Book Type (புத்தக வகை) : இலக்கிய வரலாறு
Title (தலைப்பு) : ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-09-04-050
ISBN : 978-955-1857-49-3
EPABNo : EPAB/02/18558
Author Name (எழுதியவர் பெயர்) : க.குணராசா ( செங்கை ஆழியான் )
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 272
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
  • ஈழத்துச் சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தக் காலம் (1930-1949)
  • ஈழத்துச் சிறுகதை முற்போக்குக் காலம் (1950-1960)
  • ஈழத்துச் சிறுகதைகள் புத்தெழுச்சிக்காலம் (1961-1983)
  • ஈழத்துச் சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்வுக் காலம் (1983-2000)
  • ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள் (பின்னிணைப்பு -1)
  • இந்நூலில் இடம்பெறும் எழுத்தாளர்கள் (பின்னிணைப்பு - 2)
Full Description (முழுவிபரம்):

'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச் சிறுகதைகளையும் கூடிய வரை படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக்கொண்டேன். 400 சிறுகதைப் படைப்பாளிகளையும், 274 சிறுகதைத் தொகுதிகளையும், சுமார் எண்ணாயிரம் வரையிலான பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு. எனினும், நமது சிறுகதை இருப்பினை அடையாளம் காண்கின்ற முயற்சியும், அதன் மூலம் நாம் தமிழிலக்கியத்தில் - குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகளுள்ளன. இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை. 
மதிப்பீடு என்பது அவரவர் 'சுவை' சார்ந்த விடயமாயினும் ஒரு துறைக்குத் தம் பங்கினைச் செய்தவர்களை அடையாளங் காணாது விடுவதும், அவர்தம் படைப்புக்களைப் பதிவு செய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகுமென நான் நினைத்தேன். அந்நினைவின் வெளிப்பாடே இந்நூல். என் மதிப்பீட்டினை ஒத்த கருத்தினை ஒரு படைப்பாளி குறித்தோ, ஒரு படைப்புக் குறித்தோ விமர்சக அறிஞர்கள் கொண்டிருந்தபோது, அவர்தம் கருத்துக்களை அவ்வாறே எடுத்தாண்டுள்ளேன், உரியவாறு அவர்களின் உசாத்துணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' கூடியவரை பூரணமானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் கருதுகின்றேன். என் சக்திக்கும் தேடலுக்கும் அப்பாற்பட்டு, சில படைப்புக்களும் படைப்பாளிகளும் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக நமது மூத்த கவிஞர் முருகையன், 'சரஸ்வதி'யில் எழுதிய 'யமசாதனை' என்ற தரமான சிறுகதை குறித்த தகவல் விடுபட்டுப்போன சங்கதி, இந்த முன்னுரை எழுதும் போது நினைவில் வருகின்றது. இவ்வாறானவற்றைப் பெருமக்கள் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பு இன்னும் பூரணமானதாக அமையுமென நம்புகிறேன்.
மூதறிஞர் தி.ச. வரதராசன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவுச் சான்றாக இந்நூலை ஆக்கியுள்ளேன். ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவரது பேனா மூடி வைக்கப்படவில்லை. எனவே, ஈழத்துச் சிறுகதை வரலாற்றினை அவருக்காகவே எழுதித் தந்துள்ளேன். அவருக்கே இந்நூலைச் சர்ப்பித்துமுள்ளேன்.இந்நூலை ஆக்குவதற்குப் பல அறிஞர் பெருமக்கள் உதவினர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி யோகராசா, கலாநிதி எஸ்.சிவலிங்கராசா ஆகியோர் அவ்வகையில் முக்கியமானவர்கள், தம் கருத்துக்களைக் கூறி இந்நூலின் ஆக்கத்தை நெறிப்படுத்தியும் செம்மைப்படுத்தியும் ஆலோசனைகளைத் தந்தார்கள். 
நான் வேண்டியபோது தேவையான சிறுகதைகள் வெளிவந்த சஞ்சிகைகளையும், சிறுகதைத் தொகுதிகளையும் தந்துவதவியவர்கள் இருவர். ஒருவர் நடமாடும் நூற் களஞ்சியமாக விளங்கும் புத்தொளி நா.சிவபாதம் ஆவார், மற்றவர் என் இனிய நண்பர் சண்முகம் பாலசுந்தரமாவர். இவர்கள் இருவரிடமும் அரிய பல நூற்றுக்கணக்கான நூல்களுள்ளன. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளும் உதவியும் கிட்டாதிருக்குமாயின் இந்நூல் வெளிவரச் சந்தர்ப்பம் கிட்டாது போயிருக்கும். இவர்களுக்கு என் நன்றிகள்.
இந்நூலிற்குத் தக்கதொரு அணிந்துரையைப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவருடன் ஒரு விடுதி மாணவனாக வாழும் இனிய அனுபவம் எனக்குக் கிடைத்ததை இவ்விடத்தில் நினைவு கூறுகின்றேன். அவருக்கும் என் நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக இந்நூலைப் பெரும் செலவுடன் பதிப்பிக்கும் சேமமடு நிறுவனத்திற்கு என் கடப்பாடுடைய நன்றிகள்.
க.குணராசா
(செங்கை ஆழியான்)