ஏழாவது ஊழி |
நான் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பதிலும், இயற்கையைப் பற்றி அறிந்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவனாக இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் எனது கிராமமான திருநெல்வேலியில் பரவைக்குளம் என்ற நீர்த்தேக்கம் இருக்கிறது. அன்று, குழத்தையொட்டிப் பச்சை பசேலென்ற நெல்வயல்கள் இருந்தன. வீட்டுக்குச் சொல்லிக்கொள்ளாமல் குளக்கரையில் வந்தமர்ந்து விடுவேன் காற்றுத் தலைவாரிவிடும் போது நெற்பயிர்களில் ஏற்படும் அசைவு என்னுல் ஆச்சர்யத்தை கிளர்ந்தும் குளக்கரை இலந்தை மரத்தில் குடியேரியிருக்கும் தகதகக்கும் பொன்வண்டுகளும் குளத்தில் மலர்ந்து சிரிக்கும் தாமரைப் பூக்களும், 'மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும்' காட்டும் விலாங்கு மீன்களும், பச்சை தவலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும். தாமரைப்பூக்களை பறிக்கச் சென்றச்சிலர் சேற்றில் சிக்கி இறந்ததாக ஊரில் கதைகள் உலாவின. இதனால் குளக்கரைக்கு போய்வந்து வீட்டுக்குத் தெரியவந்த நாட்களில் பெற்றோரால் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. |