Book Type (புத்தக வகை) : பொருளியல்
Title (தலைப்பு) : பொருளாதார அபிவிருத்தி : சிங்கப்பூர் இலங்கை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2013-05-01-123
ISBN : 97-895-568-502-22
EPABNo : EPAB/2/19279
Author Name (எழுதியவர் பெயர்) : செல்வரத்தினம் சந்திரசேகரம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 216
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    அரசியல் சுதந்திரமும் பொருளாதார     அபிவிருத்தியும்    01
2.    பொருளாதார அபிவிருத்தியில் சிங்கப்பூரும்     இலங்கையும்: இலங்கை பற்றிய             லீ குவான் யுவின் குறிப்புக்கள்    49
3.    இன ஒற்றுமைக்கு சிங்கப்பூரிடம் இலங்கை         கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்            67
4.    சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தியும்     அவற்றின் மூலங்களும்    89
5.    நல்லாட்சியும் பொருளாதார  அபிவிருத்தியும்;    109
6.    சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவமும்     பொருளாதார அபிவிருத்தியும் : லீ குவான் யூ பற்றிய              ஒரு பார்வை.    125
7.    சமூக நலன்புரிக் கொள்கைகளும் அபிவிருத்தியும்    150

Full Description (முழுவிபரம்):
அணிந்துரை
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்வரத்தினம் சந்திரசேகரம் அவர்களினால் எழுதப்பட்ட ‘பொருளாதார அபிவிருத்தி: சிங்கப்பூரும் இலங்கையும் அரசியற் பொருளாதார ஒப்பியல் நோக்கு” எனும் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 
 
கலாநிதி சந்திரசேகரம் எமது பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி 1999 இல் உதவி விரிவுரையாளராக இணைந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டம் பெற்றவர் பின்னர் 2004 இல் மக்கள் சீனக்குடியரசிற்கு புலமைப்பரிசில் பெற்று சென்று அங்குள்ள புகழ்பெற்ற குவாசோங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (HUST)  2008 இல் ‘இலங்கையில் பொருளதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்குமான சமூக அரசியல் காரணிகள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் அவரது இந்த ஆய்வுக்கட்டுரை ஜேர்மனியில் உள்ள புகழ்பெற்ற Lambert கல்வி வெளியீட்டு சமூகத்தினால் நூல் வடிவம் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
கலாநிதி சந்திரசேகரத்தின் அரசியல் பொருளியல் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பல உலகின் புகழ்பெற்ற ஆய்வுச்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளின் சர்வதேச ஆய்வரங்குகளில் அவர் பல ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளார் இலங்கையில் தேசிய, பிராந்திய கருத்தரங்குகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகளை செய்துள்ளார்  இதுவரை  பொருளாதார அபிவிருத்தி: சீனா-இந்தியா ஓர் ஒப்பீட்டு ஆய்வு உட்பட்ட ஆறிற்கு மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைத்துவப் பார்வையில் வெளியிட்டுள்ளார் இவ்வாறான புலமைத்துவ வெளியீடுகள் மூலம் வளர்ந்து வரும் துடிப்புள்ள ஆய்வாளர் என்ற முத்திரையைப் பெற்றுள்ளார்.
 
இத்தகைய புலமைத்துவ வெளியீடுகளில் ஒன்றாக தற்போது உங்கள் கைகளில் தவழும் ‘பொருளதார அபிவிருத்தி: சிங்கப்பூரும் இலங்கையும் அரசியற் பொருளதார ஒப்பியல் நோக்கு” என்ற நூல் அமைந்துள்ளது. இந்த நூல் சிங்கபூரையும் இலங்கையையும் மையப்படுத்தி பொருளாதார அபிவிருத்தி, அரசியல் அபிவிருத்தி தொடர்பாக புலமைத்துவ அடிப்படையிலான ஒப்பியல் ஆய்வாக வெளிவந்துள்ளது. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் கொள்கை வகுப்பாளர்களுக்கு பல பிரதான விடயங்களைத் துணிவுடன் எடுத்துக் கூறுகின்றது. 1962 இல் இலங்கையின் தலாவருமானத்தில் US$  300 ஐ அதிகமாக கொண்டிருத்த சிங்கபூர் 2012 இல் US$ 40350 ஐ அதிகமாக 134 மடங்கு அதிகமாகப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. இவற்றுக்கான காரணங்கள் யாவை என்று புலமைசார் அடிப்படையில் ஆய்வு செய்கின்றது. ஒரு மென்மையான எதேச்சதிகார ஆட்சி ஊடாக சிங்கப்பூர் எழுச்சி கண்டமை பற்றியும், பெயரளவில் ஜனநாயகத்தைக் கொண்டிருந்த இலங்கை சமூக நலன் பேணுதல் நடவடிக்கை மூலம் பிரித்தானிய ஆட்சியில் திரட்டப்பட்டிருந்த மூலதன திரட்சியை எவ்வாறு வீணாக்கியது என்றும் எடுத்துக்காட்டுகிறது. குதிரை (வளர்ச்சி) வண்டியை (சமூக செலவீடு) இழுக்க வேண்டுமே ஒழிய வண்டி குதிரையை இழுக்க முடியாது என்ற உதாரணங்களோடு இவற்றை ஆசிரியர் விளக்குகின்றார். 
 
இலங்கையும் சிங்கபூரும் பன்மைச் சமூகத்தைக் கொண்டிருந்த போதும் சிங்கபூர் லீ-குவான் - யூவின் அரசியல் பொருளதார தலைமைத்துவத்தின் மூலம் எவ்வாறு ஒரு வகைச் சர்வதிகார ஆட்சியை மேற்கொண்டு பொருளதார அரசியல் வளர்ச்சியை அடைந்தது பற்றி ஆசிரியர் சிலாகித்துப் பேசுகின்றார். ஆனால் இலங்கையின் அரசியல் தலைவர்களோ கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பாழாக்கி சமூக நலன் பேணும் பொருளதாரக் கொள்கையை பின்பற்றித் தங்கள் அரசியல் பலத்தைத் தக்கவைப்பதில் கருத்தூன்றினார்களே தவிர, நாட்டின் ஒட்டு மொத்த நன்மை பற்றி சிந்தியாது செயற்பட்டார்கள் என்றும், அரச வருமனத்தைத் தம் சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள் எனவும் அத்தகைய நடவடிக்கைகள் நாட்டை அரசியல் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை நோக்கிக்கொண்டு செல்வதாகவும் குறிப்பிடுகின்றார். இந்தோனேசியாவில் சுஹாட்டோ அரசின் வீழ்ச்சியைப் போல இலங்கை அரசின் செயற்படுகளும் அமைந்துவிடுமோ என்று ஆசிரியர் எண்ணுகின்றார்.
 
 
சிங்கபூரில் லீ-குவான் யூவின் தலைமைத்துவம் எவ்வாறு அந்நாட்டைப் பொருளாதார அரசியல் அபிவிருத்தி செய்ததோ அதை ஒத்த தலைமைத்துவம் ஒன்று இலங்கைக்குத் தேவை என்றும் அத்தகைய தலைமைத்துவத்தினால் இலங்கை பொருளாதார அரசியல் உறுதிப்பாட்டை அடையும் என்பது ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது. முதலில் பொருளாதார அபிவிருத்தி அதன் பின்னரே சமூகநல அபிவிருத்தி என்பது ஆசிரியரால் வற்புறுத்தப்படுகின்றது. லீ-குவான்-யூவின் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இங்கு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன.
 
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமூக நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தியைத் தடை செய்யவும், பின்னடைவைச் செய்யும் வகையிலும் ஓரினச் சார்புத் தன்மை அடிப்படையிலும், இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் அந்நிய சமூகத்துக்கு நாட்டின் இறைமையை விற்கும் வகையிலும் அமைந்திருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச ஆதரவுக் குடியேற்றத்திட்டங்கள் இன முரண்பாட்டை மேலும் மோசமடையச் செய்யும் பண்பு கொண்டதாக அமைந்திருக்கின்றன என்பது ஆசிரியரின் கருத்தாகும். அரசின்; வருமானம் அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளைத் தக்கவைக்கும் வகையில் சுயநலநோக்கிற்காகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புச் செலவுகளில் அதிகரிப்பு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்பதும் அவரது அபிப்பிராயமாகும். இது சமூக நலன்புரிச் செலவிலிருந்து பாதுகாப்புச் செலவு நோக்கி அமைகின்றது. 
 
