தொன்மைச் செம்மொழி தமிழ் |
கால்டுவெல் 1856இல் தமது 'தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை' வெளியிட்டதுமே உலக மொழியியலறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, செம்மை முதலியவற்றையும், ஞால முதன் மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியதாக நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தனர். எனினும் 'செம்மொழி' என ஒரு மொழியை ஏற்றிடத் தொன்மைமொழியாயினும் அம்மொழி இலக்கியம் சிறந்ததாகவும், தனித்தன்மை வர்ந்ததாகவும், பிறமொழி இலக்கியங்களை அடியொற்றி உருவாகாததுமாகவும் இருக்க வேண்டும். 1850 க்குப் பின்னர்தான் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கிங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. 1900 அளவிலேயே மொழி அடிப்படையிலும் சரி. இலக்கிய அடிப்படையிலும் சரி, தமிழ் செம்மொழியே என்பதை உலக அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது. இந்திய நடுவண் அரசு அளவில், தமிழ் மொழி செம்மொழி என மிகக் காலம் தாழ்ந்து 2004இல் தான் ஏற்கப்பட்டது. இதற்கு பலரும் காரணமாவர் - தமிழர்களாகிய நாம் உட்பட, செம்மொழி கோரிக்கை வரலாற்றை இந்நூல் இயல் இரண்டில் காண்க.
|