Full Description (முழுவிபரம்): |
அரஃபாத் - விடுதலை – ஆயுதப்போர் – உடன்படிக்கை
அரபாத் - விடுதலை – ஆயுதப்போர் பலஸ்தீன உடன்படிக்கை என்ற இந்நூல் நீண்ட வகுப்பறை உரையாடலின் பின்பு வெளிவருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக அரசறிவியலின் பாடப்பரப்பில் ஓர் அலகாக 'பலஸ்தீனம் - இஸ்ரேல்' என்ற பகுதி கற்பிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு அரசியலையும், பிராந்திய, சர்வதேச பரிமாணத்தையும் இப்பகுதியில் கற்பிக்கும்போது மாணவர்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களை தீர்க்கும் முகமாக உருவானதே இந்நூலாகும். இதனை எனது மாணவர்களுடன் சேர்ந்து எழுதுவதில் பெருமையடைகிறேன். எனது கற்றலுக்கு மாணவர்களே ஊக்கிகளாக விளங்குகின்றனர். அவர்களது ஆவலும், தேவையும் எனக்குரிய தேடலை தருகின்றது. இந்நூலில் இரண்டு மாணவர்கள் நேரடியாக தமது கட்டுரைகளை தந்து உதவியுள்ளனர் ஏனைய மாணவர்கள் வகுப்பறையில் கலந்துரையாடல் மூலமும், கருத்துரைகள் மூலமும் உதவியுள்ளனர்.
இந்நூலில் மொத்தமாக ஆறு கட்டுரைகள் அடங்கியுள்ளது. அனைத்தும் பலஸ்தீனம் பற்றியதாகும். பலஸ்தீனத்தின் அரசியல் வரலாறு தனித்துவமானது. புpராந்திய அரசியலிலும், சர்வதேச அரசியலின் பங்களிப்பிலும் ஏதோ ஒருவகையில் வேறுபாடான அடையாளத்தினை தருகிறது. அவ்வகை தனித்தன்மை கொண்ட பலஸ்தீனம் சந்தித்துவரும் ஒவ்வொரு மாற்றங்களையும் அறிவியல் ரீதியில் அளவிடுவது அவசியமானது. அதன் ஆயுதப்போராட்ட வரலாற்றின் படிமங்கள் ஏற்படுத்தியிருந்த தேசியத்தன்மை பிற தேசிய இனங்களுக்கு அவசியமானது. அவ்வாறே அதன் ஆரம்பமும் முடிவும் பிறதேசிய அரசுகளுக்கு தெளிவான திசையை காட்டக் கூடியது. மேலும் சமாதான உரையாடல்கள் அதில் ஏற்பட்டுவந்த இராஜதந்திர நகர்வுகள் என்பன அறிவியல் ரீதியில் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இன்றைய உலக அரசியல் பொருளாதார தேவைகளுக்குள் ஏற்பட்டுவரும் மாறுதலை அடையாளம் காண்பதற்கூடாக உருவாக்கக்கூடிய குறைந்தபட்ச அரசுகளின் பலத்தை அளவிடுதல் வேண்டும். அவ்வாறே சில தனிமனித சரித்திரங்கள் தேசங்களின் நலனை எப்படி சாத்தியப்படானதாக உருவாக்குகின்றது என்பதை தெரிந்துகொள்வது முதன்மையாக உள்ளது. அவ்வகை தனிமனித பதிவுகளுக்கு ஏற்படும் வெற்றிடங்கள் புதிய சமூகத்தில் உருவாக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய மாற்றத்தையும் விளங்கிக்கொள்வது அவசியமானது.
மொத்தத்தில் உலக அரசியல் பொருளாதார தளம் விரிந்திருக்கும் பரப்பெல்லைக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக தனியரசுக்கான போராட்டங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. 21ம் நூற்றாண்டில் உலக அரசுகளின் அரசியல் - பொருளாதார நலனுக்குட்பட்டதாக அமைந்திருக்கும் தேசிய பிரக்ஞை புதிய வடிவத்துக்குள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை ஈர்த்துள்ளது. ஆயுத வழியிலானதாக அமைவதையோ, இறைமை சார்ந்து அமைவதனையோ இழந்து அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததாக மாறிவருகிறது. அதிலும் வர்த்தக உலகத்திற்குள் நிலவும் போட்டியும், போரும் புதிய திசைக்குள் தேசியத்தின் அடையாளத்தை வரித்துள்ளது. தேசங்களும், பெரிய தேசிய இனங்களும் நீண்ட நெடிய நாகரிகத்தைக் கொண்ட தேசங்களுமே தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான தேசவலுவை பேணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சிறிய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தேசிய இனங்கள் காணாமல் போவதும், அடிமைப்படுவதும், தந்திரமாக தப்பிப்பிழைப்பதும் அவைசார்ந்த தேசிய அரசுகளின் நலன் பொறுத்ததாகவே உள்ளது. பலஸ்தீன விடுதலை தெளிவான அனுபவத்தினை பெற்றுள்ளது. பிறதேசிய இன அரசுகளும், இனத்தேசியங்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமாகும். இதனை விளங்கிக்கொள்ளும் முயற்சியில் இந்த நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.
இறுதியாக இந்நூல் உருவாக்கத்திற்கான ஒத்துழைப்பை வழங்கிய மாணவர்களுக்கு முதலில் நன்றிகள் குறிப்பாக என்னோடு உதவி விரிவுரையாளராக பணியாற்றும் திரு எஸ். திருச்செந்தூரனுக்கும் திரு. ரீ. விக்னேஸ்வரனுக்கும் மற்றும் அவர்களது சகநண்பர்களுக்கும் நன்றிகள் மற்றும் பதிப்பகத்திற்கும் அதற்கு உதவியவர்களுக்கும் நன்றிகள் மேலும் என்னை வழிநடத்தும் எனது ஆசிரியரும் பேராசிரியருமான அ.வே. மணிவாசகர் அவர்களுக்கும் எனது துறை விரிவுரையாளர்களான திரு. ஆர். இராஜேஸ்கண்ணாவுக்கும் திரு. எஸ். சிறிக்காந்தனுக்கும் நன்றிகள் எல்லாவற்றிற்கும் மேலாக எம்மை உருவாக்குவதிலும் தெளிவான பார்வையை ஏற்படுத்துவதிலும் மகிழ்விலும் நெருக்கடிகளிலும் உறுதுணையாக விளங்கும் துணைவேந்தரும் பேராசிரியருமான என். சண்முகலிங்கன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றிகள் மேலும் எனது மனைவி, பிள்ளைகளுக்கும் அவர்களது ஒத்துழைப்புக்கும் எனது நண்பர்களுக்கும் நன்றிகள்.
கே.ரீ. கணேசலிங்கம்.
தொகுப்பாசிரியர்
தொகுப்பாசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்
தலைவர், சமூகவியல்துறை
யாழ் பல்கலைக்கழகம்.
|