ஒரு நாட்டின் சமூக, மற்றும் அரசியல் காரணிகள் அந்நாட்டின் அபிவிருத்தியில் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் எவ்வாறு இந்தப் பொருளாதாரமில்லாத சமூக, அரசியல் காரணிகளை அபிவிருத்தி சார்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டது என்பதை அறிவதன் மூலமாக இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கு சில உண்மைகளைத் தெளிவுபடுத்த இந்த ஆய்வு முனைகின்றது. மக்கள் சீனக் குடியரசில் கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபோது பெற்றுக்கொண்ட அனுபவங்களும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ-குவான்-யூ பொதுக் கொள்கை நிறுவனத்தில் குறுங்கால பயிற்சியை மேற்கொண்ட போதும் பெற்ற அனுபவங்களும், பொருளாதார அபிவிருத்தியை பொறுத்து இந்த அரசுகள் மீது ஆசிரியர் கொண்டுள்ள உயர்ந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகின்றது. அதேசமயம் இந்தியாவின் பலவீனமான நிலைமையும் சுட்டிக் காட்டப்படுகின்றது. 
 
கலாநிதி சந்திரசேகரம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மென்மையான எதேச்சதிகார ஆட்சியை ஏற்படுத்தி, சமூக, நல சேவைகளை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை முதன்மைப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அபிவிருத்தியியல் அரசாக (Social Developmental State) மாற்ற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவராகக் காணப்படுகின்றார். இது அந்த நாட்டு மக்களின் தூரநேக்குடனான பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என நம்புகின்றார்.
 
சிங்கப்பூருக்கு லீ-குவான் யூவினால் வழங்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் தலைமைத்துவம் ஒரு அத்தியாயத்தில் சிறப்பாக எடுத்துக்காட்டப்படுகிறது. பிளேட்டோ குறிப்பிடுவது போல அரசியல் தலைவர் a Philosopher king ஆக இருக்கு வேண்டுமென்பது குறிப்பிட்டு சொல்லப்படுகின்றது. தலைவன் தன்னலம் கருதாது நாட்டு மக்கள் அனைவரினதும் பொதுநலனை முதன்மைப்படுத்திச் செயற்படும் தன்மையை இது குறிக்கின்றது. மேற்குலகின் அனுபவங்களை அப்படியே பிரதிபண்ணாது நமது நாட்டு நிலைமைக்கு ஏற்ப அவற்றை மாற்றி எமது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் சிங்கப்பூர் உதாரணங்கள் மூலம் விளக்குகின்றார்.
 
இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு மேற்படிப்புக்குச் சென்ற புத்திஜீவிகள் பிரித்தானியா அனுபவத்தை இலங்கையில் ஏற்படுத்த முனைந்ததன் விளைவே சமூக நல நடவடிக்கைகள் என்று எடுத்துக் காட்டுகின்றார். குடியேற்ற நாடுகளில் இருந்து பிரித்தானியா  பெற்றுக்கொண்ட மூலதனம், அந்த நாட்டுக்குத் தொழிற்கட்சி ஆட்சியில் சமூக நல நடவடிக்கைகளுக்கு கைகொடுத்தது. ஆனால் இலங்கைக்கு அவ்வாறு பெரியளவில் மூலதனத் திரட்சி இருக்கவில்லை என்றும் இலங்கையில் பெருந்தோட்ட வருமானம் மூலமாகக் கிடைத்த மூலதனத் திரட்சி பொருளாதார வளர்ச்சியை நோக்காக கொண்ட அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டுமேயொழிய சமூக நலனோம்பும் திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கக்கூடாது என்பதும் ஆசிரியரின் கருத்தாக அமைகின்றது.
 
இரு நாடுகளின் பொருளாதார, அரசியல் அபிவிருத்தி பற்றி ஆழமாக ஆராய்ந்த ஆசிரியர்  சில முக்கியமான ஆலோசனைகளை தீர்வுகளை நாட்டின் ஒட்டுமொத்த நன்மை கருதி முன்வைக்கின்றார். ஆட்சித் தலைமைகளுக்கு சாமரம் வீசும் ஆலோசகர;கள், அறிவு ஜீவிகள் இவற்றை ஏற்படுதுவதென்பது சாத்தியமாகாது. உண்மையை அவர;கள் எடுத்துரைத்தால்  அவர்கள் அனுபவிக்கும் அரசியல் இலாபங்களை இழக்க நேரிடும்.
 
ஆசிரியரால் முன்வைக்கப்படும் தீர்வுகள்,
 
1. ஒரு கட்சி ஆட்சி முறை குறைந்த 25 வருடங்களாவது இருத்தல் வேண்டும்.
2. ஒரு கட்சி தலைமை தாங்கும் அரசியல் முறையிலிருந்து குடும்ப அரசியல் முற்றாக ஒழிக்கப்படுதல் வேண்டும்.
3. பொதுவான மொழிக் கொள்கை ஆங்கில மொழியை அரசகரும மொழியாக மாற்றல் வேண்டும்.
4. சுயாதீனமான பொலிஸ், நீதி பொதுச் சேவை,  ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுக்களை அமைத்து அவற்றை முழுமூச்சுடன் தொழிற்படச் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தல்.
5. அரசியலில் இருந்து மதத்தை முற்றாக நீக்குதல்.
6. அரசை சமூக நல சேவை அரசாக அல்லாமல் அபிவிருத்தி அரசாக உருவாக்குதல்.
7. அனைத்துச் சமூகங்களும் சம உரிமையுடன் வழங்கக்கூடிய நல்லாட்சியை உருவாக்குதல்
 
இவை அனைத்தும் லீ குவான் யூ வின் தலைமைத்துவம் காரணமாகச் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட உன்னத மாற்றங்களாகும். ஆனால் இலங்கையில் இவற்றை நடைமுறைப்படுத்தும் சூழல் ஏற்படுமா? அத்தகைய தலைமைத்துவத்தைக் கொடுக்கும் வல்லமை கொண்ட தூரநோக்குடைய தலைவர் வருவாரா? எல்லாவற்றிற்கும் தென்னாசிய புவிசார் அரசியலில் ஏற்படும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் தான் பதிலைக் கூறும்.
 
சிங்கள, பௌத்த பேரினவாதத்தில் மூழ்கியிருக்கும் பெரும்பாலான சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கலாநிதி சந்திரசேகரம் முன்வைக்கும் தீர்வுகள் கசப்பானவையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நல்லாட்சி, ஊழல் அற்ற அரசு குடும்ப ஆட்சி ஒழிப்பு, சட்ட ஆட்சி, சுயாதீனமான இயங்குதிறன் கொண்ட ஆணைக்குழுக்கள், அரச கரும மொழி மாற்றம், மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்தல் என்பன எல்லாம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சகல இன, மத, மொழி, பண்பாடுடைய மக்களை சமத்துவமான முறைமையில் ஒன்றிணைந்து வாழ வைக்கும் என்பதில் உண்மையில் நாட்டை நேசிக்கும் புலமையாளர;களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் இவை எல்லாம் நடைமுறை அரசியலில் சாத்தியமானவையா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
 
கலாநிதி சந்திரசேகரம் அவர்கள் இது போன்ற பல நூல்களை வெளியிட்டு தனது புலமைத்துவத்தை வெளிக் கொணர வேண்டுமென்று மனமார வாழ்த்துகின்றேன்.
 
பேராசிரியர்.ச.சத்தியசீலன், 
பீடாதிபதி, உயர் பட்டப்படிப்புகள் பீடம்,
வரலாற்று பேராசிரியர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்