Full Description (முழுவிபரம்): |
மானம்பூத் திருவிழா எங்கள் ஊரிலே மிகச் சிறப்பாக நிகழும். ஊர் முழுவதுமே அன்று விழாக் கோலம் கொண்டிருக்கும். வீதிகள் சுத்தம் செய்யப்படும். வீட்டு வாயில்கள் அலங்கரிக்கப்படும். மாவிலை தோரணங்கள் மலர்ச் சரங்கள் முதலியவற்றால் அலங்கரிப்பு நிகழும்.
அந்தி மாலையில் சிவகாமி அம்மையின் மானம்பூ ஊர்க் கோலம் ஆரம்பமாகும். கந்தசாமி கோயிலை நோக்கி ஊர்க் கோலம் வரும். அங்கே வாழை வெட்டு முடிந்ததும் மீண்டும் சிவகாமி அம்மை தமது ஆலயத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி இடம்பெறும்.
ஊர்க் கோலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம், கும்மி, கோலாட்டம், முகமூடியாட்டம் என்றவாறு பல்வேறு ஆடல்கள் இடம்பெறும்.
சீனடி, சிலம்படி, தீக்குதிர் விளையாட்டுகள் தொடர்ந்து இடம்பெறும்.
அம்பாளின் முன்னதாக தவில் நாகசுர வித்துவான்கள் வாசிப்பை நிகழ்த்துவர். அம்பாளின் பின்புறத்தே இனிய பஜனைப் பாடல்கள் நிகழ்த்தப்படும்.
கலைத்துவம் நிரம்பிய பெரிய ஊர்வலமாக அது இடம்பெறும். பல்வகைச் சுவை நிரம்பிய பண்பாட்டு ஊர்வலமாக அது அமையும்.
வழி நெடுகிலும் சிற்றுண்டிகள் அனைவருக்கும் வழங்கப்படும். தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
எங்கும் ஒரே குதூகலமாக இருக்கும். குதிரை வாகனத்தில் ஏறி அம்பாள் வரும் காட்சி கொள்ளை இன்பமாயிருக்கும்.
சிவகாமி அம்மை வீதியுலா வந்துகொண்டிருந்தார். தெருவோரமதிற் கரையில் நின்ற ஒரு விறுவன் மிகுந்த இங்கிதத்தோடு இந்தப் பாடலைப் பாடினான்.
ஆலவட்டம் சூழவரும்
அங்கயற் கண்ணி
அழகு மலர் சூடிவரும்
ஆனந்தப் பவனி.
புரவியாட்டம் சூழவரும்
பார்வதி மாதா
பொன் மலர்கள் ஏந்திடும்
பூம்பொழில் தாயே
ஏறுகுதிரை ஆடிவரும்
எங்கள் தாயே
எடுத்தகைக்கு நீதிதந்து
சூழும் தாயே
அன்னநடை அழகுநடை
ஆடும் கூத்தர்
அணி அணியாய் நகர்ந்து வரும்
அழகு வீதி
சோடனைகள் சூழவரும்
தெய்வத் தாயே
செல்வமொடு வீதியுலா
தோன்றும் தாயே.
|