Book Type (புத்தக வகை) : நிர்வாகவியல்
Title (தலைப்பு) : தலைமைத்துவக் கோட்பாடுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-07-02-018
ISBN : 978-955-1857-17-2
EPABNo : EPAB/02/18585
Author Name (எழுதியவர் பெயர்) : தை.தனராஜ்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 152
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • முன்னுரை
  • நூலாசிரியர் உரை
  • பதிப்புரை
  • உருவங்களின் பட்டியல்
  • அட்டவணைகளின் பட்டியல்
  • தலைமைத்துவம் - அறிமுகம்
  • தலைமைத்துவம் பற்றிய வரைவிலக்கணங்கள் 
  • தலைமைத்துவ வகைகள்
  • தலைமைத்துவமும் விளைதிறனும்
  • தலைமைத்துவமும் முகாமைத்துவமும்
  • தலைமைத்துவமும் வலுவாண்மையும்
  • பண்புக்கூறுகள் அணுகுமுறை
  • திறன்சார் அணுகுமுறை
  • நடத்தைசார் அணுகுமுறை
  • சூழ்நிலைசார் அணுகுமுறை
  • சூழ்நிலைசார் தலைமைத்துவம் ஐஐ 
  • வழி - இலக்கு கோட்பாடு
  • தலைவர் - பணியாளர் பரிமாற்று தலைமைத்துவக் கோட்பாடு
  • நிலமாற்றுத் தலைமைத்தும் 
  • பணியாள் தலைமைத்துவம்
  • பெண் தலைமைத்துவம்
  • வாழ்வில் வெற்றியடைய ஏழு பழக்கங்கள்
  • முடிவுரை 
Full Description (முழுவிபரம்):

'தலைமைத்துவக் கோட்பாடுகள்'  என்னும் தலைப்புடன் வெளிவரும் இந்நூல் எனது மூன்றாவது நூலாகும். இதனை எழுதி தமிழ் வாசகர்களுக்கு விசேடமாக தமிழ்மூலம் முகாமைத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சமர்ப்பிக்க முடிந்தமையை எண்ணி நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது முகாமைத்துவ கற்கைநெறியில் தலைமைத்துவம் என்னும் தொனிப்பொருள் தொடர்பாக இருக்கக்கூடிய வெற்றிடத்தை இந்நூல் ஓரளவேனும் நிரப்பக்கூடும் என்னும் எனது பணிவான நம்பிக்கையாகும். 
எந்தவொரு நிறுவனத்தினதும் விளைதிறன் மேம்பாட்டுக்கு தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஒரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கும் ஒரு தேசத்தின் வெற்றிக்கும் கூட தலைமைத்துவமே பங்களிப்பு வழங்குகிறது. எனவே, தலைமைத்துவம் தொடர்பான ஆய்வுகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. அத்தகைய ஆய்வுகளின் விளைவாக தலைமைத்துவம் தொடர்பான சார்பிலக்கியம் மிகவும் செழுமையடைந்துள்ளது. இத்தொனிப்பொருள் தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு எண்ணிறந்த கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முகாமைத்துவம் தொடர்பான தொனிப்பொருள்களில் தலைமைத்துவம் பற்றியே அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தூரதிர்ஷ்டவசமாக ஏனைய அறிவியல் துறைகள் போலவே தலைமைத்துவம் தொடர்பாகவும் தமிழில் நூல்கள் அரிதாகவே உள்ளன. 
இன்று தனியார் துறையில் தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு பயிற்சிநெறிகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அண்மைக்காலமாக அரச துறையிலும் இவ்வாறான தலைமைத்துவ பயிற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இவை தமிழில் நடத்தப்படுவது மிகவும் குறைவாகும். இப்பயிற்சி நெறிகள் தவிர, பல்கலைக்கழகங்கள் மற்றும் மனிதவள விருத்தி தொடர்பாக செயற்படும் உயர்கல்வி நிலையகங்களில் நடத்தப்படுகின்ற டிப்ளோமா, பட்ட மற்றும் பட்டப்பின் கற்கைநெறிகளிலும் தலைமைத்துவம் ஒரு தொனிப்பொருளாகக் கற்பிக்கப்படுகிறது. தலைமைத்துவம் முகாமைத்துவ கலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக வளர்ச்சியடைந்துள்ளபோதும் அதனைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு தமிழில் போதுமான நூல்கள் இல்லாமை ஒரு பெருங்குறைப்பாடாகும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. 
எனவே, இக்குறைபாட்டினைக் களைந்து தமிழில் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரமல்லாது இத்தொனிப்பொருளில் ஆர்வமுள்ள ஏனையோருக்கும் உதவக்கூடிய வகையில் போதுமான நூல்களையும் ஆவணங்களையும் வெளிக்கொணர்வது இத்துறையில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்கள் மற்றும் புலமையாளர்களின் கடமையாகும்.
தலைமைத்துவம் தொடர்பான நூல்கள் ஆங்கிலத்தில் நிறையவே உள்ளன. அது மாத்திரமன்றி தலைமைத்துவம் தொடர்பான ஆய்வுகளை ஆவணப்படுத்தி மிக உயர்தரமான சஞ்சிகைகள் பல ஆங்கில மொழியில் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இவை தவிர இவ்விடயம் பற்றிய கட்டுரைகளும் ஏனைய விடயங்களும் இணைய தளத்தில் ஏராளமாக உள்ளன. அத்துடன், இவை நாளுக்குநாள் விரிவடைவதோடு இற்றைப்படுத்தப்படவும் செய்கின்றன. 
ஆனால், இவற்றின் முழுப்பயனையும் பெற்றுக்கொள்வதற்கு ஆங்கில மொழியறிவு முக்கியமானதாகும். அது இல்லாதவர்கள் இத்தகைய கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களின் பயனைப் பெற்றுக்கொள்ள முடியாது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட ஆங்கில அறிவு குறைந்த மாணவர்களும்  ஏனையோரும் இவற்றைப் பயன்படுத்தி தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியாத சாதகமற்ற நிலைமையில் உள்ளனர். இவர்களுக்கு உதவ வேண்டுமெனில் தலைமைத்துவம் தொடர்பான நூல் களைத் தமிழில் கொண்டுவர வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது இந்நூலினை ஒரு சிறுபங்களிப்பாகக் கொள்ள முடியும். 
முகாமைத்துவம், கல்வியியல் மற்றும் ஏனைய அறிவியல்கள் தொடர்பான தமிழ் நூல்களின் பற்றாக்குறை தமிழ் மாணவர் சமுதாயத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. தேசிய கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கின்ற வேளைகளிலும் பாடசாலை அதிபர்களுக்கு முகாமைத்துவப் பயிற்சி அளிக்கும் சந்தர்ப்பங்களிலும் இதனை என்னால் உணர முடிந்தது. 
மாணவர்களுடனான வகுப்பறைக் கலந்துரையாடல்களில் மட்டுமல்லாது அவர்களது ஒப்படைகளை மதிப்பிடும் போதும் எவ்விதமான புதிய தேடல்களும் இல்லாது வழங்கப்படும் குறிப்புகள் அல்லது கையேடுகளில் உள்ளவற்றை திருப்பி எழுதும் நிலையை எண்ணி நான் வேதனை அடைந்துள்ளேன். 
இந்நிலைமை தமிழ் சமூகத்தின் அறிவுசார் வறுமை நிலையை எடுத்தியம்புகிறது. உலகம் அறிவுசார் சமூகமாக நிலைமாற்றம் அடைகின்ற ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் காணப்படுகின்ற இந்த அறிவுப்பஞ்சம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. நான் இங்கு குறிப்பிடுகின்ற தமிழ் சமூகத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்லீம் சமூகமும் உள்ளடங்குகிறது. இந்த பரிதாபத்துக்குரிய நிலைமை மாற்றப்படவேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவும் வேண்டும். அந்த அடிப்படையிலேயே இந்நூலை நான் எழுதினேன். 
தலைமைத்துவம் பற்றி ஆங்கிலத்தில் வாசிக்கக்கூடியவர்கள் இந்நூலை வாசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கில நூல்களில் நான் வாசித்தவற்றையே எனது அனுபவங்களுடன் இணைத்து இந்நூலில் தருவதற்கு நான் முயன்றுள்ளேன். ஒரு மொழியிலுள்ள அறிவியல் கோட்பாடுகளை இன்னொரு மொழியில் தருவது எவ்வளவு சிரமமானது என்பதை இந்நூலை எழுதும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆங்கிலத்தில் புதிதுபுதிதாக வந்துசேரும்  கலைச்சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் கோட்பாடுகளை தமிழில் கொணர்வது மிகவும் சிரமமானதாகும். 
இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த விடயங்களை வரிக்கு வரி கரடுமுரடான தமிழில் மொழிபெயர்க்கப்படும் நிலைமை உள்ளது. தமிழ் மரபுக்கு ஏற்ற வகையில் அல்லாது வித்தியாசமான ஒரு மொழி நடையில் எழுதப்படும் இந்த மொழிபெயர்ப்புகளை வாசித்து விளங்கிக் கொள்வதில் தமிழ் மாணவர்கள் பெரிதும் திண்டாடுவதை நான் அறிந்துள்ளேன். உண்மையில் நாம் இன்று அறிவியல் துறையைப் பொறுத்தமட்டில் ஒரு 'மொழி பெயர்ப்பு சமூகமாக' மாறிப்போய்விட்டோமா என நான் அஞ்சுகிறேன். 
இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அறிவியல் கருத்துக்களை வாசித்து, உள்வாங்கி அவற்றை வாசகர்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளத்தக்கதாக மிகவும் எளிமையான, சரளமான தமிழில் தருவது இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. அவ்வாறான ஒரு சிந்தனையுடனேயே இந்நூலை எழுத நான் முயன்றுள்ளேன். அதில் நான் ஓரளவேனும் வெற்றி பெற்றுள்ளேனா என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நூல் வெளிவருவதில் பலருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இம்முயற்சிக்கு அடித்தளம் இட்டது மட்டுமல்லாது தொடர்ந்து நேரிலும் தொலைபேசியிலும் என்னை ஊக்குவித்த நண்பர் 'அகவிழி' ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றியை முதலில் கூறிவிடவேண்டும். அத்துடன், இந்நூலுக்கான முன்னுரையையும் அவரே எழுதியுள்ளார். அடுத்து எனது நன்றிக்குரியவர் இந்நூலை வெளியிடும் சேமமடு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களாவார். மிகக் குறுகிய காலத்தில் பல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ள அவருக்கு தமிழ்க்கல்வியில் ஆர்வமுள்ள சகலரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அவரது பணி ஓங்கி வளர்ந்து இன்னும் பலநூறு நூல்களை வெளியிட்டு தமிழ்க்கல்வியை செழுமைப்படுத்த வேண்டும் எனப் பணிவுடன் வாழ்த்துகிறேன். 
முகாமைத்துவக்கல்வி சார்ந்த நூல்களை எழுதுமாறு என்னை எப்போதும் ஊக்கப்படுத்திவரும் எனது மதிப்புக்கும் அன்புக்குமுரிய ஆசான் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களுக்கும் நண்பர் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேர்ட் அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 
இந்நூலினைத் தொடர்ந்து தலைமைத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பல நூல்கள் தமிழில் வெளிவந்து தமிழ்க்கல்வி உலகத்தை செழுமைப்படுத்துமாயின் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 
இந்நூல் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை உங்களிடமிருந்து நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

அன்புடன்
தை.தனராஜ்