழில் வெளியிடும் முயற்சி பெருமளவு வளரவில்லை. இருப்பினும் பேராசிரியர் வை.சச்சிதானந்தம் 'மேலை இலக்கியச் சொல்லகராதி' எனும் நூலை 1983இல் தமிழில் வெளியிட்டார். இதற்குப் பின்னர் தற்போது சபா.ஜெயராசா 'கலை இலக்கியக் களஞ்சியம்' எனும் நூலைத் தருகின்றார்.
தமிழ்மொழியில் இவ்வாறான நூலாக்கம் தேக்கத்திலிருந்து மீண்டெழும் அறிகை விசையைத் தரவல்லது. கலைஇலக்கிய மாணவருக்கும் விமரிசகருக்கும் உடன் உதவும் உசாத்துணை நூலாகவும் இந்த ஆக்கம் அமைக்கப்பட்டுள்ளது. கலைச்சொற்களின் விளக்கத்தின் பொருட்டு ஆங்கில எண்ணக்கருக்களும் இணையாகத் தரப்பட்டுள்ளமை நூலின் பயனுடைமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 
புத்தம்புதிய கலைகளின் அறிதலும் புரிதலும் தமிழியலின் வளர்ச்சியை மேலும் முன்னெடுக்க வல்லன. புதியவற்றை அறித லோடு பழையவற்றை நிலைநிறுத்துதலும் கலை இலக்கிய வளர்ச் சிக்கு அடிப்படையானவை. இந்நூலில் தொல்சீர் எண்ணக்கருக் களும் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க பிறிதொரு பரிமாணமாகின்றது. 
கலை இலக்கியங்களில் நிகழ்ந்துவரும் புதிய கருத்தாடல்களை புரிந்து கொள்வதற்குரிய ஆற்றுப்படுத்தல் ஆக்கமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. பொருத்தமான எடுத்துக்காட்டுக்கள் விளக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. 
தமிழில் இவ்வாறான பயனுள்ள ஆக்கங்களை முன்னெடுத்து வரும் சேமமடு பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். வளர்ந்து வரும் வாசிப்புப் பண்பாட்டின் தேவையை அறிந்து அவர்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் காலத்தின் தேவையை நிறைவேற்றித்தரும் பதிப்பு முயற்சியாகின்றது. 
தமிழியலின் வளத்துக்கு செறிவுதரும் இந்நூலாக்கம் வாசகரின் வாசிப்பு மட்டத்தை உயர்ந்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்வதற்கு உதவும் என்பது எமது நம்பிக்கை. 
தெ.மதுசூதனன்