எம்மை வாழ வைத்தவர்கள் |
ஆசியாவிலேயே எழுத்தறிவுள்ளோர் விகிதாசாரத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை, சிறப்பாக யாழ்ப்பாணம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எம் நாட்டில் கால் பதித்த பின்னர் ஆங்கிலக் கல்வியே சமூக அசைவியத்திற்கு பிரதான காரணமாக இருந்தமையால் ஆங்கிலக் கல்வி மிக முக்கியத்துவம் பெற்றது. தம்பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்பினர். விருப்பத்திற்கும் வசதிக்குமிடையே நெடிய தூரம். அத்தூரத்தினை குறுகியதாக்கி சந்தர்ப்பத்தினைச் சாதகமாக்க முயன்றனர் தமது சமயத்தைப்பரப்ப வந்த வெளிநாட்டவர். எம்மக்கள் ஆங்கிலக் கல்வி அறிவில் முன்னிலை வகிப்பதற்கு வித்திட்டவர்கள் கத்தோலிக்க, அமெரிக்க திருச்சபையினரும் மிஷனறிமார்களும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களின் பிரதான நோக்கம் சமயமாற்றம் என்பதை உணர்ந்த நம்மவர்கள் கவலையுற்றனர். எனவே அவர்களுக்குப் போட்டியாக நம்மவர்களில் வசதி படைத்த, சமூக மேம்பாடு கருதிய பெருமக்கள் பாடசாலைகள் தொடக்கியது கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் அனுகூலமாகியது. இவர்களில் சிலர் தனியே பாடசாலைகளை நிறுவினர் இன்னும் சிலர் ஒரு குழுமமாகி அதன் மூலமாக பாடசாலைகளை நிறுவினார்கள். |