Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்விச் சமூகவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-01-04-004
ISBN : 978-955-1857-03-5
EPABNo : EPAB/2/19261
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  1. பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக முகிழ்த்தெழும் சமூகவியற் சிந்தனைகள்.
  2. கல்விச் சமூகவியலின் முகிழ்ப்பு
  3. கல்வியும் மார்க்சிய சமூகவியலும்.
  4. ஒகஸ்தே கொம்தேயும் ‘சமூகவியல்” அறிமுகமும்
  5. எமில் துர்க்கைம் வழங்கிய சமூகத் தொழிற்பாட்டியலும் கல்வியியலும்
  6. நவீன கல்விச் சமூகவியலாக்கத்தில் வெபரின் பங்களிப்பு
  7. சமூகமும் சிந்தனை உருவாக்கமும்
  8. சமூக இசைவாக்கல்
  9. சமூகக் குழுக்களும் கல்வியும்
  10. சமூக மாற்றமும் பண்பாட்டு மாற்றமும்
  11. சம்ஸ்கிருத மயமாக்கல், மேலைமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல்
  12. குடும்பமும் சமூகமயமாக்கலும் கல்வியும்
  13. பாடசாலைகளும் சமூகமயமாக்கலும்
  14. சமூகவியல் நோக்கில் ஆசிரியர்
  15. சமூக வகிபங்குகள்
Full Description (முழுவிபரம்):

இன்று தமிழ்ச்சூழலில் சமூகவியல், மானிடவியல் போன்ற கற்கையென்பது பரவலாக்கப்பட வேண்டிய கட்டத்திலேயே உள்ளது. இவை சார்ந்த அடிப்படையான நூல்கள் மற்றும் இத்துறைசார் கோட்பாடுகளின் பின்புலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் எம்மிடையே போதியளவு வளர்ச்சியடையவில்லை. இதனால், எமது சிந்தனை, தேடல், கற்கை, ஆய்வு போன்ற அம்சங்களில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளின் தாக்கம் முழுமையாக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை.
தமிழ் நாட்டுப் பின்புலத்தில் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளில் அடிப்படையான சில நூல்கள் இன்று தமிழில் வெளிவரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  தமிழில் 'நாட்டார் வழக்காற்றியல்' துறை இன்று வளர்ந்து வரும் அறிவுத் துறைகளில் ஒன்றாக விருத்தி பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இத்துறை இந்தியவியல், மானிடவியல், மொழித்துறைகளின் பகுதியாகச் செயல்பட்ட 'நாட்டார் வழக்காற்றியல்' இன்று தனியொரு துறையாக தமிழகப் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டார் வழக்காற்றியல்துறை மானிடவியல், சமூகவியல், உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. 
1980களுக்குப் பிறகு 'நாட்டார் வழக்காற்றியல்' சமூக அறிவியல் ஆய்வுப் புலத்தில் முக்கியமான ஓர் ஆய்வுத்துறையாகவும் கற்கையாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. இதனால் தமிழில் பல்வேறு கோட்பாட்டு நூல்கள் அவை சார்ந்த ஆய்வுகள் பல்கிப் பெருகி வருகின்றன. சமூகவியல் துறையின் அறிவாராய்ச்சி மரபு வரன் முறையான ஒழுகலாறு சார்ந்த கலாசாரமாக மாற்றமடைந்து வருகின்றன. பன்முக சமூகப் பண்பாட்டியல் ஆய்வுக்கான புதிய களங்கள் உருவாகின்றன. சமூக அறிவியல் கோட்பாடுகளின் சமகால விருத்தி உள்வாங்கப்பட்டு வருகின்றன.  
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் 'நாட்டார் வழக்காற்றியல்' துறை இன்னும் வளர்ச்சியடையவில்லை. ஆனால் நாட்டார் வழக்காற்றியல் துறை  போல் 'கல்வியியல்' துறை இங்கே விருத்தி பெறும் ஒரு துறையாகவே உள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் 1964ஆம் ஆண்டு தொடக்கம் கல்வியியல் துறை சார்ந்த பாடங்கள் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டு வந்தன. கல்விமாணிப்பட்ட மாணவர்களுக்காகவே இத்தமிழ் மொழிக்கல்வி தொடங்கப்பெற்றது.  1973 வரை ஆங்கிலமொழி மூலம் நடத்தப்பெற்று வந்த பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கற்கைநெறி அவ்வாண்டிலிருந்து சுயமொழிகளில் கற்பிக்கப்படலாயிற்று. இதற்கு இம்முயற்சியின் ஆரம்ப முன்னோடிகளாக விளங்கிய பெருந்தகைகளுக்கு முக்கியமான இடமுண்டு. 
இன்று சகல ஆசிரியர்களும் சகல பாடங்களையும் பாடசாலைகளில் சுய மொழி மூலம் கற்பிக்கின்றவர்கள். எனவே, இவர்களுக்கான ஆசிரியர் பயிற்சியும் சுயமொழிகளிலேயே நடத்தப்படல் வேண்டும். இக்கருத்து இப்பயிற்சி மொழி மாற்றத்துக்குக் காரணமாயிற்று. காலப்போக்கில் சுயமொழிகளில் பயின்று பட்டம் பெற்றவர்கள் டிப்ளோமா பயிற்சிக்கு வரத் தொடங்கினர். இதனால் கல்வியியல் பயிற்சி சுயமொழிகளில் வழங்கப்படும் நிலை நிரந்தரமாக மாற்றம் கண்டது. 
கடந்த நான்கு தசாப்த காலமாகக் கல்வியியல் கற்கைகள் தமிழ்மொழியில் நடைபெற்று வருகின்றன. ஆகவே, இத்துறை சார்ந்த அடிப்படை நூல்கள் மற்றும் துணை நூல்கள், உசாத்துணை நூல்கள் அதிகம் வெளிவந்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் எதிர்பார்ப்பது நியாயமானதே. இதற்கு நாம் திருப்தி அடையும் வகையில்  பதில் தேட முடியாது. இங்கே அடிப்படை நூல்கள் தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. ஆகவே அதிகம் வெளிவரவில்லை. 
இன்று கல்வியியல் சமூக விஞ்ஞானம், இயற்கை விஞ்ஞானம் என்னும் பல்வேறு துறைசார்ந்த அறிவுத் தொகுதிக்கு ஈடாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பெருவாரியாக வளர்ச்சி கண்டுள்ளது. இதைவிட கல்வியியல் துறை , 'கல்வித்தத்துவம்', 'கல்வி உளவியல்',  'கல்விச் சமூகவியல்', 'கல்விப் பொருளியல்', 'கல்வி முகாமைத்துவம்', 'கல்வித் தொழில்நுட்பவியல்', 'கற்பித்தலியல்' என ஏராளமான பல பிரிவுகளாக  வளர்ச்சி பெற்றுவிட்டன. ஆகவே, கல்வியியல் துறை சார்ந்த அடிப்படை நூல்கள் தமிழில் அதிகமாகவே வெளிவந்திருக்க வேண்டும். நாம் அப்படி எதிர்பார்ப்பதிலும் நியாயம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் 'நாட்டாh வழக்காற்றியல்' துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, விருத்தி போன்று  ஈழத்தில் கல்வியியல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  அங்கே நாட்டார் வழக்காற்றியல் துறை சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல் சார்ந்த ஆய்வுகளுக்கு உரித்தான அடிப்படைக் கோட்பாட்டு நூல்களைத் தமிழுக்கு கொண்டு வரும் போக்கு முனைப்பாகவே உள்ளது. இதுபோன்ற முனைப்பு இங்கே கல்வியியல் சார்ந்த துறையில் ஏற்பட்டிருக்க வேண்டும். 
அதாவது, எமக்கு கல்வியியல் பின்புலத்தில் இருந்து சமூகவியல், மானிடவியல் சார்ந்த நூல்கள் கோட்பாடுகள் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. புதிய புதிய சிந்தனைகள், அறிவுத் தொகுதிகள் உடனுக்குடன் உள்வாங்கக் கூடியதாகவும்  அவற்றை இற்றைப்படுத்தக் கூடிய துறையாகவும் 'கல்வியியல்' விரிவு பெற்றிருந்தது. ஆகவே, இந்த சமூகப் பின்புலத்தை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு துணை செய்யும் வகையிலும் சமூகப் பொறுப்புடனும் நாம் எமது நூல்களை வெளியிட வேண்டும். இந்தப் பொறுப்புடன் தான் 'கல்விச் சமூகவியல்' என்ற நூல் வெளிவருகின்றது. .
இன்றைய சமகாலக் கல்வி வளர்ச்சி பல புதிய பரிமாணங்களையும் எண்ணக்கருக்களையும் தோற்றுவித்துள்ளது. உலகமயமாக்கல் அல்லது பூகோளமயமாக்கல் என்ற நிலை மேற்கிளம்பி அனைத்தையும் ஊடுருவி வருகின்றது. இன்றைய கல்வி நடவடிக்கைகளும் உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு முகங் கொடுப்பதுடன் மட்டுமல்ல, அதற்கேற்றவாறு இயங்கத் தொடங்கியும் உள்ளது. 'கல்வி' உலகம் தழுவிய நுகர்ச்சிப் பண்டமாகவும் மாற்றப்;பட்டு வருகின்றது. 
இன்றைய நவீன சமூக வளர்ச்சி பற்றி பல்வேறு ஆய்வாளர்களும் கவனம் குவித்து தமது ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் நவீன சமூக வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விளக்கம் அதிகம் வேண்டியுள்ள காலப்பகுதியில் நாம் வாழத் தொடங்கியுள்ளோம். 
ஆகவே, நாம் தற்போது கல்விச் சமூகவியல் என்னும் நூலை வெளியிடுவது மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 'கல்வியின் சமூகவியல்' என்பது சமூகவியலாளரின் ஆய்வுக்களமாகவும் 'கல்விச் சமூகவியல்' என்பது கல்வியியலாளரின் ஆய்வுக்களமாகவும் உள்ளது. இருப்பினும் இரண்டுக்கும் இடையில் புலமைத் தொழிற்பாட்டு ரீதியில் சிறிய இடைவெளி உண்டு. ஆனால், இந்த இரண்டினதும் ஆய்வுகள் ஒன்றை ஒன்று தழுவி அதன் அறிவுக் கையளிப்பை இன்னும்  ஆழமாக்கி விரித்துச் செல்லும் தன்மை கொண்டுள்ளமையையும் நாம் மறுப்பதற்கில்லை. 
பேரா.சபா.ஜெயராசா எழுதிய 'கல்விச் சமூகவியல்' என்னும் நூல் இத்துறைசார் வரவில் ஓர் முன்னோடி முயற்சி என்றே கூறலாம். இதுவரை தமிழில் இத்தகு நூல் இன்னும் வெளிவரவில்லை.
மார்க்சியம், நவமார்க்சியம் மற்றும் தொல்சீர் சமூகவியல், மார்க்சிய சமூகவியல், பின்நவீனத்துவம் போன்ற அனைத்து சிந்தனை மரபுகளையும் உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதிய எண்ணக்கருக்கள் தமிழ் சிந்தனையின் ஓட்டத்தை வளப்படுத்தி  திசைமாற்றுகின்றது. அந்த வகையில் இந்நூலுக்கு முக்கியமான இடமுண்டு.
இதைவிட நவீன சமூகவியல் நோக்கில் பழந்தமிழர்களின் சமூகவியல் சிந்தனை நோக்கப்பட்டுள்ளது. இது கலை, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் போன்ற துறைகளை மீள் வாசிப்புக்கு உள்ளாக்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. 
இந்த அடிப்படையில் பேரா.சபா ஜெயராசா எழுதிய 'கல்விச் சமூகவியல்' என்னும் நூல் வெளிவருவது காலத் தேவை கருதியது என்றே கூறலாம். அறிகை விஞ்ஞானத்தின் எழுச்சிக்கு இந்நூல் ஒரு புது வரவு என்றே கூறலாம். 

தெ.மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி