Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : இலங்கையின் கல்வி வரலாறு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-04-02-010
ISBN : 978-955-1857-09-7 , 978 -955 -1857- 09-7
EPABNo : EPAB/02/18820
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 600.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  1. இலங்கையின் கல்விச் சுவடுகள் : மரபுவழித் தமிழர் கல்விமுறை
  2. மரபு வழி இஸ்லாமியர் கல்விமுறை
  3. மரபு வழிச் சிங்களவர் கல்வி முறை
  4. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் காலக் கல்வி
  5. 1943ஆம் ஆண்டுக் கல்விச் சிறப்புக் குழுவின் விதப்புரைகள்
  6. குடியேற்றவாதக் கல்வியின் விளைவுகள்
  7. அரசியற் சுதந்திரமும் இலங்கையின் கல்வி வளர்ச்சியும்
  8. 1972ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள்
  9. 1997ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள்
  10. இலங்கையின் கல்விச் சட்டங்கள்
  11. அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தமும் கல்வியும்
  12. பெருந்தோட்டத்துறைக் கல்வி வரலாறு
Full Description (முழுவிபரம்):

சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு கொள்ளல் வாழ்தலின் அடிப்படையாக   அமைகிறது. எல்லா உயிர்களும் இத்தகைய பொருத்தப்பாட்டினை ஓரளவு பெறுதலின் வழியேதான் உலகில் வாழ்தல் இயலுகின்றது. ஆனால், மனிதர் தனது சூழ்நிலையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைப் பொருத்தப்பாடு 'உயர்நிலைப்பட்டது' ஆகும்.
சூழ்நிலைக் கூறுகளின் தன்மைகளுக்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொள்வதுடன் தமது தேவைகளுக்கேற்பவும் மனிதர் சூழ்நிலையினை மாற்றியமைத்தலே உயர்நிலைப் பொருத்தப்பாடு. இதற்கு 'கல்வி' இன்றியமையாத கருவியாக விளங்குகின்றது. 
எந்தவொரு சமூகத்திலும் கல்வி அந்தச் சமூகத்தின் பண்பட்ட நாகரிகத் தோற்றுவாயின் ஊற்றுமூலமாகின்றது. சமூக, பொருளாதார, அரசியல் பண்பாடு முதலான துறைகளில் கல்வி முக்கியமான விசைப்படுத்தலாகவும் பரிணமிக்கின்றது. தொடர்ந்து சமூகமாற்றம், சமூகவளர்ச்சி மற்றும் மனிதவளமேம்பாடு போன்றவற்றிலும் கல்வி பெரும் தாக்கம் செலுத்தத் தொடங்குகின்றது.
வரலாற்று ரீதியாக கல்விசார் பண்புகள் சமூக மட்டத்தில் மனித சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பன்மடங்கானவை. கல்வியின்அமைப்பு, கல்வியின்நோக்கங்கள், பாடத்திட்டங்கள், கற்றல் - கற்பித்தல் முறைகள், கல்விநிருவாக முறைகள் யாவும் புதுத்தேவைகள், புதிய நிலைமைகள் போன்றவற்றுக்கேற்ப மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வருகின்றன. இவை மனித வாழ்வியலிலும் துரிதமான பல்வேறு மாற்றங்களை  உருவாக்கியுள்ளன. எந்தவொரு நாட்டின் கல்வி வரலாற்றிலும் அந்தந்த நாட்டின் புதுத் தேவைகள் புதிய நிலைமைகள் என்பவற்றுக்கேற்ப பல்வேறு புத்தாக்கக் கட்டங்கள் தோன்றியுள்ளன. இவை கல்வி அமைப்பையே மாற்றியுள்ளன. இந்த மாற்றம் சமூக அசைவியகத்திலும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இதற்கு இலங்கை மட்டும் விதிவிலக்காக முடியாது.
இலங்கையில் காலனித்துவ ஆட்சி ஏறக்குறைய 450 ஆண்டுகள் நீடித்திருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் முறையே ஆட்சி அதிகாரம் செலுத்தினர். இவர்களது கல்விக்கொள்கைகள் காலனித்துவ ஆட்சியை நிலை நிறுத்தும் நோக்குடனேயே விரிவுபடுத்தப்பட்டன. காலனித்துவ ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகித்தும் சுதேசிகளை வலுவிழக்கச் செய்தும் வந்தார்கள். மேலும், நீண்ட காலமாக இருந்து வந்த பௌத்த, இஸ்லாமிய, இந்துக்கல்வி மரபுகளை முற்றாகப் புறக்கணித்தும் பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் சிறுபான்மையினங்களின் ஆதரவைப் பெற்றும் ஆட்சியைச் செலுத்தி வந்தார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்பட்ட பாட ஏற்பாடுகளின் மாறுபட்ட வடிவங்களை இலங்கையில் வழங்க முற்பட்டார்கள். காலனித்துவ ஆட்சியாளரால் வகுத்துக்கொடுக்கப்பட்ட எந்தவொரு கல்விக்கொள்கையும் இலங்கைக்குப் பரந்த அளவில் நேரடி நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்ற விமரிசனமும் உண்டு. இலங்கையில் காலனித்துவ ஆட்சியாளரின் கல்வி பின்வரும் அடிப்படைகளிலேயே இடம்பெற்று வந்துள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. அவை: 
    •    கல்வியை சமயம் பரப்பும் ஒரு கருவியாகக் கையாண்டனர்.
    •     கல்விப் பொறுப்பை ஏற்க முன்வராது அதனை சமய குழுக்களுக்கும் தனியாருக்கும் ஒப்படைத்தனர். 
    •     கல்வி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என விரும்பினர். 
    •    கல்வியை ஆட்சியாளர் மொழியிலே வழங்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினர். 
    •     கல்வியை வழங்குவதில் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளித்தனர். 
    •    உயர்கல்வியை வழங்குவதில் தாமதப் போக்கினைக் காட்டி வந்தனர். 
இவ்வாறான அம்சங்களின் பாதிப்பே இன்றைய காலகட்டத்தின் பல்வேறு கல்விப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. குறிப்பாக, காலனித்துவ ஆட்சியாளர்களின் கல்விக்கொள்கை இலங்கையின் கல்வி வளர்ச்சியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின. சமூக வர்க்கபேதங்களை உருவாக்கியது; நகரங்கள் கிராமங்கள் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் மொழியை முதன்மையாகக் கொண்டு வேறுபடுத்தியது; கல்வி வாய்ப்புகளில் பிரதேச வேறுபாடுகளை தோற்றுவிக்க இடமளித்தது. அதாவது, காலனித்துவ ஆட்சியாளரால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வியமைப்பு இலங்கையின் சமூக - பொருளாதார, சமூக - கலாசார அம்சங்களிலே சமத்துவமின்மையைத் தோற்றுவித்தன. அரசு, தனியார், மதக்குழுக்கள் ஆகியோரால் நடத்தப்பட்ட பாடசாலைகள் ஆங்கிலக் கல்விக்கு முதன்மை வழங்கி வந்தன. 
ஆங்கிலக் கல்வியின் பயனை இலங்கையின் கிராமப்புற விவசாயிகள் அனுபவிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இலங்கையில் ஆங்கிலம் கற்ற ஒரு உயர்வகுப்பினர் உருவாக்கப்பட்டதுடன், சகல விடயங்களிலும் அவர்களுக்கே சந்தர்ப்பமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டது. ஆக, ஒரு சிலருக்கு உயர்தரமான ஆங்கிலக்கல்வி; கிராமப்புற பாமர மக்களுக்கு தரத்தில் குறைந்த ஆரம்பக்கல்வி; இதுவே காலனித்துவக்காலக் கல்விக்கொள்கையாக அமைந்தது. 
இவ்வாறான, சமூக வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒரு கல்வியமைப்பு இலங்கைக்கு உகந்தது அல்ல என உணரப்படலாயிற்று. குறிப்பாக, 1931இல் டொனமூர் குழுவினர் இலங்கைக்கு சர்வசன வாக்குரிமையை வழங்கினர். இந்த சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டதால் இலங்கையரின் அரசியற் பிரவேசம், சமூக நோக்கிலான விழிப்புணர்வு பாராளுமன்ற சனநாயக ஆட்சியில் பங்கு கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் என்றவாறு பல மாற்றங்கள் உண்டாயின. 
இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்ற ஒரு சமூகப் பின்னணியைக் கல்வியினூடாக ஏற்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய சாதகமான சூழல் படிப்படியாக உருவாகி வந்தது. 1940களில் கல்வியை சனநாயகப்படுத்துதல் தொடர்பான பல கொள்கைகள் உருவாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, 
    அ)     இலவசக் கல்வியின் அறிமுகம். 
    ஆ)     தேசிய மொழிக்கல்வி மொழியாக்கப்படல்.
    இ)     பாடசாலைகள் யாவும் அரச பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படல்.
    ஈ)     கலைத்திட்ட மாற்றங்களினூடாகக் கல்வித்தரம் பேணுதல்.
இந்த அம்சங்கள் கல்வி வரலாற்றில் பல்வேறு புதிய போக்குகள் உருவாகக் காரணமாயிற்று. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு முதலான தளங்களில் 'கல்வி' ஏற்படுத்தி வந்த மாற்றங்கள் விரிவானவை, வளமானவை. இதைவிட கல்வித்துறையில் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்ட 'சீர்திருத்தங்கள்', சமூக அசைவியக்கத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் அதிகம் என்றே கூறலாம். 
இந்தப் பின்னணிகளை விரிவாகவும் நுணுக்கமாகவும் இறுக்கமாகவும் எடுத்தாராய்கிறது. 'இலங்கையின் கல்வி வரலாறு' என்னும் இந்த நூல். இது வெறுமனே தகவல்களின் தொகுப்பு அல்ல. மாறாக, விமரிசன நோக்கு அனைத்தையும் ஊடுருவி உள்ளது. அதற்கான தர்க்கத்தை தன்னளவில் கட்டமைக்கிறது. வரலாறு எழுதுதலிலுள்ள மேட்டிமை அணுகல் முறையை விமரிசிக்கிறது.  மாற்று வரலாற்றெழுதியலை நோக்கிக் கவனம் குவிக்கிறது. இதற்கான தெரிவும், தேர்வும் மற்றும் கருத்துநிலைத் தெளிவும் நுட்பமாக நூலில் வெளிப்பட்டுள்ளது.
தமிழில் 'இலங்கையின் கல்வி வரலாறு' கட்டுரைகளாக ஆங்காங்கு உதிரிகளாகவே எழுதப்பட்டுள்ளன. இன்னும் முழுமையான வேறுபட்ட அணுகல் முறையுடன் கூடிய வரலாற்றெழுதியல் அறிமுகமாகவில்லை. இதனை இந்நூல் சாத்தியப்படுத்துகின்றது. இதுபோல் இன்னும் பல்வேறு நிலைப்பட்ட கல்வி வரலாறுகள் எழுதப்பட வேண்டும். அப்பொழுதுதான் 'கல்வியை சனநாயகமயப்படுத்தும் சீர்திருத்தங்கள்' எமக்கு எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளன? அனைவருக்கும் சமசந்தர்ப்பமும் சமவாய்ப்பும் கிடைத்துள்ளதா? அனைவருக்கும் சமூகநீதியும் சமூகசமத்துவமும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற வினாக்களுக்கான விடைகளும் எமக்குக் கிடைக்கும்.
இலங்கையில் இன்று இருக்கின்ற கல்வியின் நிலையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால், நாட்டின் மிகப்பெரிய தோல்வி, சுதந்திர இலங்கையின் மாபெரும் தோல்வியே கல்வித்துறையில்தான் இருக்கிறது.  இதனை எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மொத்தமாகக் கல்வித்துறையில் என்ன சாதித்திருக்கிறோம் என்று பார்த்தால் சாதிக்காமல் விட்டுவிட்ட மிகமோசமான இமாலயத் தோல்விகள்தான் நம்கண் முன்னால் நிற்கின்றன. இதுதான் இன்றைக்கு இங்கே இருக்கின்ற கல்வியின் நிலை.
இந்தப் பின்னணியில் தான் பேரா.சபா.ஜெயராசா  'இலங்கையின் கல்வி வரலாறு' என்னும் நூலை எமக்;குத் தந்துள்ளார். இது நம்மைப் பற்றி நமக்கான கல்வி பற்றிய உரத்த சிந்தனைக்கான விமரிசனத்துக்கான தேடலுக்கான கூறுகளையும் களங்களையும் நமக்கு அடையாளப்படுத்துகின்றது.
இன்றைய உலகமயமாக்கல் கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நவகாலனித்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் கல்வித்துறையுள் உள்நுழைந்துவிட்டன. சமகாலக் கல்விக்கொள்கை வளர்ச்சி என்பன உலகமயமாக்கலின் நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகவே அமுலாக்கப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் தான் இன்று கல்விக்கொள்கையைத் தீhமானிக்கின்றன. இந்த நிலைமை எத்தகைய மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து நாம் விழிப்புடன் உரத்துச்சிந்திக்க வேண்டும். இதற்குப் பொருத்தமான விமரிசனக் கருவிகளை இந்நூல் தரவேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு நாம் 'மாற்றுக் கல்வி வரலாறு' நோக்கி நாம் பயணப்பட வேண்டும், சிந்திக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. 
கல்வி எம்மை சுயசிந்தனை சுயதேடல் மற்றும் விமரிசன நோக்கு போன்ற விழுமியங்களால் செயற்படுவதை தூண்ட வேண்டும். எந்தவொரு நூலையும் அத்தகு தூண்டல்சார் கண்ணோட்டத்தில் வாசிக்க வேண்டும். இதற்கேற்ப பொருள்கோடல் செய்ய வேண்டும். மாற்று வரலாறுகளை எழுத  வேண்டும். இந்நூல் இதற்கான சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது.  
தெ.மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : இலங்கையின் கல்வி வரலாறு
ISBN : 978 -955 -1857- 09-7
978-955-1857-09-7
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2019
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு