Full Description (முழுவிபரம்): |
யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விச் செயற்பாடுகளை விளக்கி விளக்கும் முறைமையின் ஓர் அம்சமாக 'யாழ்ப்பாணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்' எனும் நூல் அமைகின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் என்ற அறிகைச் செயற்பாட்டில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்ற ஓர் ஆக்கமா கின்றது. சமூக ஆக்கத்தின் வெளித்துலங்கும் பரிமாணமாக அமையும் பண்பாட்டுக்கோலங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. சமூகத்தை ஒற்றைப் பரிமாணத்திலே விளங்கிக்கொள்ளும் அணுகுமுறை சமூகம் பற்றிய தெளிவான புலக்காட்சியை நமக்கு ஏற்படுத்தமாட்டாது.
சமூகத்தின் தளமாகவும் அடிக்கட்டுமானமாகவும் விளங்கும் பொருண்மியக் கட்டமைப்பின் விளக்கமின்றி யாழ்ப்பாணச் சமூகத்தை பொருட்கோடலுக்கு உள்ளாக்கிக் கொள்ளல் சாத்தியமன்று. யாழ்ப் பாணத்து நிலவுடைமைப் பொருண்மிய நிலையும் பெருநிலமுடைமை, சிறுநிலமுடைமை, நிலமற்றநிலை என்ற சொத்துரிமை இயல்புக ளுக்கும் சமூக நிரலமைப்புக்கும் சாதிய முறைமைக்குமுள்ள இணைப்புகள் அறிகை நிலைப்புலப்பாடுகளாகின்றன.
அவ்வாறான பெருந்தொகுதியின் நெடுங்கோட்டு இணைப்பாக மரபுவழிக்கல்வி முறைமை தொழிற்பட்டு வந்துள்ளது. வினைத்திற னுடன் இணைந்திருந்த அந்தக் கல்விப் பாரம்பரியத்தின் மீது மேலை நாட்டுக்கல்வி முறைமை இலகுவாக வேர்பதிக்க முடிந்தது. யாழ்ப் பாணத்து மரபுவழிக் கல்விமுறைமையின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் உட்பொதியப்பட்டுள்ளன. பெண்கல்வி, இசைநடனக் கல்வி, தொழில்நுட்பக்கல்வி, கருவிக்கையாட்சி, கல்வி உளவியல், பண்பாட்டு உளவியல் முதலாம் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான பரிமாணங்களை உள்ளடக்கிய முன்னோடி ஆக்கமாக இந்நூல் அமைந்துள்ளது.
போதுமான ஆவணப்படுத்தல் இல்லாத இடைவெளியில் வழி வழிவரும் நாட்டார் மரபுகளும் நாட்டார் எண்ணக்கருக்களின் எச்சங்களுமே பண்பாட்;டுக் கோலங்களைக் கண்டறிவதற்குரிய பலம்மிக்க அறிகைத் தளங்களாகவுள்ளன. அவற்றைத் தேடிக் கண்ட றிதலும் ஆவண இடைவெளிகளை நிரப்புதலும் ஆய்வின் தேவை களாக மேலெழுகின்றன. அந்நிலையில் இதுவரை வெளிவந்த ஆக் கங்களிலும் மாறுபட்ட புலக்காட்சியும் சமூகம் பற்றிய மறுவாசிப்பும் இந்நூலின் உள்ளடக்கமாகப் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வியின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வருவதற்குரிய முயற்சிகள் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மரபுவழிக் கல்வி தனித்துத் திண்ணைப் பள்ளிக்கூடங்களுடன் மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அதாவது, சமூகத்தில் அனுகூலம் மிக்கவர்களுக்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களிலே கற்கும் வாய்ப்பு மிகையாகக் கிடைக்கப்பெற்றது. சமூக அடுக்கமைப்பின் அடிநிலைக ளிலே வாழ்ந்தோர் வரன்முறைசாராக் கல்வியின் வாயிலாகவே அறிகை ஊட்டங்களைப் பெற்று வந்தமை ஆய்வின்வழி தெளிவாகப் புலப்படுகின்றது. இந்தப் பின்புலங்களைத் தெளிவாக உணரும் வகையில் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. தேசியப் பண்பாட்டின் பன்முகபபண்பாடுகளையும் தேசிய இனங்களின் அடையாளங் களையும் கண்டறிய வேண்டிய அறிகைத் தேவைகள் மேலெழுந்துள்ள சமகாலத்தின் நுழைவாயிலூடே இந்நூலாக்கம் நகர்ந்து வருகின்றது.
இன்று உலகமயமாக்கலின் தாக்கம் சமூக அசைவியக்கத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்நிலையில் பண்பாட்டுக் கோலங்களை மீட்டெடுத்தலும் ஆய்வுக்கு உட்படுத்தலும் அறிகைப் பரப்பில் புதிய பளிச்சீடுகளை உருவாக்கும், புலமை விசைகளை தடம் மாற்றும். இந்தப் புரிதல் தெளிவு கொண்டே இந்நூல் அமைகின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தை ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய் வதற்கு நாட்டார் வழக்காற்றியல் மற்றும் மரபுக் கல்விப் பாரம்பரியம் தொடர்பான ஆழ்ந்த வேர்களைத் தேடுதல் முக்கியமாகின்றது. இந்த ஆய்வு மரபுக்கு ஆய்வாளர் சபா.ஜெயராசா புதுத்தடம் அமைகின் றார். இவ்வாறான ஆய்வு மரபு பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களால் தொடங்கப்பெற்றது. தற்பொழுது இந்த ஆய்வு மரபு சபா.ஜெயராசா அவர்களால் இன்னொரு புலமை விசையாக மேற்கிளம்பி ஒளிபாய்ச்சுகின்றது.
தெ.மதுசூதனன்
|