Full Description (முழுவிபரம்): |
மனித வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஆரோக்கி யமான அறிவு வளர்ச்சிக்கு மெய்யியலின் பங்களிப்பு முக்கியமானது. இன்று பரிணமித்துள்ள பல்வேறு துறைகளும் மெய்யியல் என்ற தாய் விஞ்ஞானத்தில் இருந்து ஊற்றெடுத்தவையே என்றால் அது மிகை யாகாது. குறிப்பாக மேலைத்தேய மெய்யியலின் விருத்தியினை நாம் பரந்து விரிந்துள்ள பல்வேறு துறைகளின் ஊடாகவும் கண்டுகொள்ள முடிகின்றது. அவை அனைத்தையும் ஒரு நூலின் கண் உள்ளடக்குதல் மிகவும் சிரமமானதாகும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளையும், சில கோட்பாடுகளையும், சில சிந்தனைகளையும் சுமந்து 'மேலைத்தேய மெய்யியல்: சில பரிமாணங்கள்' என்ற இந்நூல் வெளிவருகின்றது. இந்நூலின் கண் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் இதுவரை தமிழில் வெளிவந்த மெய்யியல் நூல்களில் பெரிதளவில் விதந்துரைக்கப்படாதவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடு வளம்பெற அந்நாட்டின் ஆட்சியாளன் மெய்யிய லாளனாக இருக்க வேண்டும் என்ற பிளேட்டோவின் சிந்தனைகளை இந் நூலின் முதலாவது அத்தியாயம் விளக்குகின்றது. இலட்சிய அரசில் மெய்யியல் ஆட்சியாளனின் பண்புகள், மெய்யியல் ஆட்சியாளனை உருவாக்குவதற்கான கல்வித்திட்டம், ஆள்வோருக்கான பொதுவுடமை வாழ்க்கைமுறை, இலட்சிய அரசில் இருக்க வேண்டிய சமுதாயக் கட்டமைப்பு என்பன பற்றிய பிளேட்டோவின் சிந்தனைகளை 'பிளேட்டோவின் மெய்யியல் ஆட்சியாளன்' என்ற அத்தியாயம் உள்ளடக்கியுள்ளது. மெய்யியலின் முதன்மையினையும், முக்கியத் துவத்தினையும், மேன்மையினையும் வலியுறுத்தும் பொருட்டு இவ் அத்தியாயம் முதலாவது அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளது.
பயனை அளவுகோளாகக் கொண்டு ஒழுக்கப் பெறுமானங்களை மதிப்பீடு செய்யும் ஒழுக்கக் கொள்கையான பயன்வழிவாதத்தின் பல்வேறு அம்சங்களையும் விபரிப்பதாக இந்நூலின் இரண்டாம் அத்தியாயம் அமைகின்றது. பயன்வழிவாதத்தின் வரைவிலக்கணங்கள், பயன்வழிவாதத்தின் பண்புகள், பயன்வழிவாதத்தின் வரலாற்று வளர்ச்சி, வளர்ச்சிக்குப் பங்காற்றிய மெய்யியலாளர்கள் போன்ற அம்சங்களை 'பயன்வழிவாதம் - ஒழுக்க மெய்யியல் நோக்கு' என்ற அத்தியாயம் உள்ளடக்கியுள்ளது.
காரணகாரியக் கோட்பாடு மெய்யியலில் குறிப்பாக அறிவாராட்சி யியலிலும், விஞ்ஞானத்திலும் முதன்மை பெற்று விளங்கிய ஒரு கோட்பாடாகும். எனினும் அத்தகைய காரணகாரிய உறவின் வழி பெறப்படும் அறிவினை ஐயத்துக்குள்ளாக்கியவர் டேவிட்கியூம். இதற்காக காரணகாரியக் கோட்பாட்டிற்கு எதிராக டேவிட்கியூம் முன்வைத்த விமர்சனங்களையும், அவரது விமர்சனங்களுக்கு எதிரான வாதங்களையும் விபரிப்பதாக 'காரணகாரியக் கோட்பாட்டிற்கு எதிராக - டேவிட்கியூம்' என்ற மூன்றாவது அத்தியாயம் அமைகின்றது.
'கருத்துமுதல் வாதத்திற்கு எதிராக - பேர்ட்டன்ட் ரஸல்' என்ற நான்காவது அத்தியாயம், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் செல்வாக்குச் செலுத்தியிருந்த கருத்துமுதல் வாதத்திற்கு, எதிரான ரஸலினுடைய வாதங்களை விபரிப்பதாக அமைகின்றது. கருத்து முதல் வாதத்திற்கு எதிரான ரஸலினுடைய சிந்தனைகளே நவீன அளவையியலுக்கும், பகுப்பாய்வு மெய்யியலுக்குமான அவரது பங்க ளிப்புக்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
ஐந்தாவது அத்தியாயம் நவீன அளவையியலை அறிமுகஞ் செய்வதாக அமைகின்றது. அளவையியல் என்றால் என்ன? பாரம்பரிய அளவையியலின் குறைபாடுகள் யாவை? நவீன அளவையியல் என்றால் என்ன? நவீன அளவையியலின் வரலாற்று வளர்ச்சி போன்ற விடய ங்களை விளக்குவதாக 'நவீன அளவையியல் ஓர் அறிமுகம்' என்ற அத்தியாயம் அமைகின்றது.
ஆறாவது அத்தியாயம் பகுப்பாய்வு மெய்யியலினை அறிமுகஞ் செய்வதாக அமைகின்றது. பகுப்பாய்வு மெய்யியல் என்றால் என்ன? என்பதனைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைகளை வழங்குவ தோடு, அதன் பிரதான பண்புகளையும், வரலாற்று வளர்ச்சியையும் விபரிப்பதாக 'பகுப்பாய்வு மெய்யியல் - ஓர் அறிமுகம்' என்ற அத்தியாயம் அமைகின்றது.
ஏழாவது அத்தியாயம் மெய்யியலில் பல்பரிமாண சிந்தனைக்கு வித்திட்ட பின்நவீனத்துவத்தை அறிமுகஞ் செய்வதாக அமைகின்றது. பின்நவீனத்துவத்தை புரிந்து கொள்வதற்கான அடிப்படைகளை வழங்குவதோடு, நவீனத்துவத்திலிருந்து முகிழ்ச்சிபெற்ற பின்நவீன த்துவத்தின் பண்புகளை நவீனத்துவத்துடன் ஒப்புநோக்கி விபரிப்ப தாகவும் 'பின்நவீனத்துவம்' என்ற அத்தியாயம் அமைகின்றது.
இந்தவகையில் இந்நூல் மெய்யியலை உள்வாரியாகவோ வெளிவாரியாகவோ பயிலும் மாணவர்களுக்கும், மெய்யியல் ஆர்வலர்களுக்கும் பயனளிக்கவல்லது என்பது நூலாசிரியனான எனது நம்பிக்கை.
- சி.நிரோசன் -
|