இன்று நாளாந்தம் சமூகஅறிவியல், இயற்கை அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறைகளில் ஆராய்ச்சிகளினூடாக அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பாடசாலைகளில் பெறப்படும் அறிவும் திறன்களும் சிறிது காலத்தின் பின் காலாவதியாகிப் போகின்றன. அவை பயனற்றும் பொருத்தமற்றும் போகின்றன.
ஆகவே, பாடசாலைக் காலத்தின் அறிவையும் திறன்களையும் மாணவர்கள் சுயமாகக் கற்றுக் கொள்ள வேணடிய அவசியம் ஏற்படுகின்றன. இதனால் வாழ்நாள் முழுவதும் அறிவையும், திறன்களையும் புதுப்பித்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான், புதிய அறிவியல் தொழில்நுட்ப சமுதாயத்தில் இணங்கி வாழ்வது சாத்தியமாகும்.
எனவே, பாடசாலைக் கல்வியானது மாணவர்கள் விலகிய பின்னரும் புதிய அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் முறையில் சுயமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதாக இருத்தல் வேண்டும். சுயஅறிவு, சுயதேடல், சுயகற்றல் போன்ற அம்சங்களை வலியுறுத்தும் கல்விச் செயற்பாடுகள் எம்மிடையே விரிவுபெற வேண்டும்.
ஆகவே, மாணவர்களது சுய கற்றல், சுயஅறிவு, சுயதேடல் போன்ற பண்புசார் விருத்திக்கமைய கற்றல்-கற்பித்தல் செயன்முறை அமைய வேண்டும். இதற்கான புதிய வழிமுறைகள் பற்றிய கற்றலும் தேடலும் சமகாலத்தில் ஆசிரியர்களுக்கு முனைப்பாக இருக்க வேண்டும்.
இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன. ஆகவே, பழைய அனுபவங்கள் பயனற்றுப் போகின்றன. கற்றல் - கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றன.
விருத்தியுறும் புதிய அறிவுத்தொகுதியைக் கையளிக்கும் கல்வி உளவியல் புதிய சிந்தனையும், நோக்கு முறையும் கொண்டிருக்க வேண்டும். இவை ஆசிரியர்களுக்கு திடமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயக் கல்வி பெறும் காலத்திலேயே அவர்கள் கற்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்குரிய அறிவும் திறன்களையும் புதுப்பித்துக் கொள்வதற்கான கற்றல் - கற்பித்தல் செயன்முறை விரிவு பெற வேண்டும். ஆகவே, இதை மேம்படுத்தக்கூடிய சிந்தனைகள் வழிமுறைகள் பற்றிய புதிய நோக்குமுறைகள் வேண்டும்.இதனையே இந்நூல் வலியுறுத்துகின்றது.
சலிப்புட்டும் கற்றற் செயன்முறையிலிருந்தும் அதற்குத் துணையாக வுள்ள பழைய சிந்தனை முறையிலிருந்தும் முதலில் ஆசிரியர்கள் விடுபட வேண்டும். எப்போதும் சுயதேடல், சுயகல்வி என்ற பண்புசார் விருத்தி ஆசிரியத்துவத்தின் உயிர்ப்பு மையமாக அமைய வேண்டும். கற்றல்-கற்பித்தல் செயன்முறை சார்ந்த புதிய விளக்கங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தம்மைத் தயார்படுத்தக் கூடிய சுயவிளக்கம், சுயதேடல் இல்லாமல் ஆசிரியர் தமது பொறுப்பை செயற்படுத்த முடியாது. மாறிவரும் உலகில் ஆசிரியர் வகிபாகம் என்ன என்பது வெறும் கேள்வியாக மட்டுமல்ல, அவை சிந்தனையும் செயல்வாதமும் புதிய நடத்தைக்
கோலங்களுக்குமான பண்பு விருத்திகளையும் கொண்டுள்ளன.
இத்தகு அம்சங்களையும் உணர்ந்து கொள்ளவும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் செயற்படுவதற்குமான உந்துதலைத் தரும் நோக்கிலேயே இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, இன்றைய தமிழ் பேசும் சூழலில் கற்றல் - கற்பித்தல் செயன்முறைகள் சாரந்து புதிய தேடலுக்கும் புதிய சிநத்னைககும் தேவைகள் மிகுநதுள்ன. இதற்கு இந்நூல் புதிய வாயில்களைத் திறக்க வேண்டும் அல்லது முன்னுரை இந்நூல் தரும் வெளிச்சத்திலிருந்து நாம் மீறல் வகைப்பட்ட தெரிவுகளுக்கும் தேடல்களுக்கும் செல்வதற்குத் துணை செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.
இத்தகு பொறுப்புக்களை தீவிரமாக உணர்த்தி நிற்கும் நூலாக பேரா.மா.கருணாநிதி இந்நூலை அமைத்துள்ளார். ஆசிரியர்களது தொழில்சார் விருத்திக்கு இந்நூல் ஒரு கைந்நூலாகவும் அமைந்துள்ளது. இந்த ஆக்கம் மூலம் யாவரும் பயன்பெற்றுச் சிறக்கவும், தமிழ்க் கல்விச் சூழலில் தரமான கற்றல் - கற்பித்தல் சூழல் மேம்பாடு அடையவும் வழிகிடைக்கட்டும்.
தெ.மதுசூதனன்
|