சீர்மிய உளவியல் |
பாடசாலைச் சீர்மியம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது நூலாக இது அமைகின்றது. சீர்மியம் ஒரு மேலைத்தேயச் செயல்முறை என்றும் அறிமுறையென்றும் கருதப்படும் அறிகை அடிமைத்தனத்தை மாற்றியமைத்தலும் இந்நூலாக்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. எமது மரபு வழிச் சடங்குகளும், கூத்துக்களும், இலக்கிய வழியான எடுத்துரைப்புக்களும் உளச்சுகம் தேடும் நுண் வழிகளைப் பலநிலைகளிலும் முன்னெடுத்து வந்துள்ளன. சீர்மியத்திலே தோழர் தோழியரது வகிபாகம் சங்க இலக்கியங்களிலே பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும் சீர்மிய நெறியைப் பக்தி நெறியுடன் இணைக்கும் அறிகை முறைமை நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் காணப்படுகின்றன. எமது சித்தர் மரபுகளில் இடம்பெற்று வந்த உள-நலக்காப்பு நடவடிக்கைகளும், நாட்டார் மரபுகளில் இடம்பெற்று-வரும் உளச்சுகம் காணற் செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கருத்தெழுகைச் சூழமைவில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.
|