Full Description (முழுவிபரம்): |
கல்வியியல் நிலையிலே நீண்டு நெடிது தேடல்களை முன்னெடுத்த புலமையாளராக விளங்கியவர் பேராசிரியர் ப.சந்திரசேகரம்.
தேடலே அறிவு நோக்கிய நகர்ச்சியை ஏற்படுத்துகின்றது. உலக நிலவரங்களையும் சமூகத்தையும் புலக்காட்சி கொள்ளலுக்கும் அறிவின் இருப்புக்குமுள்ள உசாவல் அவரது கல்வியியல் எழுத்தாக்கங்களில் ஊடுருவி மேலெழுகின்றன.
அறிவின் அமைப்புக்கும் அதன் உள்ளடக்கத்துக்கும் அது கையளிக்கப்படும் முறைமைக்குமிடையேயுள்ள தொடர்புகள் கல்வியில் நோக்கிலே முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை அடியொற்றியே வரன்முறையான தருக்க முறைமைகள் உருவாக்கம் பெற்றன. அவற்றின் முரண்பாடுகளும், முகிழ்த்தெழும் ஒன்றிணைந்த தொகுப்பும் பேராசிரியர் கட்டுரைகளின் நிறைபொருளாகவுள்ளன.
பகுத்தலும், சிந்திய வடிவில் நிற்கும் அறிவுத் துணிக்கைகளில் மீது ஊன்றிய கவனத்தைச் செலுத்துதலும், ஓரங்கட்டப்பட்டு எல்லை நிலையில் உள்ளவற்றின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துதலும், வேண்டிய விடயங்களிலே திரட்டல் வடிவாக்குதலும் கட்டுரைகளில் இடம்பெறும் தனித்துவமான பதிவுகளாகவுள்ளன.
அறிவுக்கும் சமயங்களுக்கும் அறிவுக்கும் நிறுவனங்களுக்கும், ஆளுமைகளுக்குமுள்ள தொடர்புகள் நுணுகி நோக்கப்படுவதுடன் அவற்றிலிருந்து முகிழ்த்தெழும் கருத்தியல்களின் உறுதிப்பாடுகளும் செறிவுடன் நோக்கப்பட்டுள்ளன. சார்புநிலை நோக்கும் இயக்கவியல் தரிசனமும் அவரது எழுத்தாக்கங்களில் விரவி நிற்கின்றன.
'அறிதல்' (முழெறiபெ) என்பது கருத்தாடல்களின் ஆழங்களை நோக்கிய உளச் செயல்முறையாகின்றது. கல்விச் செயல்முறையில் அது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. அறிதல் வழியான தகவல்களும் அறிவின் நிலைக்குத்து எழுச்சியில் நிகழும் நிலை மாற்றங்களும் கட்டுரைகளில் விரவியும் பரவியும் நிற்கின்றன.
பேராசிரியரின் எழுத்தாக்கங்கள் தகவல்களின் திரட்டல்களாக மட்டும் அமையாது, உயர்நிலை ஆய்வுகளின் பரிமாணங்களுள் ஒன்றாக அமையும் 'கருத்து வினைப்பாட்டுப் பகுப்பாய்வாகவும்' (னுளைஉழரசளந யுயெடலளளை) அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான செவ்வியல் எழுநடையுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவராக பேராசிரியர் விளங்கினார். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை ஆங்கிலமொழி ஆய்விதழ்களிலும் அவர் எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் அவரின் தனித்துவமான எடுத்தியம்பல் முறை எழுபாய்ச்சல் கொண்டது.
அறிவின் பிரவாகச் சூழலில் பேராசிரியரின் ஆக்கங்கள் நூலுருப் பெறுதல் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். கல்வியியல் ஆய்வுகள் விரிவடைந்து செல்லும் சமகாலத்தில் பன்முகமான தரிசனங்களுக்கு இட்டுச் செல்லும் ஆற்றுப்படுத்தலாக இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.
சபா.ஜெயராசா
|