Full Description (முழுவிபரம்): |
மெய்யியல் கற்கைப்புலம் மிக அகலமானதும் ஆழமானதும் ஆகும். ஏனைய துறைகளுள்ளும் புகுந்து நின்று கோலோச்சும் துறையிது. இந்திய - இந்து மெய்யியற் கற்கைப் புலத்தில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளமையைப் பேறெனக் கருதலாம். மரபுவழிக் கல்வியாளர்களிடமும் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிக, மெய்யியற்துறைகளின் புலமைத்துவம் சார் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடமும் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் வழி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நா.ஞானகுமாரன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 'சைவசித்தாந்த, காஷ்மீரசைவ மெய்யியலமைப்பு - ஓர் ஒப்பீட்டாய்வு' எனும் தலைப்பில் முதுதத்துவமாணி கற்கை நெறியை மேற்கொண்டு அதனை நிறைவு செய்தேன். அவ்வாய்வும் அதன் வழி பெற்ற அறிவையும் அடிப்படையாகக் கொண்டு 'காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்' எனும் இந்நூல் வெளிவருகின்றது.
இந்திய தேசமெங்கும் பரவியிருந்த சைவம் பெருஞ்சமயமாக - தத்துவமாக அமையும் விதத்தில் தன் கட்டமைவுகளைத் தக்கவைத்துக் கொண்டது. அந்த வகையில் காஷ்மீரத்தில் நிலவிய ஒருமைவாத சைவத்தையும் தமிழ்நாட்டில் நிலவிய பன்மைவாத சைவசித்தாந்தத்தையும் ஒப்பிடுவதாக இந்நூல் அமைகிறது. அதேவேளை காஷ்மீரத்தில் சத்தியஜோதி உள்ளிட்டோரால் பன்மைவாத சைவமான சைவசித்தாந்தம் நிலைப்படுத்தப்பட்டதையும் அதற்கான நூல்களாக அஷ்டப்பிரகரண நூல்கள் திகழ்கின்றன என்பதையும் அறிய முடிகிறது. அத்தோடு காஷ்மீர சைவத்தின் முக்கியஸ்தரான அபிநவகுப்தரின் குரு சம்புநாதர், அர்த்த திரியம்பக சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்; அவரின் குருவும் பரமகுருவும் முறையே சோமநாதரும் சுமதிநாதருமாவர். இவர்கள் தென்னாட்டவர்கள்: மஹார்த்தமஞ்சரீயின் ஆசிரியர் தன்னூலுக்குத் தான் எழுதிய பரிமலம் எனுமுரையில் தம்குரு சோழநாட்டவர் என்கிறார். இது தமிழ்ச் சைவப்பாரம்பரியத்தின் தொன்மையைக் காட்டுகின்றது.
அதேவேளை, இந்திய மெய்யியலுக்குத் திராவிடர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். பௌத்தத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்த தஞ்சைத் தமிழர்கள் மற்றும் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்துவர், சைவசித்தாந்த மரபினர் என இப்பட்டியல் நீள்கிறது.
இதன்வழி இவ்விருசைவ மெய்யியல்களையும் ஒப்பிடுதல் ஒரு தத்துவார்த்தத்தை தரும் எனலாம். தமிழில் சோ.ந.கந்தசாமி, நா.ஞானகுமாரன், டி.பி.சித்திலிங்கையா போன்ற சிலரே காஷ்மீரசைவம் பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர். காஷ்மீரசைவம் என்ற தலைப்பில் பெ.திருஞானசம்பந்தன் சிறுநூலொன்றை எழுதியுள்ளார். அந்தவகையில் இவ்வொப்பீட்டாய்வு தமிழின் முன்முயற்சியாக அமைகிறது.
இந்நூல் வெளிவர உதவிய எனது முதுதத்துவமாணி மேற்பார்வையாளரும் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவருமான சிரேஷ்ட பேராசிரியர். நா.ஞானக்குமாரன் அவர்களுக்கும், எப்போதும் என்னை ஊக்குவிக்கின்ற இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் அவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும், இவ்வாராய்ச்சிக்குப் பேருதவி புரிந்த என் பிதாமகர் திரு.சோ.பத்மநாதன் அவர்களுக்கும், பிரம்மஸ்ரீ ச.பத்மநாப ஐயருக்கும், இந்நூலை வெளியிடுகின்ற சேமமடு பதிப்பகத்துக்கும், மற்றும் உடன்பிறவாச் சகோதரர் திரு.தெ.மதுசூதனன் உள்ளிட்ட யாவர்க்கும் நன்றி.
நூலில் ஏதேனும் குறையிருப்பின் அதனை விமர்சன ரீதியாகத் தெரிவிப்பின் திருத்திக்கொள்ள வாய்ப்புண்டு. நண்பர்களும் வாசகர்களும் வழிகாட்டுவார்களாக.
நன்றி
தி. செல்வமனோகரன்
141, கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
|