Book Type (புத்தக வகை) : தமிழ்மொழிக்கல்வி நூல்
Title (தலைப்பு) : அ ஆ இ... உயிர்மொழி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-09-01-114
ISBN : 978-955-685-013-0
EPABNo : EPAB/2/19230
Author Name (எழுதியவர் பெயர்) : துரைச்சாமி சிவபாலன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 346
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 1600.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): இலங்கையில் விற்பனையில் இல்லை
Content (உள்ளடக்கம்):

1.    கட்டுரையும் பயிற்சியும் - சங்கீதம்
2.    கார்த்திகை விளக்கீடு - பயிற்சிகள் 
3.    அறநெறிப் பாடல் (ஒளவையாரின் மூதுரை- பாடலும் பயிற்சியும்)
4.    தொகுதிச் சொற்களும் பொது அறிவுப் - பயிற்சிகள் (பகுதிகள் 1,2,3,4,5,6)
5.    வாக்கியம் ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள்
6.    வானொலிச் செய்தி ஒன்று கேட்போம் -தகவலும், பயிற்சியும் 
7.    ஓர் அம்மா ஓர் ஆடு
8.    விடையும் வினாவும் - பயிற்சிகள் 
9.    மரபுத்தொடர்கள் (ஐனுஐழுஆளு) 
10.    மரபு தொடரில் பயிற்சிகள் 
11.    இரட்டைக் கிளவிகள் 
12.    இரட்டைக் கிளவிகளில் பயிற்சிகள் 
13.    அடுக்குத் தொடர்
14.    அடுக்கிடுக்குத் தொடர்
15.    உவமைத் தொடர்கள்
16.    கட்ரையும் பயிற்சியும் - வீரமாமுனிவர் 
17.    இலக்கணம் - சொல் 
18.    எச்சவினை - பெயரெச்சம்: வினையெச்சம் 
19.    பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்
20.    இடைச்சொல், உரிச்சொல் 
21.    சொல் இலக்கணம் - பயிற்சிகள்
22.    பழமொழிகளில் பயிற்சிகள்
23.    வாக்கியம் அமைத்தல் - பயிற்சிகள் 
24.    இலக்கணம் - வேற்றுமைகள்
25.    எட்டு வேற்றுமைகளும் உருபுகளும் 
26.    வேற்றுமைகளின் பயிற்சிகள்
27.    விடைகளுக்குரிய வினாக்களைக் கண்டறிதல் - பயிற்சிகள்
28.    இணை மொழிகள்
29.    இணைமொழிகளில் பயிற்சிகள் 
30.    திருமுறைகள் - கட்டுரையும் பயிற்சியும்
31.    பொது பயிற்சிகள் (பகுதிகள் 1,2,3,4,5)
32.    இலக்கணம் - புணரியல் (Combination)
33.    புணர்ச்சி வகைகள்
34.    புணரியல் - பயிற்சிகள் 
35.    நிலம் என்னும் நல்லாள் - கட்டரையும் பயிற்சியும்
36.    ஆகுப்பெயர்கள் 
37.    பழமொழிகளின் பயிற்சிகள்
38.    கட்டுரைகள் 
1.    அழகான அந்தப் பனைமரம்
2.    சுவாமி விவேகானந்தர்
3.    அன்னை தெரேசா
4.    தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகளார்
5.    பேராசிரியர் மு.வரதராசன்
6.    திருகோணேசுவரம்
7.    கொடிகாத்த குமரன்
8.    தைப்பொங்கள்
9.    கல்வி 
10.    நாவலியூர் சோமசுந்தரப் புலவர்
11.    யார் இந்த ஒளவையார்
12.    ஆறுமுக நாவலர்
13.    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் 
14.    கவிஞர் கண்ணதாசன்
15.    சுவாமி விபுலானந்தர்
16.    நவராத்திரி விரதம் 
17.    அருட்டிரு அலசுரயர் உறோபின் மக்ளாசன்
18.    திருக்குறல்

 

Full Description (முழுவிபரம்):

"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று பாரதியார் பாடினார் என்று அறிகிறோம்.  "இனிச்சாகும்" என்று பாடினாரா, "இனிச்சு ஆகும்" என்று பாடினாரா என்று தெரியவில்லை என்று தமிழ் நாட்டில் சிலர் குழப்பி விளக்குகிறார்கள்.  பாரதியாரின் கருத்து எப்படி அன்று இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் தமிழ் நாட்டில் இன்று தமிழ்மொழி படுகின்ற பாட்டைப் பார்க்கின்றபோது "விரைவில் தமிழ் இனிமேல் சாகும்" என்று நிச்சயமாக நினைக்கத் தோன்றுகின்றது.

