Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : பாலன் வருகிறான்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-05-01-002
ISBN : 978-955-0367-01-6
Author Name (எழுதியவர் பெயர்) : கவிஞர் துரையர்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 44
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 240.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

சிறுவர்களுக்குக் கதைகள் எழுதவேண்டும். அதுவும் வயது பன்னிரண்டுக்குட்பட்டவர்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆவல் இந்நூலின் மூலம் நிறைவு பெறுகிறது. குறிப்பாக நான்காம் ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் கதைகளை அமைத்துள்ளேன். விசேடமாக இச்சிறுவர்களின் மொழித்திறன் உளநிலை சமூக ஊடாட்ட நிலைகளை மனதில் வைத்தே ஆக்கியுள்ளேன். 
எதிர்மறைக் கருத்துகளைக் கையாளாது சார்புநிலை நோக்கிலே கதைகளைத் தந்துள்ளேன். நீண்ட வசனங்களைத் தவிர்த்து சிறிய சிறிய வசனங்களிலே கதைகளைத் தருவதால் சிறுவர்கள் நிச்சயம் பயனடைவார்கள். 
எமக்குச் சரியான இலக்கியப் பார்வையை ஏற்படுத்தியவரும் எனது ஆசிரியருமான நீர்வைப் பொன்னையன் அவர்கள் ஏற்ற வகையில் இந்நூலிற்கு முன்னுரையைத் தந்து சிறப்பித்தமைக்கு முதல் நன்றிகள். குறிப்பாக அட்டை ஓவியம் உட்பட கதைகளுக்குரிய படங்களையும் கீறிய ஓவியர் தவம் அவர்களுக்கும் நன்றிகள். சிறப்பாக  மிகவும் எடுப்பாக எனது விருப்பிற்கேற்ப அச்சுவாகனமேற்றித் தமது பத்மம் பதிப்பகம் மூலம் நூலினை வெளியீடு செய்யும் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை எத்தனை தரம் கூறினும் தகும். 

சு.துரைசிங்கம்

Full Description (முழுவிபரம்):

சிறுவர் இலக்கியத்தில் மூன்று வகையுண்டு. அவைகள் பாடல்கள், கதைகள், நாடகங்களாகும். ஆரம்பத்தில் பாடல்களும் கதைகளும் வாய்மொழி இலக்கியங்களாக இருந்தன. 

கதைகளைப் பொறுத்தமட்டில் பாட்டி சொன்ன கதைகள், பேய் பிசாசுக் கதைகள், வேதாளக் கதைகளாகக் கூறப்பட்டு வந்தன. பின்னர் தேவதைக் கதைகள், வீரசாகசக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், விகடராமன் கதைகள் போன்ற பல்வகைக் கதைகளாக விரிவடைந்தன. சிறுவர் இலக்கியப் படைப்பு மிகச்  சிரமமானது. கடினமானது. சிறுவர் இலக்கியம் படைக்கும் பொழுது படைப்பாளி சிறுவனாகவே மாறிவிடுகின்றான். அப்பொழுதுதான் அப்படைப்புச் சிறந்த சிருஷ்டியாக இருக்கும். 
 
‘ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடல் எழுதும் பொழுது பாரதி பாப்பாவாகவே மாறிவிடுகின்றான். ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை” என்ற பாடலைத் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் எழுதும் போது சிறுவனாகவே மாறிவிடுகின்றார். 
 
கதைகளைப் படைக்கும் பொழுது படைப்பாளி அப்படைப்புக்களிலுள்ள பாத்திரங்களில் ஒன்றாக ஜென்மமெடுத்து விடுகின்றான். அப்பொழுதுதான் அவனது கதை சொல்லும் பாணி இயல்பாகவே சிறுவர்களுக்கானதாக அமைந்துவிடும். படைப்பு சிறுவர்களுக்கான படைப்பாக அவதாரமெடுத்துவிடுகின்றது. இப்படிப்பட்ட படைப்பில் சிறுவர் பேசும்மொழி, அவர்களது உணர்வுகள், குணவியல்புகள், அப்படைப்புகளில் இயல்பாகவே வெளிப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட படைப்புக்களைத்தான் சிறுவர்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அதுமாத்திரமல்ல இப்படிப்பட்ட படைப்புகள் சிறுவர்களை இலகுவில் ஆகர்ஷித்து விடுகின்றன. இப்படைப்புகளை சிறுவர்கள் தமது இலக்கியமாக வரித்துக் கொள்கிறார்கள். 
 
தேவதைக் கதைகளில் ஒன்றான ‘சின்றில்லா” கதை இனம், மதம், மொழி, நாடு, காலதேச வார்த்தமானங்கள் அனைத்தையும் கடந்த படைப்பாகச் சிறுவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருகின்றது. அது சிரஞ்சீவியாகச் சிறுவர் இலக்கியப் படைப்பாக உள்ளது. வீரசாகப் படைப்புகளான றொபின் ஹ{ட், ஹேர்குளிஸ், கலிவர் அன் த லிவ்வி புட்ஸ் போன்ற சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் சிறுவர் உலகில் உன்னத ஸ்தானத்தை வகிக்கின்றன.
 
