Book Type (புத்தக வகை) : கலைகள்
Title (தலைப்பு) : மொழிக்காலனித்துவமும் பரதநாட்டியமும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-08-01-021
ISBN : 978-955-1857-20-2
EPABNo : EPAB/02/18854
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • முன்னுரை
  • ஆசிரியர் உரை
  • வெளியீட்டாளர் உரை
  • வளம் வேண்டல் ஆடலும் பரத நாட்டியமும்
  • பரதநாட்டியமும் நிலமானிய சமூகத் தொடர்பாடலும்
  • பரதநாட்டியமும் சமஸ்கிருத மொழிக்காலனித்துவமும்
  • ஆடலின் உளவியற் பரிமாணங்கள்
  • பரத நாட்டியமும் தமிழகச் சமூகமும்
  • உலக அழகியற் கோட்பாடுகளின் மேலெழுச்சியும், சடங்குகள் வழியான தமிழர் அழகியலைக் கண்டறிதலும். 
 
Full Description (முழுவிபரம்):

'ஆடலின் ஆற்றுகைப் பரிமாணங்கள் உன்னத வளர்ச்சியடைந்த அளவுக்கு அதன் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சி எழுச்சி கொள்ளவில்லை' என்பார் பேராசிரியர். சபா. ஜெயராசா. இதனால், தானே இதற்கான ஆய்வு அறிவு நிலைப்பட்ட காரணங்களை வரலாற்று ரீதியிலும், புலமைத்துவ ரீதியிலும் முன்வைக்கும் நுண்ணாய்வுக் கூறுகளை சிந்தனை மரபுகளை ஆடலியல் முறைகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.
குறிப்பாக இவர் தமிழ் நிலைப்பட்ட கலைப்பண்புகளை சமூக வரலாற்று அரசியல் பண்பாட்டு பின்புலங்களில் வைத்து ஆய்வு செய்வதற்கான தடங்களை அகலித்து ஆழமாக்கி வருகின்றார். இதனால், கருத்துநிலை மற்றும் அரசியல் சார்ந்த உரையாடல்களுக்கான புள்ளிகளை மிக நிதானமாகச் சுட்டுகின்றார். இதன் தருக்க வினைப்;பாடுதான் 'மொழிக் காலனித்துவம்' என்னும் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்க வளர்ச்சி சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், உளவியல், அரசியல், கலையியல் போன்ற சமூக அறிவியல் துறைகளின் பன்முக ஊடாட்டம் சார்ந்து பரதநாட்டியத்தை ஆராய வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றது. இந்த நூல் இதற்கான சாத்தியப்பாடுகளை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.
பரத நாட்டியத்தின் விளக்கத்துக்கு நாட்டிய சாஸ்திரத்தை துணையாகக் கொள்ளும் மரபு சமஸ்கிருதக் கல்வியின் வளர்ச்சியோடு நிலைபேறு கொள்ளும் போக்கு படிப்படியாக வலுப்பெறத் தொடங்கின. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் கல்வியியல் நிகழ்ச்சிகள் பரதநாட்டியத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்குக்கு வழிசமைத்தன. 
ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட இந்தியப் பண்பாட்டில் உயர்ந்தோர் குழாத்தினரின் மொழியாக சமஸ்கிருதம் அமைந்திருந்தது. மேலும் வேத மரபுகளின் மொழியாகவும் காவியங்கள் இலக்கியங்கள் கலைகள் முதலியவற்றின் மொழியாகவும் சமஸ்கிருதமே இருந்தது. ஆடல் தொடர்பான பல நூல்கள் சமஸ்கிருத மொழியிலேயே காணப்பட்டன. 
விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதத்தின் ஊடுருவல் தமிழகத்தில் பெருமளவு நிகழ்ந்தது. அரச நிருவாக நிலையில் மட்டுமன்றி பண்பாட்டு நிலையிலும் சமஸ்கிருதத்தின் ஆட்சி மேலோங்கியது. பரதநாட்டியம் சமஸ்கிருத அறிகை மயப்படுவதற்கு இந்நிகழ்ச்சிகள் மேலும் வலுவளித்தன.
இந்திய சுதந்திரப் போராட்டம் இந்திய சமூகப் படிமுறையில் உயர்நிலையில் வாழ்ந்த சுதேசிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அமைந்தது. அக்காலத்தில் சுதேச கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இவ்வேளை பரதநடனம் மீட்டெடுப்புக்கு உள்ளாயிற்று. மேல்நிலை மக்கள் புலக்காட்சிகளுக்கு ஏற்றவாறு பரத நடனத்தை கட்டுமானம் செய்தனர்.  
இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய பரதநாட்டிய மீட்பு இயக்கத்தை ஈ.கிருஷ்ணஐயர், ருக்மிணி அம்மையார் முதலியோர் தமிழகப் பின்புலத்திலே முன்னெடுத்தனர். இவர்கள் தமிழக சமூக உயர்நிலையில் உயர்ச்சியுற்றவர்களாக இருந்தார்கள். இதனால் அவ்வகுப்புக்குரிய  புலக்காட்சி பரதநாட்டியத்திலே செல்வாக்குச் செலுத்தியது. இவ்வகையிலே பரதநாட்டியத்தில் சமஸ்கிருதத் தொடர்புகள் வலிமைப்படுத்தப்பட்டமை. நிறுவன முறைக்குள் கொண்டு வந்தமை ஆங்கிலப் பரிச்சியத்துக்கு உட்படுத்தியமை முதலியவை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாக உள்ளன. 
ஆக பரத நாட்டியம் மீது மொழிக்காலனித்துவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது என்பதை மிகத் துல்லியமாக இந்நூல் தெளிவுபடுத்துகிறது. நாம் இனி என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நமக்கான கலை மரபாக மீட்டெடுக்க முடியும். என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான ஆய்வு செய்வதற்கான தடங்களை களங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இவை இந்நூலின் சிறப்பு எனலாம். 
இந்தப் பின்புலத்தை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. குறிப்பாக எமது சூழலில் நுண்கலைகள் மற்றும் பரதம் தொடர்பிலான ஆய்வுகள் பெரும் குறைபாடாகவே உள்ளன. இந்தக் குறைபாட்டை நீக்கும் பொருட்டே பேராசியரியர் சபா. ஜெயராசா அவர்களது நூல்கள் அமைந்துள்ளன. இந்த நூல் இத்துறைசார் வெளியீட்டில் தனித்துவமாக விளங்கும் நூலாகும். ஆய்வு நோக்கில் சிந்திக்கவும் மேலும் மேலும் ஆய்வு செய்யவும் இந்நூல் புதுவெளிச்சம் பாய்ச்சும். 

தெ.மதுசூதனன்