Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வி நுட்பவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-10-03-053
ISBN : 978-955-1857-52-3
EPABNo : EPAB/02/18831
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 128
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கல்வி நுட்பவியல் - கருத்துவிளக்கம்
  • கல்வி நுட்பவியலின் வளர்ச்சி
  • சிறந்த கற்பித்தலின் பண்புகள்
  • எல்டனின் முறைமைகள்
  • தொடர்பாடல் நுட்பங்கள்
  • நங்கூர நிலைக் கற்றல்
  • இணைவரைபாக்கல் நுட்பங்கள்
  • செயற்றிட்ட நுட்பங்கள்
  • அரங்குவழிக் கற்பித்தல்
  • நுண்கற்பித்தலியல்
  • இணைக்குழுக் கற்பித்தல் நுட்பங்கள்
  • ஒப்படை நுட்பம்
  • வினா நுட்பங்கள்
  • கற்பித்தலிற் கைத்தாவல்கள்
  • கற்றலும் விளையாட்டுப் பொருட்களும் 
  • பிரச்சினை விடுவித்தல் நுட்பங்கள்
  • கல்வியிற் கணிப்பொறிகள்
  • கற்றலும் உறக்கமும்
  • மாற்று வலுவுடையோருக்கான நுட்பங்கள்
  • கர்ப்பமஸ் அவர்களின் மாற்றுக் கற்பித்தலியல்
  • எண்மப் புரட்சியும் கற்றல் கற்பித்தலும்
  • கலைச்சொற்கள்
Full Description (முழுவிபரம்):

நாம் 'கல்வி நுட்பவியல்' என்பதற்குப் பரந்த முறையிலோ குறுகிய முறையிலோ பொருள் கொள்ளலாம். இருப்பினும் பொருத்தமான அறிவியல், தொழில்நுட்ப முறையியல், உளவியல், சமூகவியல், மொழியியல், கருத்துத்தொடர்பியல் போன்றவற்றில் எழுந்துள்ள புதிய கருத்துக்களையும் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் பயன் படுத்த முற்படும் ஒரு பிரிவாகவும் கல்வி நுட்பவியலுக்கு பொருள் கொள்ளலாம். கருவிகளாகப் பயன்படுத்தல் கல்விநுட்பவியலுக்கு இன்றியமையாததது என்பதாக மட்டும் இவ்விளக்கம் கருதுவதில்லை. 
கல்வியின் நோக்கங்களை தெளிவுபடுத்த உதவும் கருத்துக்கள், இந்நோக்கங்கள் எய்த உதவும் நுண்முறைகள், இவற்றின் இயல்புகள், தேவைப்படும் முறைகளையும் துணைக்கருவிகளையும் தேர்ந்தெடுக்க உதவும் கோட்பாடுகள், கல்வி வசதிகளை நன்கு பயன்படுத்த உதவும் முகாமைத்துவ நுட்பங்கள், கல்வி விளைவுகளை திட்டவட்டமாக  கணிப்பிட மதிப்பிட உதவும் முறைகள் போன்றவற்றுடனும் கல்வி நுட்பவியல் தொடர்புள்ளதாகவே இப்பரந்த விளக்கம் குறிப்பிடுகின் றது. தொடர்ந்து கல்வியின் விரிவாக்கமும் சிந்தனையும் கல்வி நுட்ப வியல் சார்ந்த பொருள்கோடலை ஆழமாக்குகின்றது. 
சமகாலத்தில் 'கல்வி நுட்பவியல்' பற்றிய ஆய்வுகள் பல்வேறு பரிமாணங்களுடன் தொடர்புடையதாகவே விருத்தி பெறுகின்றது. குறிப்பாக, இன்றைய அறிவுசார் பொருளாதாரம் மற்றும் அறிவுசார் சமூகத்தில் கல்வி நுட்பவியல் மேலும் முக்கியத்துவமுடையதாகவே மாறுகின்றது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தொடர்கல்வி போன்ற செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டுவரும் நிலையில் கல்வி நுட்பவியலின் வகிபாகம் ஆழ்ந்தும் ஊன்றியும் நோக்கப்படுகின்றது. 
மீத்திறனுள்ளோர், சராசரியினர் மற்றும் மெல்லக் கற்போர் ஆகிய அனைத்துத் தரப்பினரதும் ஆற்றல்களை நிறைவுபெற வளர்க்கும் கற்றல்- கற்பித்தல் முறையிலே பொருத்தமான கல்வி நுட்பவியலை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. தனியாள் வேறுபாடுகள் கொண்ட ஒவ்வொருவரையும் குவியப்படுத்தி எவ்வாறு கற்பித்தலை முன்னெ டுக்கலாம், எவ்வாறு அனுபவக் கையளிப்பை மேற்கொள்ளலாம் போன்ற வினாக்களுக்கு 'கல்வி நுட்பவியல்' வாயிலாகவே விடைகளைக் கண்ட றிய வேண்டியுள்ளது. 
உளவியலும் கற்பித்தலியலும், தொழில்நுட்பவியலும் கல்விநுட் பவியலிலே ஒன்றிணைந்து நிற்றல் அதற்குரிய தனித்துவமும் பலமுமாகின்றது. அந்த ஒன்றிணைப்பின் பலம் கற்றல் - கற்பித்தலை வினைத்திறன் கொண்டதாகவும் மகிழ்நிலைக்கு உட்பட்டதாகவும் வளர்த்து விடுகின்றது.
கல்விநுட்பவியலை எமது சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்ளலும் பயன்படுத்திக் கொள்ளலும் ஆசிரியரின் கடமையாகின் றது. இறக்குமதி செய்யப்பட்ட துணைக் கருவிகளைப் பயன்படுத்தும் வளமான நிலையில் எமது பாடசாலைகள் இல்லாத நிலையில் இணக்கல் உபாயங்களைப் பயன்படுத்தும் திறன்களை ஆசிரியர் பெற்றிருத்தல் முக்கியமானது. பல்வேறு காரணிகளால் நலிவுற்றிருக் கும் எமது பாடசாலைகளின் கற்றல் - கற்பித்தலை வளப்படுத்தும் பாரியப் பொறுப்பு சமகாலத்து ஆசிரியர்களிடம் தரப்பட்டுள்ளது. அப்பணியை ஆசிரியர்கள் நிறைவேற்றித்தரல் வேண்டுமென்று சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது. இந்நிலையில் ஆசிரியர்கள் சமூ கத்தைக் கட்டியெழுப்பும் சமூகப் பொறியாளர்களாகத் தொழிற்பட வேண்டியுள்ளது. 
சமகாலத்து ஆசிரிய வாண்மைக் கல்வியிலே 'கல்வி நுட்பவியல்' என்ற கற்கைப்புலம்  ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்நூலின் வரவு பயனுடைய ஆக்கமாக அமைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி கல்வி நிர்வாகிகளுக்கும் பெற்றோருக்கும் பயனுடைய பல புதிய புதிய கருத்துக்களும் சிந்தனைகளும் இந்நூலிலே இடம் பெற்றுள்ளன. கல்வியியல் இலக்கிய வளத்துக்கு இந்நூல் புதுவளம் சேர்க்கின்றது. 
 தெ.மதுசூதனன்