Book Type (புத்தக வகை) : தத்துவம்
Title (தலைப்பு) : மாயை பற்றிய கருத்தும் சங்கரர் வேதாந்த காட்சியும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN-2012-12-02-116
ISBN : 97-895-568-501-54
EPABNo : EPAB/02/18853
Author Name (எழுதியவர் பெயர்) : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

அணிந்துரை
முகவுரை
பதிப்புரை
  • 1. அறிமுகம்
  • 2. வேதாந்த மாயை
  • 3. சைவசித்தாந்த மாயை
  • 4. வேதாந்தத்தில் காட்சி
  • 5. மாயை காட்சி பற்றிய விமர்சனங்கள்
  • 6. முடிவுரை
பின்னிணைப்பு
உசாத்துணை நூல்கள் l
உசாத்துணை நூல்கள் ll
Full Description (முழுவிபரம்):

இந்து தத்துவ சிந்தனை மரபில் உண்மையைக் கண்டறியும் முயற்சி பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. வள்ளுவப் பெருந்தகையின்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (குறள் 355)
என்ற வாக்கிற்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களாகிய பல்கலைக் கழகங்களில் இத்துறை சார்ந்த ஆய்வு முயற்சிகள் பல்வேறு கோணங்களிலும் பரிமாணங்களிலும் நடந்தேறி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். அவ்வகையில் பேராசிரியர் நா.ஞானகுமாரனின் மாயை பற்றியதும் வேதாந்தம் பற்றியதுமான இந்நூல் வெளி வருவதையிட்டு முதற்கண் எனது பாராட்டுக்களையும் நல்லாசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வேதாந்த மாயை தொடர்பான  à®šà®¿à®² மயக்கங்களை நீக்கி அது பற்றிய அறிவையும் வேதாந்தக் காட்சி தொடர்பான விளக்கத்தையும் ஆய்வு நோக்கிலும் ஏனைய கோட்பாடுகளோடு ஒப்பிட்டுத் தெளிவுபடுத்தும் வகையிலும் இந்நூல் அமைவதை அவதானிக்க முடிகின்றது. இந்து தத்துவச் சிந்தனைகளின் மூலமாகிய வேத உபநிடதங்கள் தரும் சிந்தனைகள் காலம்தோறும் பல்வேறு சிந்தனை மரபுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஆதார சுருதியாக அமைந்துள்ளன. தத்துவ ஞானிகள் தாம் பெற்றுக்கொண்ட அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிந்தனைத் திறனுக்கும் ஏற்ப உண்மைப் பொருள் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைத் தர முயன்றாலும் அவை அனைத்தும் வேதம் போற்றிய சத்தியமான உண்மைப் பொருள் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைத் தர முயன்றாலும் அவை அனைத்தும் வேதம் போற்றிய சத்தியமான உண்மைப் பொருளை அறியும் முயற்சியாகவே அமைகின்றன. 'ஏகம் சத் விப்ரா: பகுதா வதந்தி' என்ற இருக்கு வேத வாக்கு 'சத்தியமான உண்மைப் பொருள் ஒன்றே; அதனை அறிஞர் பலவாறாகக் கூறுவர்' எனக் குறிப்பிடுவதற் கேற்ப இந்து தத்துவ துறையிலும் வேதாந்த மரபிலும் பல்வேறு தரிசனங்களும் கோட்பாடுகளும் உதயமாயின. இத்தகைய முயற்சிகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியுமாகவே அறிஞர் பலர் காலந்தோறும் பல்வேறு நூல்களைத் தெளிவு பிறப்பிக்கும் நோக்கில் எழுதி வெளியிட்டு அறிவுலகத்திற்குப் பெரும் பணியாற்றி வருகின்றனர். இவ்வகையில் 'அத்வைத தத்துவம்' பற்றிய அரிய நூலொன்றை சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவ பேராசிரியராக விளங்கிய டாக்டர் டி.எம்.பி. மகாதேவன் 1938ஆம் ஆண்டு வெளியிட்டமை குறிப்பிடற்பாலது.  à®…துபோன்று வேதாந்தத்தை தெளிவுற அறிவதற்கு எமக்கு உணர்வு பூர்வமாக வழிகாட்டி நிற்பது சுவாமி விவேகானந்தரது 'வேதாந்தச் சொற்பொழிவுகள்' என்ற நூலாகும். சுவாமிகள் அந்நூலில்  à®•à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®®à¯ சில கருத்துக்கள் இந்நூல் பற்றிய அணிந்துரைக்கு மிகப் பொருத்தமாக அமைகின்றது. வேதாந்தம் பற்றி அவர் குறிப்பிடுமிடத்து, 'இதுதான் அத்வைதியின் நிலையாகும். அனைவரிடமும் கருணையுடன் இருங்கள், உலகில் அனைவரும் அறிவுபூர்வமாக மட்டுமல்லாமல் அனுபூதியிலும் அத்வைதிகளாக இருக்க முடியுமானால் உலகம் மிகவும் மேம்பாடுடை யதாக இருக்கும். ஆனால் அது இயலாது என்றால் அதற்கடுத்த நல்ல காரியத்தை செய்வோம். கல்வியறிவு அற்றவர்களின் கைகளை பிடித்து அவர்களைப் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வோம். இந்தியாவில் நாம் பின்பற்றும் மத நெறிமுறைகள் அனைத்தும் ஆன்மிகத் துறையில் பல்வேறு படிகளாக இருக்கின்றன என்பதையும் அவை ஒவ்வொன்றும் உயர்ந்த படிகளுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன என்பதையும் நாம் உணர்வோமாக. நாம் செல்வது தீமையிலிருந்து நன்மைக்கல்ல் நன்மையிலிருந்து மேலான நன்மைக்கு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.'
என்ற அவரது கருத்து இக்காலத்திற்கு நன்கு பொருந்துவதாகும். மேலும் சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் நிகழ்த்திய 'வேதாந்தமும் அதன் சகல அம்சங்களும்' என்ற சொற்பொழிவில் ஒரு முக்கிய கருத்தினை முன்வைத்துள்ளனர்.
'... ஆனால் இன்று வேண்டப்படுவது எது? துவைதியானாலும் விஷிட்டாத்வைதியானாலும் அத்வைதியானாலும் இந்த உபநிடதங் களின் அடிப்படையில் விளங்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வல்ல தெளிவான விளக்கமே இன்றைய தேவை. இதை உலகின் முன்வைக்க வேண்டும். வெளிநாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது தேவை எனச் சுவாமிகள் உறுதிபடக் கூறியதற்கமைவாக வேதாந்தத்தின் முக்கிய அம்சங்களாகிய  à®®à®¾à®¯à¯ˆ மற்றும் காட்சி பற்றிய விடயங்கள் இந்நூலின் முக்கிய ஆய்வுப் பொருள்களாக அமைகின்றன. இவற்றினைத் தெளிவுபடுத்த நூலாசிரியர் முயன்றுள்ளார். 
மாயையின் நிலை வரையறை செய்ய முடியாதது; மாயை பற்றிய பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. சாதாரண மனிதன் மாயையை உண்மையான ஒன்றெனக் கருதுகின்றான். வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன் அதைப் பொய்யானது எனக் கொள்கிறான். தனது அறிவாற்றலை நம்பும் தத்துவவாதி அதை உண்மை எனவோ பொய் எனவோ கொள்ளான். மாயையை நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் அதை இல்லையென்று கூறுதல் பொருந்தாது என டாக்டர் டி.எம்.பி.மகாதேவன் குறிப்பிடுகின்றார். அதனுடைய விளைவுகளிலிருந்து அதை தெரிந்து கொள்கிறோம். இவ்விளைவுகளின் நிலைகளை நம்மால் அறிய முடிவதில்லை. எனவே அவைகளைப் பற்றி எதையும் கூறுவதற்கில்லை எந்த உலகப் பொருள்களுக்கும் மூல காரணமாக விளங்கும் மாயை பற்றி எதையும் கூற முடியாதவர்களாகத் தானிருக்கிறோம். எனவே அதன் பிறப்பை பற்றிக் கால அளவில் எதையும் கூற முடியாதவர்களாயிருக்கிறோம். எனவே அதை தொடக்கமற்றதொன் றாகவே கருதுகின்றோம். இந்த மாயையின் தொடக்கத்தைப் பற்றி நாம் கூறுவதாயிருந்தால் தொடர்ந்த பல பருமைக் காரணங்களைக் கூற வேண்டி வருகின்றது. இந்த மாயை தொடக்கமற்றது; அறியவோ அளக்கவோ முடியாதது; இப்படியிருந்த போதிலும் அது வாழும் தன்மையது; பல சிக்கல்களை நாம் நீக்க வேண்டுமானால் மாயையை நாம் இப்படியிருந்த போதிலும் அது வாழும் தன்மையது; பல சிக்கல்களை நாம் நீக்க வேண்டுமானால் மாயையை நாம் இப்படித்தான் கொண்டாக வேண்டும். 
