Full Description (முழுவிபரம்): |
பெண் இனம் அனுபவிக்கும் அதிகளவான உரிமைகள் பலவகையான போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட வையே. பெண் இனத்தின் செயற்பாடுகள் பொதுவாக ஒரு சமூகத்தி னால் பின்பற்றப்பட்டு வருகின்ற கலாசாரம், சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள், சமூக விழுமியங்கள் போன்ற பல கூறுகளால் சூழப்பட்டுக் கட்டுப்பாடுகளுடனேயே இடம்பெற் றுள்ளன. இந்தவகையிலே கல்வி கற்கும் உரிமைக்காகவும் பெண்கள் பல தடைகளைத் தாண்ட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டமையை வரலாற்று ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்கள் தமது வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய வலுவான ஆயுதம் கல்வியே என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். கல்வியே தமது முன்னேற்றத்திற்கான வலுவான ஆயுதம் என் பதைப் பெண் இனம் என்று உலகநாடுகளில் உணரத் தலைப்பட் டதோ அந்தக் காலகட்டத்திலேயே யாழ்ப்பாணத்துப் பெண்களும் அதனை உணர்ந்து கொண்டனர். பண்டைய காலம்தொட்டு யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது கல்வி அறிவினை மேம்படுத்து வதற்காகப் பல்வேறு படிகளைக் கடந்து வந்தனர் என்பதை மறுக்க முடியாதுள்ளது. பண்டைய யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது கல்வி வளர்ச்சிக்காக நடந்து வந்த பாதையை இன்றைய சமூகத் திற்கு குறிப்பாகப் பெண் இனத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உணரப்பட்டமையே இவ் ஆய்வுக்கட்டுரைக்கான அடிப்படை உந்துதலாக அமைந்தது.
'யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பண்டைய காலம் தொடக்கம் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம் வரையிலான காலப்பகுதிகள் வரலாற்று ரீதியாகக் கவனத்தில் எடுக்கப்பட்டது. பண்டைய காலம், போத்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், பிரித்தானியர் ஆட்சிக்காலம், சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலமென்ற ஒழுங்கிலே யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. வரலாற்று ரீதியாக ஒவ்வொரு காலப்பகுதியிலும் நிலவிய சமூகக் கட்டமைப்பு, சமூகத்தின் விசேட இயல்புகள் என்பன கவனத்தில் எடுக்கப்பட்ட தோடு ஒவ்வொரு காலப்பகுதியிலும் நிலவிய சமூகக் கட்டமைப் பிலே பெண்களின் சமூக நிலை, கல்விக்கான வாய்ப்புகள், கல்வி அறிவு என்பன எவ்வாறு நிலைகொண்டிருந்தன என்பதை விளக்கு வதாகவும் இந்த ஆய்வு அமைந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்களது மேற்பார்வையில் இடம்பெற்ற இந்த ஆய்வுக் கற்கையானது பண்புசார் ஆய்வு அணுகுமுறையிலே வரலாற்று ஆய்வு வடிவத்தினைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை கல்வியில் முதுதத்துவமாணி பட்டத்திற்காக 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆய்வுக் கட்டுரை முழுமை பெறுவதற்குப் பலரும் பல வழிகளில் உதவி உள்ளனர். ஆய்வுக்கற்கைக்கான தலைப்பை வடிவமைத்து, கட்டுரை அமைய வேண்டிய ஒழுங்கமைப்பைத் தெளிவுபடுத்தி நெறிப்படுத்தியவர் மதிப்பிற்குரிய ஆசான் பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்கள் ஆவார். சிறந்த அறிஞராகவும் ஆய்வாளராகவும் விளங்கும் இவரது ஆலோசனைகளும் ஊக்குவிப்புகளும் இவ்வாய்வு முழுமை அடைவதற்கு வாய்ப்பாக அமைந்தன.
