Book Type (புத்தக வகை) : தொகுப்பு
Title (தலைப்பு) : வித்தியின் தமிழியற் பதிவுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-05-01-074
ISBN : 978-955-1857-37-0
EPABNo : EPAB/02/18613
Author Name (எழுதியவர் பெயர்) : சு.வித்தியானந்தன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 128
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • நாவலரும் தமிழகமும்
  • நாவலர் இருவர்
  • நாவலர் சாதனைகளும் நம்மை எதிர்நோக்கும் பணிகளும்
  • ஈழமும் தமிழ் இலக்கணமும்
  • ஈழத்தில் தமிழ் இலக்கியம்
  • ஈழத்திற் கிறித்தவரின் தமிழ்ப்பணி
  • ஈழத்திலே சமயமும் கல்வியும்
  • ஈழத்தின் கிராமிய நாடகங்கள்
  • ஈழத்தில் நாட்டுக்கூத்து மரபு
  • இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்
  • இஸ்லாமியரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும்
  • மட்டக்களப்புத் தமிழகத்தில் விஷ்ணு வழிபாடு
  • மன்னார் - முல்லைத்தீவு நாட்டுப்புறபாடல்கள் ஓர் ஒப்பியல் நோக்கு
  • கண்ணகி வழிபாடும் கண்டிப் பெரஹராவும்
Full Description (முழுவிபரம்):

மறைந்த மூதறிஞர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் வாழ்க்கைப் பணிகளையும் சாதனைகளையும் தமிழ்த் துறைப் பங்களிப்பையும் நினைவு கூறுமுகமாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியின்போது அன்னார் எழுதிய பல பிரதான கட்டுரைகளின் தொகுப்பொன்று வெளியிடப்படுவது மனங்கொளத்தக்கது. இம்முயற் சிக்குப் பெரிதும் உதவிய சேமமடு பதிப்பகத்தார் திரு.பத்மசீலன், நினைவுக்குழுவின் பிரதான உறுப்பினர் திரு.மதுசூதனன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அண்மைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியரின் எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் செய்துவரும் இவர்களின் தமிழ்ப்பணி பெரிதும் வரவேற்கத்தக்கது.
பேராசிரியர் அவர்கள் காலஞ்சென்ற பின்னர் உருவாகிய புதிய தலைமுறையினரான தமிழ்பேசுவோர், பேராசிரியர் மற்றும் அவர் போன்று தமிழ்ப்பணி ஆற்றியவர் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுண்டு. நவீன தலைமுறையினர், நவீன தொழில்நுட்ப, கணினிக் கல்வியைப் பெறுகின்ற அதேவேளையில் பேராசிரியர் போன்றோரின் தமிழ்ப் பணிகள் பற்றிய கலாசாரக் கல்வியைப் பெற இந்நூல் முயற்சி பெரிதும் உதவும் என்பது எமது நம்பிக்கை. 
காலங்காலமாக மரபுவழிக் கல்வியாக இருந்து வந்த தமிழ்க்கல்வி, 1942ஆம் ஆண்டின் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரதான கற்கைத் துறையாக நிறுவப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, தென்கிழக்கு ஆகிய பல் கலைக்கழகங்களிலும் பரவியது. மரபுவழித் தமிழ்க் கல்வியைக் கற்பிக்கும் புலமை மிக்கவர்களின் வீழ்ச்சியுடன் உயர்நிலையில் தமிழ்க்கல்வியானது பல்கலைக்கழகங்களின் ஏகபோக உரிமையா யிற்று. தற்போது இத்துறையில் ஈடுபாடு காட்டும் மரபு வழித் தமிழ்க் கல்வி நிறுவனங்களை அதிகம் காணுவதற்கில்லை என்பது சற்று வருந்தக்கூடிய விடயமே. 
தமிழ்க்கல்வியை உயர்நிலையில் கற்பிக்கும் பணியை ஏற்றவர் களில் பலர் மரபுவழித் தமிழ்க் கல்வியையும் பயின்றவர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் சதாசிவம் போன்றோர் இதற்குச் சிறந்த உதாரணங்கள். 1960களில் பண்டிதர் பொன். முத்துக்குமாரன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகக் கற்பித்தவர். 
இப்பின்புலத்தில், பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்க் கல்விக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியவர் பேராசிரியர். வித்தியானந்தன் ஆவார். ஆரம்பத்தில் பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்த அடிகள், க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம் அவர்கள் வழிநின்று தமிழாய்விலும் தமிழ் கற்பித்தலிலும் ஈடுபட்டபோது, அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. 
இத்தொகுப்பின் முதல் மூன்று கட்டுரைகளும் நாவலர் பற்றியவை. பொதுவாக நாவலர் இலங்கையில் ஆற்றிய தமிழ்ப்பணி, சைவப் பணி பற்றிப் பொதுவாக யாவரும் அறிந்திருந்தாலும், நாவலர் தமிழ கத்திற்கு ஆற்றிய பணி பற்றி அவ்வளவாகச் சிலாகித்துப் பேசப்படு வதில்லை. ஈழத்துத் தமிழினதும் தமிழரினதும் பெருமை தமிழகத்தில் பரவ நாவலர் எவ்வாறு காரணமாக இருந்தார் என்னும் வினாவுக்குப் பேராசிரியர் விடை பகர்ந்துள்ளார். 
பொது வாசகர்கள் அறிந்திராத ஏராளமான தகவல்களுடன் கச்சிதமாக இவ்விடயத்தை நூலாசிரியர் கையாண்டுள்ளார். மற்றொரு கட்டுரையில் ஆறுமுகநாவலர், விபுலானந்த அடிகள் பற்றிய ஒரு ஒப்பியல் நோக்கில் அமைந்த நல்லதொரு கட்டுரை நூலில் இணைக் கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாவலர் பற்றிய 30 பக்க ஆய்;வு பெரும் பயனுடையது என்றே கூறுதல் வேண்டும். இவை போன்று ஏராள மான கட்டுரைகள் நூலில் விரவிக் காணப்படுகின்றன. 
நூலின் மற்றொரு பிரதான அம்சம் மனித சமூகத்தை எதுவித வேறுபாடுமின்றி நோக்கும் பண்புடைய பேராசிரியர் அவர்கள் இஸ்லாமியர்களின் நாட்டுப்பாடல்கள் பிரபந்த வகைகள், மற்றும் கிறிஸ்தவர்களின் தமிழ்ப்பணி என்பன பற்றிய சிறப்புமிக்க பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மொத்தத்தில் சுதந்திரத்திற்குப் பின் தமிழ்ப்பணியாற்றிய ஒரு முக்கிய பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியரின்  சிறப்பு வாய்ந்த கட்டுரைகள் அடங்கிய இந்நூல் சேமமடு பதிப்பகத்தாராலும் வித்தியானந்தன் நினைவுக் குழுவினராலும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு சமர்ப்பிக்கப்படுவது பெரும் பாராட்டுக் குரிய விடயமாகும். 

-பேரா.சோ.சந்திரசேகரன்-