Book Type (புத்தக வகை) : புனைகதை இயல்
Title (தலைப்பு) : புனைகதை இயல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-01-02-032
ISBN : 978-955-1857-31-8
EPABNo : EPAB/02/18579
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கிராமத்துக் கதைசொல்லிகள் - ஆராயப்படாத ஆளுமைகள்
  • புனைவின் நீட்சி
  • சிறுகதையின் கோட்பாட்டு வளர்ச்சி
  • புனைகதையும் சமூகச் சித்திரிப்புக் கருத்தியலும்
  • புனைகதையும் படிம உலகமும்
  • புனைவும் காண்பிய ஆக்கமும்
  • வரலாற்றுப் புனையங்கள்
  • அறிவியற் புனையங்கள்
  • நகைச் சுவைப் புனையங்கள்
  • புவியியல் மற்றும் பண்பாட்டு அலகுகள் சார்ந்த புனைவுகள்
  • புனைவும் எழு நடையும்
  • கற்பனையியல்
  • புனைகதையும் நுகர்வோர் சமூகமும்
  • ஆக்கமலர்ச்சிப் பதிவுகள்
  • நவீன இலக்கியப் புலப்பாடுகள்
  • ஆங்கில இலக்கியங்களும் தமிழின் முன்னோடிப் புனையங்களும்
Full Description (முழுவிபரம்):

தமிழில் புனைகதை இலக்கியம் பற்றிய சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வும் பல நிலைப்பட்ட பல தளப்பட்ட செல்நெறிகளாக விருத்தி பெற்றுள்ளன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னர் புனைகதை இலக்கியம் 'புனைகதை இயல்' ஆக வளர்ச்சியடைந்து புதுப்பிரக்ஞையும் புதுப்பரிமாணமும் மிக்க ஓர் துறையாக பரிணாமம் பெற்றுள்ளது. 
இன்று எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகத் திகழ்வது புனைகதைகளே ஆகும். இவற்றின் செல்வாக்கை தாக்கத்தை அடிப்படையாகவும் அளவுகோலாகவும் கொண்டு நூல்களை 'புனைகதைகள்' என்றும் ' புனைகதைகள் அல்லாதன' என்றும் பிரிக்கும் முறை ஏற்பட்டது. உரைநடைப்புனைகதை என்பது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் பயன்பட்டு வருகின்றது. 
தொடர்ந்து மேனாட்டுத் தொடர்பால் வந்த இலக்கிய வடிவங்களை விளங்கிக்கொள்ளும்  முயற்சி தீவிரப்பட்டது. இதனால் கவிதை, உரைநடை போன்றவற்றின் இயக்கத்துக்கான கோட்பாட்டு விளக்கத்தினை மேனாட்டு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் விமரிசகர்கள் வழியாக அறிந்துகொள்வதற்கு விமரிசனப் பயில்வு இடமளித்தது. 
இன்று நாம் இலக்கிய விமரிசனம் என மேற்கொள்ளும் இலக்கியக் கற்கை மேல்நாட்டு கல்விமுறை வழியாக வந்தது. அதாவது மேனாட்டு இலக்கிய அறிகையுடனேயே வந்தது. இந்தப் பண்பு புனைகதை இயல் பற்றிய அறிதல்மரபிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கம் செலுத்தின. நவீன இலக்கியப் பயில்வின் பரப்பை ஆழ அகலப்படுத்தின. சமகாலத்தில் பன்னாட்டு இலக்கியப் பரப்பில் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட துறையாக புனைகதை இலக்கியம் வளர்ந்து வருகிறது. 
நவீன இலக்கியக் கோட்பாடுகள் பல புனைகதை இலக்கியம் பற்றிய அறிதல்முறைமையிலும் படைப்பாக்கமுறைமையிலும் பல்வேறு புதிய புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்கியுள்ளன. நவீனத்துவம் சார்ந்த புதிய சொல்லாடல்களை தமிழில் புழக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கலை - இலக்கியம் சார்ந்த நவீன கோட்பாடுகளை விவாதிக்கும் உரையாடும் மரபுகளையும் உருவாக்கியுள்ளன. 
இதுவரை வாய்மொழிப் பாரம்பரியத்தில் கதை சொல்லல், கதை கேட்டல் என்னும் மரபுகள் வலுவாக இருந்துள்ளன. இதனால் 'கதை சொல்லிகள்' அந்தந்தப் பண்பாட்டுக் கோலங்களுடன் வெளிப்பட்டு வந்துள்ளனர். அதாவது தொன்மையான சமூகங்களில் அறிவு மற்றும் அனுபவம்சார் கையளிப்புக்களில் கதைசொல்லிகளின் வகிபாகம் முக்கியமானதாக இருந்துள்ளன. 
