வண்ணத்துப் பூச்சிப் பாட்டு
அப்போது பெரிய மாமி அங்கே வந்தார்.
அவர் வண்ணத்துப் பூச்சிகளில் விருப்பம் கொண்டவர்.
அவற்றின் இறகுகளைச் சேகரித்து வைத்திருப்பவர்.
அவர் எங்களைப் பார்த்தார்.
எனக்கும் அக்காவுக்கும் ஒரு பாட்டுப் போட்டி வைத்தார்.
'வண்ணத்துப் பூச்சி பற்றிப் பாட வேண்டும்.
நல்லப் பாட்டுக்குப் பரிசு' என்றார்.
அப்போது நான் ஒரு பாடலைப் பாடினேன்.
நீல வண்ணப் பூச்சி
நீண்ட நேரம் பறக்கும்.
பச்சை வண்ணப் பூச்சி
மெத்தப் பறந்தோடும்
மஞ்சள் வண்ணப்பூச்சி
மரங்கள் எங்கும் தாவும்
சிவப்பு வண்ணப் பூச்சி
சிறகடித்துப் போகும்.
கருமை வண்ணப் பூச்சி
காற்றில் தாவிப் போகும்.
வெள்ளை வண்ணப்பூச்சி
விந்தை பல காட்டும்.
நான் பாடி முடித்தேன். பாடும் பொழுது தாளமும் போட்டேன்.
அடுத்ததாக அக்கா பாடினார்.
வயலோரம் பறந்து வரும்
வண்ணத்துப் பூச்சி
வரி வரியாய்ப் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி.
நதியோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
நறுமலர்கள் தாவிவரும்
வண்ணத்துப் பூச்சி
மலையோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
மலர் தாவிப் பறந்து வரும்
வண்ணத்துப் பூச்சி
குடிலோரம் பறந்துவரும்
வண்ணத்துப் பூச்சி
குறுமலர்கள் தாவிவரும்
வண்ணத்துப் பூச்சி
'இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கின்றன' என்றார் பெரியமாமி.
இருவருக்கும் பரிசு தந்தார்.
அது வண்ணத்துப் பூச்சி அல்பம்.
வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் அங்கு ஒட்டப்பட்டிருந்தன.
மிக அழகாக இருந்தது.
|