Full Description (முழுவிபரம்): |
கலாநிதி அ.ஜெயரத்தினம் வில்சன்
B.A (Hons) . ph.D
அரசியல் விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
1796இல் பிரித்தானிய படைப்பற்றாட்சியுடனேயே உண்மையில் ஆரம்பமாகும் இலங்கையின் இக்கால வரலாற்றை எழுதுவோர், தம்முன்னுள்ள பணி இலகுவானதொன்றென்று எண்ணவொண்ணாது. அஃது ஆட்சிமுறை (பரிபாலன) நடவடிக்கைகளின் அல்லது தனித்தனித் தேசாதிபதிகளின் சாதனைகளின் தொகுதி அன்று; அது, பொருளாதார முன்னேற்றம், கல்வி அபிவிருத்தி, சமுதாய வளர்ச்சி, அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றினதும் சுருக்கமாகும். சுருங்கக்கூறின், இக்கால இலங்கை வரலாறு, சிதைவுற்றுக் கொண்டிருந்த சமுதாய அரசியல் அமைப்பு, இலங்கை ஒரே தீவு என்ற கருத்தினடிப்படையில் ஆக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியில் விளைந்த பிண்டமாகிய தேசிய ஒருமைப்பாடாக வலுப்படுத்தப்பட்ட கதையேயாகும். பிரித்தானியரின் வரலாற்றேட்டில் (அ) ஒருங்கிணைக்கப்பட்ட தனி ஆட்சி முறை அமைப்பில், கண்டி மாநிலங்களை இணைத்த கோல்புறூக் கமறூன் விசாரணைக் குழுவின் முடிவுகளின் பின்னர் செயலாக்கப்பட்ட பரிபாலன ஒருமைப்பாடும், (ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமலிருந்த வடமாநில நகரங்களுக்கு உளதாய இருப்புப்பாதை இணைப்பும், அற்ப சாதனைகள் எனக் கருதப்படமாட்டா. இருப்புப் பாதைகள், ஏனைய இணைப்பு வழிகள், புதிதாயுள்ள இயற்கை வளவாய்ப்புத் தொகுதிகளைப் பொருளாதார சுபீட்சத்துக்குப் பயன்படுத்துதல், பரிபாலனச் சீர்திருத்தம் முதலிய அனைத்தும் சமுதாயக் கூட்டு வாழ்வையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் மேலும் உயர்த்தத் தூண்டியும் சமன்படுத்தியும் பணிபுரிந்தன. துல்லியமாக, இலங்கை வாழ் நற்குடி மக்களுக்கும் கற்றறிந்தோருக்கும் பிரித்தானிய ஆட்சி செய்தது இதுவேயாகும். பிரித்தானிய வரலாற்றேட்டில் கரிய கறைகளும் இல்லாமலில்லை; ஆயினும், பிரித்தானிய ஆளுகையின் விளைவினால் மறைமுகமாக உண்டாகிய இந்நலன்கள் பிறர் நலன் கருதிய நோக்கங்களால் உண்டாக்கப்பட்டன என்று, பிழையான கருத்துக்கொண்டுள்ள கட்சிக்காரன் கூடக் கூறமாட்டான்.
திரு.க.சி.குலரத்தினம் ஈட்டியுள்ள இழையும்பிசகாத வெற்றியும் இதுவே. அறிவொளி வீசும் இவ்வாராய்ச்சி ஏட்டிதழ்களிலே உண்மை நிகழ்ச்சிகளை அவற்றின் சரியான தோற்றங்களிலே வெளிப்படுத்த முனைந்துள்ளார். இத்துறையில், ஏனைய வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் சஞ்சரித்துப் பழகிப்போன வழிகளிலே தாமும் செல்ல இவ்வாசிரியர் விழையாதது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர் தமது ஆராய்ச்சி நூலை, ஒவ்வொன்றும், தற்கால இலங்கையின் வளர்ச்சியோடும் முன்னேற்றத்தோடும் நேரடித் தொடர்பு கொண்டுள்ள வரையறைவான பல தலைப்புக்களில் தம் ஆய்வு முடிவுகளை வகுத்துள்ளார். இவையனைத்தும் ஒருமித்து, இத்தீவின் 1796 தொடக்கம் 1947 வரையுமுள்ள, வரலாற்றைப் பற்றிய ஒரு நடுநிலை தவறாததும் நுண்ணாய்வுடையதுமான சுற்றாய்வாக அமைந்துள்ளன. இந்நாட்டின் அரசியற் சீர்திருத்த இயக்கத்திற் பெருந் தொண்டாற்றித் திகழ்ந்த மிகச் சிறந்த பெரியார்களைப் பற்றித் திரு.குலரத்தினம் தந்துள்ள அதிகாரங்கள் மிக விளக்கமாக அமைந்துள்ளன் அவை இதுவரை காலமும் அதிக விபரமாக வெளியிடப்படவில்லை; டொனமூர்க் காலத்திய முன்னேற்றப் பதிவுக் குறிப்புப் பற்றிய அன்னாரது அதிகாரங்கள், இத்தீவு தேசிய நிலையை நோக்கி வளர்ந்து வந்த தொடக்க காலத்தில் எம் அரசியல் தலைவர்கள் ஈட்டிய வெற்றிகளை முதன் முறையாக மாணவருக்கு அறிவுறுத்துகின்றன.
இந்நூல் தமிழ்வழி மாணவர்களுக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கப் போகின்றது. எளிய இனிய செவ்விய நடையில் எழுதப்பட்ட இவ்வாய்வு நூல், ஆதி தொடக்கம் அந்தம் வரவிருக்கின்ற பல ஆண்டுகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலுமுள்ள தற்கால இலங்கை வரலாற்று மாணவரனைவருக்கும், அத்துறையிலமர்ந்த ஒரு பூரண நூலாக அமைவதோடமையாது பொது வாசகர்களுக்கும் அளவிலாப் பயனையுண்டாக்கும், திரு.குலரத்தினம் கண்டவெற்றி ஒப்பற்ற தனிச்சிறப்புடையது; வரலாற்றுப் பாடத்தைக் கற்கும் தமிழ்வழி மாணவரனைவரின், சிறப்பாக ஆங்கில மொழியிலுள்ள மூலப் பொருள்களைப் பெற்றுப் பயனடையும் வாய்ப்புக்களைப் பெறாதவர்களின், நன்றிக் கடப்பாட்டைப் பெறுவதற்குத் திரு.குலரத்தினம் எல்லா உரிமையும் தகுதியும் உடையவராகின்றார்.
அ.ஜெயரத்தினம் வில்சன்
இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை 24-10-66
|