நமக்கு கதைசொல்லல், கதைகேட்டல் என்னும் மரபுகள் அச்சு ஊடக வருகையால் கதையெழுதுதல், கதைவாசித்தல் என்னும் மரபுகளாக நீட்சிபெற்றன. வாய்மொழி மரபில் கதைகளாக இருந்தவை அச்சுவடிவில் உருமாறும் பொழுது 'புனைகதை' என்ற பெயரைப் பெறுகின்றன.
அதாவது கதைசொல்லல், கதைகேட்டல் அனுபவங்களின் எடுத்துரைப்பிலிருந்து ஆரம்பித்து அனுபவங்களின் பிறிதொரு பரிமாணமாகிய கற்பனைகளுடன் இணைந்து வளர்ந்து செல்லும் படிமலர்ச்சி நிலையினை கதைகள் கொண்டுள்ளன. தொல்குடியினர் தமது சூழலை விளங்க, விளக்க முற்பட்ட வேளை கலை வடிவங்களுள் ஒன்றாக 'கதை' தோற்றம் பெற்றது. இது சமூகத்துக்கு அறிவூட்டுவதற்கும் மனித நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உரிய மொழிச்சாதனமாக கலைச் சாதனமாக 'கதை' பயன்படுத்தப்பட்டன. 
வாய்மொழி மரபில் கதைசொல்லல், கதைகேட்டல் பண்பாட்டுக் கோலமாக பரிணாமம் பெற்றது. இது பின்னர் அச்சு ஊடகம் வழியே கதையெழுதுதல், கதைவாசித்தல் என்னும் வடிவம் கொள்ளும் பொழுது இதன் பண்புகள் வேறுபட்டதாக அமைந்தன. கல்வியின் விரிவாக்கம் கதை எழுதுதல் என்னும் செயற்பாட்டில் புது நுட்பங்களை உட்புகுத்தின. இதனால் கதை சொல்லலில் அதன் எடுத்துரைப்பில் பன்முகப்பட்ட விருத்திக்கோலங்கள் வெளிப்பட்டன. 
நமக்கு 'எழுதுதல்' என்பது எழுத்தறிவு என்ற பண்பின் பல பரிமாணங்களை உள்வாங்கியதாக வெளிப்பட்டது. எழுதுவோரின் எழுத்தறிவு, வாசிப்போரது எழுத்தறிவு போன்ற கூறுகள் புனைகதைக் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த பின்புலத்தில்தான் மனிதர்கள், கதை, களம் மற்றும் மொழி யாவும் கட்டப்பட்டன. 
தமிழில் அச்சுத் தொடர்பூடகம் உருப்பெற்ற சூழலில் அதன் உடன் விளைவாக 'இதழியல'; துறையும் வளர்ச்சியடைந்தது. இதழியலில் எழுதுவதற்கு ஒரு புதிய வடிவமாக உரைநடை மேலெழுச்சிப் பெற்றது. இந்த உரைநடையை அடிப்படையாகக் கொண்ட புனைகதை மொழி உருப்பெற்றது. அந்த மொழியில் எழுதும் வடிவங்கள் புனைகதைகள் ஆயின. எனவே புனைகதைக்கான மொழி என்பது புதிதாகத் தோன்றியது. இது பல்வேறு தன்மைகளில் வெளிப்பட்டது. குறிப்பாக ஐரோப்பிய மரபில் இந்த மொழி இயல்பாகவே உருப்பெற்றது. ஆனால் தமிழில் புனைகதை மொழி நவீனத்துவக் கூறுகளை படிப்படியாக உள்வாங்கத் தொடங்கியது. இதற்கு தமிழில் தோன்றிய ஆளுமை மிக்க படைப்பாளிகள் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கினார்கள். 
வாசிப்பு பழக்கம் சார்ந்த இதழியல் வளர்ச்சியில் புதிது புதிதான நிகழ்வுகளைச் சொல்லும் தேவை மேலும் மேலும் அதிகரித்தது. இதனால் இவற்றை வாசிக்கும் மனிதர்களுக்கு இதுவரை அறியாத நிகழ்வுகளை, களங்களை அறியும் வாய்ப்புக் கிடைக்கிறது. தொடர்ந்து உருவான கல்வியின் விரிவாக்கம் புனைகதை இலக்கியம் பற்றிய வாசிப்பிலும் கற்பனையிலும் மற்றும் எழுதியலிலும் புதிய புதிய நுட்பங்களை அறிமுகம் செய்தன. பல்வேறு படைப்பாளிகள் வௌ;வேறு பண்புகளில் புனைகதை வடிவங்களை கையாளத் தொடங்கினார்;. புனைகதை உருவாக்கம் தன்னளவில் பன்முக அடையாளங்களைக் கொண்டதாக வெளிப்பட்டது. 
 பன்னாட்டு நவீன இலக்கியப் பயில்வு தமிழில் பல்வேறு புதிய களங்களை மொழிதல் சாத்தியப்பாடுகளை எடுத்துரைப்புக்களை அறிமுகம் செய்தன. நவீன இலக்கிய உலகை 'புனைகதை உலக'மெனச் சுட்டுவதற்கான அனைத்துத் தன்மைகளும் தன்னகத்தே கொண்டு புதுப் பரிமாணம் பெற்றது. 
இன்று நம்மைச் சுற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் 'புனைவு மதிப்பு' ஏற்படுவது என்பது, அவை மனிதப் பிரச்சினைகளோடு தொடர்புடையவை என்னும் கட்டத்தில் தான். ஆகவே புனைகதைஎடுத்துரைப்பு என்பது நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள், எடுத்துச் சொல்லும் அல்லது எழுதும் செயல்பாடு ஆகிய அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுவே பின்னர் கதை, பனுவல், எடுத்துரைப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. 
சமகாலத்தில் நவீன இலக்கியக் கோட்பாடுகள் 'புனைகதை' பற்றிய ஆழமான ஆய்வுகளை முன்னெடுக்கின்றன. ஆனால் தமிழில் புனைகதை பற்றிய கோட்பாட்டு ஆய்வுகள் இன்னும் அதிகம் பெருகவில்லை. இதனால் புனைகதை பற்றிய இலக்கிய அறிதலில் விமரிசனச் செயற்பாடுகளில் மற்றும் படைப்பாக்கச் செயற்பாடுகளில் புத்தாக்கமான புதிய மரபுகள் உருவாகவில்லை. அல்லது அவ்வாறு தோற்றம்பெற்ற இலக்கியவகைமைகள், அறிதல்புலங்கள், கோட்பாடுகள் தமிழில் புனைகதை மரபுகளை புரிந்து கொள்வதற்கான பொருத்தமான ஆய்வுத் தடங்களை வழங்கத் தவறிவிட்டன. 
தமிழில் புனைகதைகள் வளர்ந்தளவிற்கு அவை பற்றிய விமரிசனங்கள் ஆய்வுகள் பெருகவில்லை. இதுவரையான புனைகதை உத்திகள், பாணிகள், மரபுகள் தமிழில் முழுமையாக இன்னும் பன்முக ரீதியில் அலசப்படவில்லை. இதனால் புதிய நாவல் பற்றிய புதியவிமரிசனஎழுத்து நமக்கு பழக்கப்படாதவையாக உள்ளன. புதியவாசிப்பு சாத்தியப்பாட்டுக்கான தன்மைகளும் உணரப்படாமல் உள்ளன. இதனால் புனைகதை எடுத்துரைப்பியலின் பன்முகக் கூறுகளை எடுத்துக்காட்டும் நுட்பமான அணுகுமுறை மற்றும் வாசிப்பு விமரிசன களங்கள் நமக்கு விரிவாக்கம் பெறவில்லை. 
இந்தப் பின்னணியில் தான் 'புனைகதை இயல்' என்னும் இந்த நூல் வெளிவருகின்றது. இதுவரை புனைகதை பற்றி வெளிவந்துள்ள நூல்களில் இருந்து இந்நூல் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. எமது சமூக பண்பாட்டுக் கோலங்களுடன் ஊடாடி தமக்கான சிந்தனைத் தளத்தை வரித்துக்கொள்கின்றது. பின்காலனித்துவ சிந்தனையின் தாக்கத்துக்கு உட்பட்டுத்தான் படைப்பு விமரிசனம் பற்றிய தேடுகையும் வேர்விடுகையும் அமையும். இதுவே நமக்குப் பொருத்தமான ஆய்வுக் கருவிகளை வழங்கும். இந்த நம்பிக்கையின் உறுதிப்பாட்டிலிருந்து தான் இந்நூலாசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். 
கிராமத்துக் 'கதை சொல்லிகள்' என்னும் முதல் அத்தியாயம் எமது இதுகாறுமான புனைவு இலக்கியம் குறித்தான பார்வைகளை சிந்தனைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றது. தொடர்ந்து 'புனைவின் நீட்சி', 'சிறுகதையின் கோட்பாட்டு வளர்ச்சி' 'புவியியல் மற்றும் பண்பாட்டு அலகுகள் சார்ந்த புனைவுகள்' 'புனைவும் எழுநடையும்' 'கற்பனையியல்' போன்ற அத்தியாயங்கள் மறுசிந்தனை மறுவாசிப்பு மேற்கொள்வதற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன. 
குறிப்பாக வாய்மொழி இலக்கியங்களும் அவற்றை எடுத்தாண்ட சமூக கட்டமைப்பின் அடிநிலை சார்ந்த கதை சொல்லிகளும் ஒருவகையில் ஒடுக்குமுறைக்கும் சுரண்டல் முறைக்கும் எதிரான நாட்டார் கதைகளை எடுத்துரைப்புக்கு பயன்படுத்தினர். இவ்வாறான செயற்பாடு அடிநிலை மக்களை மேலெழுச்சி கொள்ளச் செய்யும் கலைச் செயற்பாடாகவே விரிவு பெறுகின்றது. காலனித்துவ ஆட்சி காலத்தில் தோற்றம் பெற்ற நாட்டார் கலை வடிவங்களின் இவ்வாறான எதிர்ப்புக் கலகத் தூண்டல்களை காண முடியும். இந்தமரபு நவீனஇலக்கியம் என்று அடையாளப்படுத்தும் சமகால வடிவங்களில் வௌ;வேறு வகையில் தளமாற்றம் அடைந்து வருகின்றது. ஆகவே இதுபற்றிய தேடல் ஆய்வு நமக்கு அவசியமாகின்றது. இதற்கான சிந்தனைக் கிளர்வுகளை இந்நூல்  தூண்டுகிறது. அத்துடன் 'புதியஅறிகைமரபு' 'புதியவிமர்சனத்தேடல்' போன்றவற்றையும் வலியுறுத்துகின்றது. 
இதனால் 'நவீன இலக்கியம்' பற்றி புதிய வகையில் பொருள்கோடல் செய்யும் மரபுக்குள்ளும் எம்மை அழைத்துச் செல்கின்றது. நாம் நவீன இலக்கியம் பற்றிப் பேசும் பொழுது ஐரோப்பிய ஆங்கில இலக்கிய மரபுகளை மட்டும் வைத்துப் பேசி வருகின்றோம். எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்களை முன்னிறுத்தும் பேசுபொருளாக்கும் மற்றும் உரையாடல் செய்யும் பண்பு நமக்கு தற்போது வேண்டப்படுகின்றது. இதுவே நமக்கான வேறுபட்ட வித்தியாசமான தனித்துவ அம்சங்களை வெளிப்படுத்தும் கோட்பாட்டுமயமாதலைச் சாத்தியமாக்கும். 
இன்று ஐரோப்பிய நாடுகளின் இலக்கியங்கள் ஓரங்கட்டப்பட்டு மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள் முன்னணிக்கு வருகின்றன. பிராந்திய மொழிகளின் எழுத்துக்கள், விளிம்பு நிலை எழுத்துகள், காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட எழுத்துக்கள், வெளிச்சம்படாத இருண்ட நாடுகளின் எழுத்துக்கள் என்று முற்றிலும் புதிய இலக்கியவெளி இப்போது  திறக்கப்படுகின்றது. இது நமக்கு இலக்கிய வெளியாக மட்டுமல்லாமல் ஒரு மாபெரும் அரசியல் வெளியாகவும் உருமாறி நிற்கின்றது. இந்த அரசியல் வெளியை புரிந்துகொள்வது என்பது நமது இலக்கியச் செயற்பாடுகளின் அரசியலாகவும் விரிவுபெறும். இந்த உணர்வும் சிந்தனையும் நமக்கான வாசிப்புச் செயற்பாட்டை விமரிசன அணுகுமுறைக்கான தெளிவை வழங்கும். 
தமிழில் புனைகதை வரலாறு எழுதுதல் பற்றிய புதிய அணுகுமுறைக்கான புதிய அம்சங்களை நமக்கு இந்நூல் அறிமுகம் செய்கின்றது. இதுவே இந்நூலின் பலம். மேலும் நூலில் இழையோடும் ஒவ்வொரு பகுதியும் இன்னும் விரிவாக ஆராய்ப்படுவதற்கான இறுக்கமான சிந்தனை அமைவுகளைக் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆழமான வாசிப்பு, ஆழமான தேடல் மற்றும் நுணுக்கமான ஆய்வு, விமரிசனக் கண்ணோட்டம் யாவும்  உள்ளவர்கள் இதற்காக அதிகம் உழைக்க வேண்டும்.

தெ.மதுசூதனன்