|
ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து மதத்தின் வரலாற்றையும் பெருமையையும் அகல்விரிவாக எடுத்தியம்பியவர். பனைவளம் நூல் எழுதி கற்பக தருவின் பன்முகப் பயன்பாட்டை தன்னிறைவுப் பொருளாதாரத்தை வலியுறுத்தியவர். ஈழத்து தமிழ்ச்சூழலில் பல் துறைகளுள் நிறுவனம் சாராத ஆய்வுக் கலாச்சாரத்தை முன்னெடுத்தவர்களுள் க.சி.குலரத்தினம் தனித்துவமானவர்.
|