 
   தமிழ்நாட்டில் அவதிப்படுகின்ற தமிழின் நிலையை நினைந்து, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர், தமிழ்மொழியை வெளிநாட்டிலாகுதல் அழியாமற் காக்க முடியுமா என்று நீளநினைந்து செயற்பட்டு வருகின்றார்கள்.  தமிழர் பெயர்ந்து வாழ்கின்ற ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழை வாழ வைப்பதற்கான சூழல் இல்லை.  அவ்வாறு இருந்தும், ஈழத்தமிழர் தமிழ்க் கல்விக் கூடங்கள் நிறுவியும், தமிழ்நூல்கள்  எழுதியும், தமிழ் பற்றிய ஆங்கில நூல்கள் எழுதியும், கலை கலாசார நிறுவனங்கள் நிறுவியும், தமிழ்மொழியின் வாழ்வை நிலைநாட்ட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.   தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கென, தமிழ் வாழ்வுக்கென தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக எடுத்த முயற்சிகள் என்ன ஆயின என்ற கேள்விகள் கேட்கப்படுகின்ற நிலையிலும், ஈழத்தமிழர் சோர்வடைந்து விடாமல் தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் விடா முயற்சி காட்டிவருவது பாராட்டுக்குரியது.
 
   அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் வித்துவான் வேலன் இலக்கிய வட்டத்தின் உறுப்பினரான துரைச்சாமி சிவபாலன் (ஙி.கி) அவர்கள் எழுதி வெளியிடுகின்ற "ஆனா ஆவன்னா ஈனா" என்ற நூல். இந்த நூல் அச்சுவாகனம் ஏறுவதன் மூலம் சிவபாலன் அவர்களின் நீண்ட நாள் விழைவு ஒன்று விளைச்சல் காண்கின்றது.  அவருடைய தமிழபிமானத்தை நான் பாராட்டுகிறேன். 
 
   தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்கென்று பலநூறு நூல்கள் வெளிவந்து விட்டன; இன்னமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  அப்படியிருக்க, இன்னுமொரு நூல் வேண்டுமா? என்று வினவுகின்ற சிலரின் முணுமுணுப்பும் காதில் விழுகிறது. ஆங்கிலச் சிறாருக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கென்று ஆங்கிலம் புழங்கும் நாடுகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்து விட்டனவே! அவ்வாறிருக்கவும் வேறு புதுநூல்கள் வேண்டா என்ற வன்பு சொல்லுகின்ற ஆங்கிலர் ஒருவரில்லையே! அப்படியிருக்கத் தமிழராகிய நமக்கேன் இந்த வேண்டாத வினா வியாதி?
 
   ஒரே Eleven Plus பரீட்சைக்கென நூற்றுக்கு மேற்பட்ட துணைநூல்கள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றை எல்லாம் நம்தமிழர் வாங்கிப் பயனடைகின்றனரே! குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் நூலே போதும் என்ற திருப்தி அடையவில்லையே! இன்னுமொரு புத்தகமா என்று கடவுகின்ற தமிழ்ப் பெற்றோர்கூடக் கேள்வி கேட்கவில்லையே!
 
   "ஆயிரம் மலர்கள் மலரட்டுமே" என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடினார்கள்.  சிவபாலன் அவர்கள் கண்ணதாசன் கூறியவற்றையும் கல்விச் சாலைகளில் கண்கூடாகக் காண்பவற்றையும் மனத்திலிருத்தி இந்த நூலை எழுதி நிறைவேற்றியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். 
 
   இந்த நூலை எழுதி முடிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை நான் அறிவேன்.  கால்கோள் இட்ட நாளிலிருந்து குடிபூரலுக்கான தேதியைத் தீர்மானித்த நாள்வரை அவர் உற்ற சிரமங்களை நான் உணர்வேன். ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிவபாலன் அவர்கள் இந்த நூலின் முதலாவது வரைவோடு என்னிடம் வந்தார்; வந்தவர், அந்த வரைவைப் பார்த்துக் கருத்துரைக்குமாறு கேட்டார்.  அவர் இலக்கிய  வட்டத்து வட்டர் என்பதால் தயங்காமல் ஓம்பட்டேன்.  மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.  என்னிடம் அவர் அப்போது வந்திராவிட்டால் இந்த நூல் வெள்ளெனவாகவே அச்சுவாகனம் ஏறியிருக்கும் என்று சிவபாலன் அவர்கள் சிலபோது நினைத்திருக்கவும் கூடும்; ஆனாலும் இப்போது அந்த ஆதங்கம் அகன்றிருக்கும் என்று நம்புகின்றேன்.
 
   என் அகக்கண்ணும், புறக்கண்ணும் குடைந்து குடைந்து பார்த்து, அரிக்குஞ் சட்டியில் இட்டு அலசியதால் நூல் வெளிவரக் காலதாமதமாயிற்று; காலக்கடப்பு நூலினைச் சுடச்சுடரும் பொன்னாக ஆக்க வழிவகுத்திருக்கிறது. 
 
சிவபாலன் அவர்களின் இந்தநூலின் உள்ளீட்டில் தலையிடும் உரிமையை நான் எடுத்துக் கொள்ளவில்லை.  புறவடிவம், தமிழிலக்கிய மரபு வடிவம், தமிழ் மரபு வடிவம் என்பனவற்றில் சில கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அந்த வாய்ப்பின் அடிப்படையில் ஓரிரு கருத்துக்களை இங்கே தெரிவிக்க விருப்புகிறேன்.
 
   சிவபாலன் அவர்களின் இந்தநூல் புலம்பெயர் மண்ணில் வாழ்கின்ற தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழி முட்டுக்களை அறுப்பதற்கான ஒரு முயற்சி என்று அறிகிறேன்.  பெயர்ந்த புலத்தில் வாழ்கின்ற தமிழ்ப்பிள்ளைகள் தமிழைக் கற்கும்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வுகாண எத்தனித்திருக்கிறார் என்பது தெரிகிறது.
 
   ஆங்கிலர் அல்லாத தமிழ்ப்பிள்ளைகள் தமது வீட்டு மொழியான தமிழைப் பேசாமல் விடுவதன்மூலம் தான் ஆங்கில மொழி ஆற்றலை விருத்தி செய்ய முடியும் என்று ஒரு காலத்தில் இந்த நாட்டுக் கல்விமான்கள் நம்பினார்கள்.  தமது நம்பிக்கையைக் கல்விக் கொள்கையாகப் பரப்பியும் வந்தார்கள். சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பது பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் அப்போது நினைத்தார்கள்.  ஆனால் கல்வித்துறை சம்பந்தமாக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பழைய கல்விக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டன.  மாணவன் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பது மொழிக்கல்விக்கு உரம் ஊட்டும் என்றும் ஒன்றுக்குகொன்று ஒத்தாசையாக இருக்கும் என்றும் இப்போது வற்புறுத்தி வருகின்றார்கள்.  இங்கிலாந்தில் உள்ள அநேகமான பாடசாலைகளுக்குப் பொறுப்பாக உள்ள உள்ளுர் ஆட்சிச்சபைகள் இந்த ஆராய்ச்சி முடிவினைப் பெற்றோருக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பகிரங்கப் படுத்தி வருகின்றார்கள்.  இந்த முயற்சியில் ஸிமீபீதீக்ஷீவீபீரீமீ சிஷீuஸீநீவீறீ முன்னோடியாக விளங்குகின்றது.
 
   தமிழ் படிப்பதன் விளைவாகத் தமது பிள்ளைகளின் ஆங்கில ஞானமும் ஆங்கில உச்சரிப்பும் பங்கப்பட்டுவிடும் என்று நம்பியதன் விளைவாகத்  தமிழைத் தம் பிள்ளைகளிடமிருந்து விலக்கி வைத்த பெற்றோர் இப்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.இது நல்ல சகுனம் என்றே தோன்றுகின்றது.  இந்த நல்ல சகுனம் தென்படுகின்ற சமயம் பார்த்துச் சிவபாலன் அவர்களின் "அ,ஆ,இ" உயிர்மொழி என்ற நூல் வெளிவருகிறது.   வீட்டு மொழியான தமிழைப் பேசுவதால் ஆங்கில மொழி ஆற்றல் குன்றாது என்பதற்குச் சிவபாலன்  அவர்களின் பிள்ளைகளே சான்று.  வீட்டிலும் தமிழ், ஏட்டிலும் தமிழ் என்று சிவபாலன் வாழ்வதால் அவரின் பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள், படிக்கிறார்கள், பாடுகிறார்கள், தமிழ்ப்படம் பார்த்துச் சிரித்து மகிழ்கிறார்கள்;  அதன் மூலம் முன்மாதிரியாக வாழ்கின்றார்கள்.
 
   இந்த நூலின் ஆசிரியர் இந்த நூலைப் பள்ளிப்பாடநூலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை.  பள்ளிச் சிறார்க்கு அவசியமான மொழிச்செய்திகளை ஆழமாக அகலமாகக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதியிருக்கிறார் அதாவது ஒரு பாடப்பயிற்சி நூலாக எழுதியிருக்கிறார்.  கற்பிப்பது என்பது ஒருபடி, முதற்படி; கற்றதைத் தங்கவைத்தல் என்பது மற்றப்படி.  இந்தப்படி முக்கியமான படி; இதனையே கல்வியாளர் Reinforcement என்பார்கள்.  அதாவது நிலைக்கப்பண்ணுதல் என்பார்கள்; அதாவது மறக்காமல் இருக்கப்பண்ணுதல் என்பார்கள்.  மறக்காமல் இருக்கச் செய்வதற்காக மனதில் படியவைப்பதற்காக ஏராளமான பயிற்சிகளைக் கொடுத்து நூலோட்டத்தை நடத்தியிருக்கிறார் ஆசிரியர்.  முந்நூறு பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த நூல்  "அ ஆ இ" என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.  ஆனாவுக்கு எண்பது பக்கங்களும், ஆவன்னாவுக்குத் தொண்ணூறு பக்கங்களும் ஈனாப் பகுதிக்கு நூற்றுநாற்பது பக்கங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
 
   ஆனாப்பகுதி அடிப்படைப் பகுதியாக அமைந்து தமிழ் எழுத்துகளையும், தமிழ் ஒலிகளையும், தமிழ் ஒலிப் பேதங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும், பேச்சுப் பழக்கத்தையும், மாணவர்க்கு உணர்த்துவதோடு முக்கியமான இலக்கண விதிகளையும், சொல்லாட்சிகளையும், ஆற்றொழுக்கான படிமுறையில் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
 
   ஆனாப்பகுதியிலே மாணவர் பேசுவதற்கு அவசியமான சொற்றொகுதியைக் கற்பித்து, அவர்களுக்கு வேண்டிய சொல்வங்கியை ஏற்படுத்தி, ணகர நகர னகர பேதங்களையும், லகர ழகர ளகர பேதங்களையும்,  ரகர றகர பேதங்களையும் இனம்பிரித்துக் காட்டுவதோடு, பேச்சுப் பழக்கத்தையும், வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்திய ஆசிரியர், ஆவன்னாப் பகுதியிலே கட்டுரைக்கின்ற கலையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.  கட்டுரை எழுதும் ஆற்றலைப் படிப்படியே போதிக்கின்ற ஆசிரியர் கட்டுரை எழுத உதவுகின்ற வகையில் இடையிடையே மெல்லமெல்ல இலக்கணக் கூறுகளையும் புகுத்துகின்றார்.
 
   அடுத்து, கட்டுரை வரைவதற்கான கலையை வளம்படுத்துவதற்கான உத்தி என்ற முறையில், மரபியற் சொற்கள், மரபியற் சொற்றொடர்கள்,  பழமொழிகள் என்பவற்றைப் பலதிறப்பட்ட பயிற்சிகளோடு ஊட்டுகின்ற பாங்கு பாராட்டத்தக்கதாக உள்ளது.    நிறைவான பகுதியான ஈனாப்பகுதியின் முதற்கூறு இலக்கண ஆட்சியை மாணவரின் மனதில் ஆளப்பதிப்பதற்கான பயிற்சிகள் நிறைந்த முயற்சியாக அமைந்திருக்கிறது.  ஈனாப்பகுதியின் பிற்கூறு, கட்டுரை  வரைகின்ற கலையை வளர்ப்பதற்கான பகுதியாக அமைந்து சிவபாலனின் நூலுக்கு நிறைவு தருகின்றது.தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் எழுதப்பட்ட இந்த நூலில் ஈழத்து வாசனை இனிதே கமழ்கிறது.  தனிநாயகம் அடிகளார், நவாலியூர் சோமசுந்தரப்புலவர், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர் என்போர் பற்றிய கட்டுரைகளும், வித்துவான் வேந்தனார், அ. அந்தோனிமுத்து, காசி ஆனந்தன், புலவர் சிவநாதன், செ. சிறீக்கந்தராசா, கவிஞர் மு. பொன்னம்பலம் போன்ற ஈழத்துக் கவிஞரின் கவிதைகளும் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
 
   உச்சரிப்புச் சிக்கலையும், இலக்கண இடர்ப்பாடுகளையும் நீக்குதற்காகவும், எழுத்தாற்றலை வளர்ப்பதற்காகவும், பேச்சாற்றலை ஊக்குவிப்பதற்காகவும், பிழையறப் பேசவேண்டும், எழுத வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவும் வழுக்களைந்து எழுதப்பட்ட "அ, ஆ, இ" உயிர்மொழி என்ற இந்த நூல் தமிழ்ச்சிறார்க்குத் தரப்படும் நற்கொடை.  தமிழுலகம் நன்றியுணர்வுடன் இந்த நூலை வரவேற்கும் என்று நம்புகிறேன்.  சிவபாலன்  அவர்களின் பெருமுயற்சி பெருவெற்றி தருவதாக.
 
வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா
இலண்டன்
03.08.2012