Full Description (முழுவிபரம்): |
தமிழில் 'அழகியல்' தொடர்பான அடிப்படை நூல்கள் இன்னும் தெளிவாக உருவாக்கப்படவில்லை. அதாவது, அழகியல் தொடர்பான தத்துவார்த்தச் சொல்லாடல்களை எண்ணக்கருக்க-ளை முன்வைத்து கோட்பாடாக்கம் செய்யப்பட்ட நூல்கள் எழுதப்-படவில்லை. ஆங்காங்கு அழகியல் தொடர்பான சில கட்டுரைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஆனால், இவை அழகியல் தொடர்-பான அடிப்படை விளக்கத்தைக்கூட முழுமையாக வெளிப்படுத்தி உள்ளன எனக் கூற முடியாது.
தமிழில் இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ஓரளவு பேசப்பட்டாலும் கலைக்கோட்பாடுகள் பற்றி சரியாகப் பேசப்படவில்லை. எந்த ஒரு படைப்புக்கும் பின்னால் ஏதாவது ஒரு கோட்பாடோ பல கோட்பாடுகளோ அடிப்படையாக இருக்-கும். இந்த கலைப்படைப்புகளை எத்தனை கோணங்களிலிருந்து பார்க்க முடியும் என்பதற்கான தெளிவை முன்வைக்கும் பொழுதுதான் 'அழகியல்' பற்றிய தேடல், சிரத்தை மேற்கிளம்பும்.
இந்தத் தேவையை உணர்ந்து தான் அழகியல் அடிப்படை-களை எடுத்துரைக்கும் பாங்கில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா 'அழகியல்' எனும் இந்நூலை எழுதியுள்ளார். இதுவரை தமிழர் அழகியல், பண்டைத் தமிழர் அழகியல், மார்க்சிய அழகியல் தொடர்பாக சில கட்டுரைகள் சில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு 'அழகியல்' என்ற எண்ணக்கரு பற்றிய அடிப்படைகளை கலைக் கோட்பாட்டியல் பின்னணியில் இருந்து நுண்ணியதான விளக்கத்தை தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைப்படைப்பு பற்றியும் கலைகள் நுகர்வோருக்கு தரும் அனுபவம் பற்றியும் மேற்கொள்ளும் கருத்தாடல் விடயத் தெளிவைத் தருகின்-றன. பல்வேறு கடினமான பகுதிகள் இயலுமானவரை தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
மெய்யியல் பின்புலத்தில் கலை - அழகியல் பற்றிய தேடல் சிந்தனை விரிவானது. தத்துவப் பயிற்சி ஆழஅகலமாக விரியும் பொழுதுதான் 'கலையியல்' பார்வை விளக்கமாகவும், விமரிசனமா-கவும் கூர்மைப்பட்டு ஆழப்படும். தொடர்ந்து பல்வேறு அறிவுத் துறைகளுடன் கலையியல் மேற்கொள்ளும் ஊடாட்டம் கலை - அழகியல் பற்றிய அதி சிரத்தையான விரிசிந்தனையை ஆழமாக்கி வளப்படுத்தும்.
இந்நூல் இத்தகைய அம்சங்களை வலியுறுத்துவதுடன் அழகியல் பற்றிய அறிவுபூர்வமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதற்கான தடங்களையும் சுட்டிக்காட்டுகிறது. இதுவே இந்-நூலின் பலம். இன்னொருபுறம் பொதுவான கலை இலக்கியம் சார்ந்த வாசிப்பும் தேடலும் உள்ளவர்களுக்குரிய பொது வாசிப்பு நூலாக பயன்படும் வகையிலும் அமைந்துள்ளது. இத்துறைசார் நூல் வெளியீட்டில் 'அழகியல்' ஒரு முன்னோடி முயற்சியாகவே உள்ளது.
இது போன்ற அடிப்படை நூல்களை பேராசிரியர். சோ.கிருஷ்ணராஜா தமிழுக்குத் தரவேண்டும். இதனால், தமிழ் வளம் பெற வேண்டும்.
தெ.மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி
|