சிறுவர் கதைகளைப் படைக்கும்பொழுது அவை சிறுவர்களை ஆகர்ஷிக்கக்கூடிய பாத்திரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலே கூறப்பட்ட றொபின் ஹ{ட், ஹேர் குளிஸ் போன்ற பாத்திரங்கள் சிறுவர்களை இலகுவில் ஆகர்ஷித்துவிடக் கூடியனவாக இருக்கும். அத்துடன் வீரதீர பாத்திரங்களைப் படைக்கும்பொழுது  அப்பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அப்பாத்திரங்களை படைப்பாளி உருவாக்க வேண்டும். மேலும் அப்பாத்திரங்கள் பேசும் மொழியாக அமைக்கப்பட வேண்டும். அத்துடன் அப்பாத்திரங்கள் பேசும் மொழி இலகுவானதாகவும் இயல்பானதாகவும் அப்பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய மொழியாகவும் இருத்தல் வேண்டும்.
 
தமிழகத்தில் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிகளான தேசிய விநாயகம்பிள்ளை, பூவண்ணன், அழ வள்ளியப்பா போன்ற படைப்பாளிகள் உன்னத சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளாகத் திகழ்கின்றனர். பாரதி கூட ‘ஓடி விளையாடு பாப்பா”, ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா” போன்ற பல உன்னதமான சிறுவர் இலக்கியப் படைப்புக்களை சிருஷ்டித்துள்ளனர். 
 
இலங்கையில் தங்கத்தாத்தா, சோமசுந்தரப்புலவர், வேந்தனார், பீதாம்பரம், ககை செந்திநாதன், சத்தியசீலன், அம்பி, அனுவை நாகராஜன், வ.இராசையா, ஏ.இக்பால், இ.நாகராஜன், செ.யோகநாதன், திக்வல்லை கமால் போன்ற சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் என்று குறிப்பிடத்தக்கவர்கள் இப்படைப்பாளிகளுடன் துரையரும் இணைகின்றார். 
 
துரையர் தனது பதினாறவது வயதில் எழுதிய கவிதை வீரகேசரியில் பிரசுரமானதிலிருந்து அவரது இலக்கிய யாத்திரை ஆரம்பமாகின்றது. கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பாடஞ்சார் நூல்கள் போன்ற பல்துறைகளில் துரையர் தடம்பதித்துள்ளார்.
 
தெருவிளக்கு என்ற கவிதைத் தொகுதியையும் ஆடும் மயில், எங்களுக்காக என்ற சிறுவர் பாடல்கள் தொகுதி இரண்டையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் கவிக் குரல்கள் கவிதை ஒலிப்பதிவு நாடா ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஆறுக்கும் மேற்பட்ட பாடஞ்சார் நூல்களையும் வெளியிட்டுள்ளார் துரையர். தற்பொழுது பாலன் வருகிறான் என்ற இந்த சிறுவர் நூலை வெளியிட்டுள்ளார்.
 
பாலன் வருகிறான் என்ற இந்த சிறுவர் நூலில் பத்து கதைகள் உள்ளடக்கப்படுகின்றன. ‘தெய்வங்கள்” என்ற கதையில் கலா என்ற மாணவியின் குரு பக்தி வெளிப்படுகின்றது. ரமேஸ் என்ற மாணவன் தனது சக மாணவன் வறுமையை தனது பெற்றோரதும் அதிபர், ஆசிரியரதும் உதவியுடன் அகற்ற வழிவகுக்கின்றான். பாலாவும் மீண்டும் ரமேஸ{டன் கல்விகற்க இணைக்கின்றான். அதே போலத்தான் மாணவர்கள் நான்குபேர்களை அவர்களது பெற்றோரது தொழிலின்மையை, சமூக மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரியின் உதவியுடன் அகற்றி, அந்த நால்வரது படிப்பைத் தொடர வழிவகுக்கின்றார். டாக்டர் குணா என்ற கதையில், தனது நோய்வாய்ப்பட்ட ஆசிரியையின் அவரது இறுதிக்காலத்தில் தன் வீட்டில் தஞ்சமளித்து அவரது தயாளகுணத்தையும் குரு பக்தியையும் வெளிப்படுத்துகின்றார் துரையர். அதேபோல கூட்டம் கலைந்தது. சாதனை, சில வேளைகளில், கச்சேரி செய்யலாம், சந்திரனின் துணிவு, பொறுப்புணர்வு போன்ற கதைகளை எழுதியுள்ளார். 
 
இந்த நூலிலுள்ள கதைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஆசிரிய மாணவர்களது உறவுகள், செயல்பாடுகள், சாதனைகள், இரக்க சிந்தை, கருணை போன்ற நற்பண்புகள் வெளிக்கொணரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. துரையர் ஓர் ஆசிரியராக இருந்தமையினால் அருட்டுணர்வுகளினால் இக்கதைகளைப் புனைந்துள்ளார். 
 
இக்கதைகளை மாணவர்கள் படித்து இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் எதுவித சிக்கல்களுமில்லாமல் இலகு தமிழில் சிறு சிறு வசனங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக  உள்ளது. துரையர் சிறுவர்களின் ஏனைய சமூகப் பிரச்சினைகளிலும் வீரதீர செயல்கள், அர்ப்பணிப்புகள், தியாகங்கள் போன்ற அம்சங்களை வெளிக்கொணரும் பக்கமும் தமது பார்வையை திருப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பாலன் வருகிறான்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு