Content (உள்ளடக்கம்): |
நம் தமிழ் மன்பதை பல்வேறு பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்று சொல்வது வெறும் புகழ்ச்சி இல்லை; அது முற்றிலும் உண்மை! அதற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
நம்மைச் சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட, 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார்.
அவர் புலவராக மட்டுமல்லாது, அரசர்களுக் கெல்லாம் அறிவுரை வழங்கி ஆட்சியைச் செம்மைப் படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார். அரசர்களும் 'இவர் பெண்தானே!' என தாழ்வாகக் கருதாமல் அவருக்கு உயரிய மதிப்பளித்து வந்துள்ளமை வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இன்றைய இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு ஒதுக்கும் உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானத்திற்கே ஒப்புதல் தர அடம்பிடிக்கும் அரசியல் நிலையோடு பழந்தமிழகத்தை ஒப்பிடும் போது .... அடடா! நமது வழிவழிப் பண்பாட்டுக்கு எதிரான பகைவர் - அயலார் இந்த மண்ணில் நுழைந்த பிறகே இங்கே அனைத்து ஏற்றத் தாழ்வுகளுடன் பெண்ணடிமைத்தனமும் புகுத்தப்பட்டது என்பதை இதன் மூலம் நன்கு உணரலாம்.
அதே ஒளவையார்,
'மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்'
என்று பாடினார். அதாவது, 'மன்னன் மதிப்புடையவன் தான்; ஆனால் அவனை விடவும் கற்றறிந்த புலவன் மிகவும் சிறப்புக்குரியவன்' எனக் கூறியுள்ளார்.
அவரது காலத்திற்குப் பின், தமிழ்நாட்டில் ஒருவன், மன்னனாகவும் அரசு புரிந்து, கற்றறிந்த புலவராகவும் பாக்கள் இயற்றி 'இரட்டைச் சிறப்பு'ப் பெற்றிருந்ததை அறியும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தகைய வரலாற்றுப் பெருமைக்குரியவர் பழங்காலத்தில் முத்து வணிகத்தில் உலகப் புகழ்பெற்ற கொற்கை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அதிவீரராம பாண்டியன் என்பவர் ஆவார்.
மேலும் -
முல்லைக்குத் தேர் கொடுத்து வள்ளல் தன்மையில் எல்லையில்லாப் புகழ் பெற்ற பாரியின் உற்ற தோழர் கபிலர் என்பார். இவர் பாரிக்குத் துன்பக் காலத்தில் தோள் கொடுத்ததோடு மட்டுமல்லாது, பாரியின் மறைவுக்குப் பின் அவரின் மகளிர் இருவரின் எதிர்கால வாழ்வுக்காக இமைசோராது உழைத்தவர். சிறந்த புலவர்.
தொடர்ந்து, கண்ணன் மகன் கூத்தன் என்பவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தத னால் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்ற பெயருடன் புலமை பெற்று விளங்கினார்.
மற்றும், பொய்கை என்னும் இடத்தில் பிறந்ததால் பொய்கையார் எனும் இடவாகுபெயர் பெற்ற புலவரும் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தார்.
இவர்களெல்லாம் சங்க காலங்களைச் சேர்ந்தவர்கள்.
அடுத்து, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர். இவரும் சங்கப்புலவர்களுடன் ஒப்பிடும் அளவு தகுதி பெற்று விளங்கியவர்.
மேற்சொல்லப் பெற்ற அனைவரும் பல்வேறு நூல்களையும் தனிப் பாடல்களையும் இயற்றி, தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் சிறப்புச் சேர்த்துள்ளனர்.
அவற்றுள், ஒளவையாரின் 'ஆத்திசூடி', 'மூதுரை', 'நல்வழி', 'கொன்றைவேந்தன்',
அதிவீரராம பாண்டியரின் 'வெற்றிவேற்கை' எனும் 'நறுந்தொகை',
கபிலரின் 'இன்னா நாற்பது'-
சிவப்பிரகாசரின் 'நன்னெறி'
மதுரைக் கண்ணங் கூத்தனாரின் 'கார் நாற்பது', பொய்கையாரின் 'களவழி நாற்பது' ஆகிய நூல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவு ரையாளராக இருந்த பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 1950-களிலேயே உரை எழுதி அவை தமிழ் மக்களிடையே பரவ வழி செய்துள்ளார்.
அவற்றை 'இளையோர் வரிசை' என்னும் பிரிவில் எமது 'பத்மம் பதிப்பகம்' தனித்தனி சிறிய நூல்க ளாக வெளிக்கொணர்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், நறுந்தொகை ஆகிய மூல நூல்களைத் தந்துதவி எமக்குப் பாராட்டும் வழங்கி ஊக்குவித்த தஞ்சாவூர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் - பேராசிரியர் திருமிகு பி.விருத்தாசவனார் அவர்களுக்கும், கார்நாற்;பது, களவழி நாற்பது ஆகிய மூல நூல்களைத் தந்துதவிய திருச்சி, 'திருவள்ளுவர் தவச்சாலை' நிறுவ |
Full Description (முழுவிபரம்): |
கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களிற் சேர்க்கப்பட் டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 'சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு' என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவை யென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களேயாகும். தமிழ் நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப் பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையா ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் ஆத்திசூடியிலும், கொன்றை வேந்தனிலும் சிறுசிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும் கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களா லும் ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்று கருத்துப் பற்றியதாகும். மிக்க இளம் பருவத்தி னராயிருக்கும் பொழுதே பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதிய வைக்க வேண்டுமென்னும் பெருங்கருணையுடனும் பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலக முள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண் மக்களில் ஒருவரென் னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
தொல்காப்பியச் செய்யுளியலுரையில் இந்நூற் கடவுள் வாழ்த்து,
'கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை
யென்று மேத்தித் தொழுவோ நாமே'
என்ற உருவுடன் பேராசிரியராலும் நச்சினார்க் கினியராலும் காட்டப்பெற்றுள்ளது.
இங்ஙனம்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
|