'இந்த மாயையின் இருப்பிடமும் உட்பொருளும் நமது ஆன்மாவே' என தமது அத்துவித வேதாந்த நூலில் டாக்டர்.டி. எம்.பி.மகாதேவன் விளக்கம் தருகிறார்.
மேற்குறிப்பிட்ட கருத்துக்களிலிருந்து வேதாந்த மாயை பற்றிய ஆய்வு எத்தகைய சிக்கலானது என்பது தெளிவாகின்றது. இத் தத்துவார்த்த விடயத்தை நூலாசிரியர் பேராசிரியர் ஞானகுமாரன் தனது ஆய்வுத் துறை சார்ந்த அனுபவத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்த முயன்றுள் ளமை பாராட்டிற்குரியது. 
நூலாசிரியர் மெய்யியற் துறையில் சிறப்புப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட புலமையாளர். பல்வேறு ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த அனுபவமிக்கவர். வேதாந்தம், சைவசித்தாந்தம் பற்றிய பல நூல்களை எழுதி வெளியிட்ட அனுபவமும் இவருக்குண்டு. அண்மையில் அவரது 'சைவ சித்தாந்த தெளிவு' என்ற நூல் வெளிவந்தமை குறிப்பிடற்பாலது. 
அதனைத் தொடர்ந்து வேதாந்தம் சார்ந்த விடயங்களுக்குத் தெளிவு ஏற்படுத்தும் நூலாக இதனை வெளியிடுகின்றார். நான் 1991ஃ92 ஆம் ஆண்டு சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் உயர் நிலை ஆய்வுக்கான புலமைப் பரிசில் பெற்றுச்சென்று வந்ததையடுத்து பேராசிரியர் ஞானகுமாரன் அப்பல்கலைக்கழகம் சென்று தமது அனுபவத்தை விரிவுபடுத்தியவர். மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் கீழைத்தேய மெய்யியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர். வருகை விரிவுரையாளராகப் பணி யாற்றிய அனுபவம் மிக்கவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் நீண்டகாலம் கற்பித்தலும் ஆய்விலும் பெற்ற அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடே இந்நூலின் உருவாக்கத்திற்கு உதவியுள்ளது. 
இந்நூல் ஆறு இயல்புகளை கொண்டது. வேதாந்த சைவசித்தாந்த நோக்கில் மாயை பற்றிய தெளிவு நூலின் முக்கிய அம்சமாகும். அடுத்து வேதாந்தத்தில்  à®•à®¾à®Ÿà¯à®šà®¿ பற்றி ஆராய்கின்றார். அதனையடுத்து மாயை காட்சி பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கின்றார். வேதாந்தத்தினைப் புரிந்துகொள்வதற்கு மாயை பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்ளுதல் பெரிதும் பயனுடையதாக அமையும் என்ற நூலாசிரியரின் கருத்திற்கமைய இந்நூல் உருவாகியுள்ளது. அத்வைத கோட்பாட்டின் முக்கிய அம்சங்களை நாம் தெளிவுபடுத்த இந்நூல் உதவுகின்றது.
பேராசிரியர் ஞானகுமாரனின் இந்நூலினை இந்து தத்துவ துறையில் ஈடுபாடு கொண்ட அனைவரும் மற்றும் ஆய்வாளர்களும் ஆர்வங் கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் உவந்து வரவேற்பர் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் ஞானகுமாரன் மேன்மேலும் மெய்யியல் துறை சார்ந்த தேவையான பல நூல்களை எதிர்காலத்தில் தொடர்ந்து வெளியிட்டுத் தமது ஆய்வுப் பணியைச் சிறப்பாக முன்னெடுக்க நல்ல சுகமும் நீண்ட ஆயுளும் பெற்றுத் திகழவும் வளமுடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனது திருவருள் துணை நிற்பதாகுக என வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மெய்யியல் துறை சார்ந்த அவரது நீண்ட கால ஆய்வின் பயனாக கிடைத்த பல சிந்தனைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடற்பாலது. 
ப.கோபாலகிருஷ்ணஐயர்
பேராசிரியர், இலக்கிய கலாநிதி
வாழ்நாள் பேராசிரியர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்