ஆய்வு முழுமை பெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய பேராசான் பேராசிரியர் வ. ஆறுமுகம், பேராசிரியர் க. சின்னத்தம்பி ஆகியோர் என்றும் எனது நன்றிக்குரியவர்கள். ஆய்வின் தேடல்களிலும் கருத்தாக்கங்களிலும் உதவிபுரிந்த மூதறிஞர்களாகிய மயிலங்கூடல் நடராசா, இணுவையூர் அ.வை. கதிர்காமநாதன் உபாத்தியார், வித்துவான் க. சொக்கலிங்கம், ஆசிரியமணி பஞ்சாட்சரம், சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு முன்னாள் உபஅதிபர் செல்வி வடிவேலு ஆகியோர் நன்றியுடன் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆய்விற்குத் தேவைப்பட்ட விடயங்களை அணுகிக் கேட்ட பொழுது மனநிறைவுடன் ஆலோசனை வழங்கியவர்கள் பலர். பேராசிரியர் கலாநிதி சிவலிங்கராஜா, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர் கள். ஆய்விற்கு தேவையான ஆதாரங்களை நிகழ்வுகளைத் தரவுகளாகவும் ஆலோசனைகளாகவும் வழங்கிய பெண்நிலைச் சிந்தனையாளர்கள் திருமதி கோகிலா மகேந்திரன், திருமதி சரோஜினி சிவச்சந்திரன், திருமதி செல்வி திருச்சந்திரன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.
ஆய்வுக்கான ஆலோசனைகளைக் கூறியும் நூல்கள் பலவற்றை தந்துதவியும் உற்சாகப்படுத்தியவர்கள் பலர். தேவைப்பட்ட நூல்க ளைத் தந்துதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு தமிழ் சங்கம், கொழும்பு பெண்கள் கல்விவட்ட ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த நூலகர்கள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.
ஆய்வுக்கட்டுரையினை நூல் உருவில் வெளியிட வேண்டுமென என்னை ஊக்குவித்தவர்கள் பலர். இவர்களில் இலங்கை திறந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் உபாலி விதானபத்திரன, இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருவாளர் தை. தனராஜ், செஞ்சொற் செல்வர் கௌரவ கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் நன்றியுடன் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் இந்நூல் முழுமை பெறுவதற்கு உதவிய தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.க.இரகுபரன் அவர்களுக்கு என்றும் என் நன்றிகள்.
இலங்கை திறந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் உபாலி விதானபத்திரன அவர்கள் வரலாற்று ரீதியான தகவல்களை வெளியீடுகளாகப் பதிய வேண்டுமென குறிப்பிட்டுக் கூறியமை யைக் கருத்திற்கொண்டு இந்த நூல் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதி வரையிலான விடயங்களை உள்ளடக்கிய வகையில் 'யாழ்ப்பாணத்தில் பெண் கல்வி: தோற்றமும் வளர்ச்சியும்' என்ற பெயரில் வெளிவருகின்றது.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்து கல்விச்செயற்பாடுகள் 1945ஆம் ஆண்டு ஊ.று.று. கன்னங்கரா அவர்களின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டது. காலத்திற்குக் காலம் அரசாங்கங்களது தேசிய கல்விக்கொள்கைகளுக்கு இணங்க எமது நாட்டின் கல்விச் செயற்பாடுகள் வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை யின் தேசிய கல்விக்கொள்கைகளுக்கு இணங்க யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வியும் வளர்ச்சி அடைந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமே. இதனால் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்து யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வி தொடர்பாக ஆராயப்பட்ட விடயங்கள் தவிர்க்கப்பட்ட வகையில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.
ஆய்வின் கருப்பொருளைக் கருத்திற்கொண்டு இந்நூல், 1.அறிமுகம் 2. பண்டைய யாழ்ப்பாணத் தமிழ்மரபில் பெண்கல்வி, 3.போர்த்துக்கேயர் வருகையும் யாழ்ப்பாணத்துத் தழிழ்ப்பெண் களின் கல்வி மரபு மாற்றங்களும், 4. ஒல்லாந்தர் வருகையும் யாழ்ப்பாணத்துத் தழிழ்ப்பெண்களின் கல்வி மரபு மாற்றங்களும், 5. பிரித்தானியர் ஆட்சியில் யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி நிலைமைகள், 6.ஆய்வின் ஒன்று கூட்டிய தொகுப்பு என்ற ஒழுங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனது கல்வி வளர்ச்சிக்கு பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை வித்திட்டு உரமிட்ட ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தோள் கொடுத்த உறவுகளுக்கு என்றும் என் நன்றிகள். இந்நூலை அழகுற வடிவமைத்து அச்சுப்பதித்த சேமமடு பதிப்பகத்திற்கு எனது நன்றிகள்.
எனது கல்வி வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்த பாசத்திற்குரிய தந்தையார் சுந்தரம்பிள்ளை பாலசிங்கம், ஐயா வேலுப்பிள்ளை கதிரித்தம்பி, பாட்டி தங்கம்மா கதிரித்தம்பி, மாமனார் கந்தையா ஆறுமுகம் ஆகியோருக்கு இந்நூல் அர்ப்பணமாக்கப்படுகின்றது.
அன்புடன்
சசிகலா குகமூர்த்தி
|