உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை.
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல்
போகப்போகிறது
என்று சொல்வதிலும்
திரும்பவும்
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள்.
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார்ந்து சித்திரிப்பது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
இந்த சமூக வாழ்வில் முகிலன் கடைந்து எடுத்த இந்த அமிர்தம் எல்லோரது சிந்தனைக்கும் வலுவூட்டுவதாக அமைகிறது.
இலங்கை இதழியல் கல்லூரியல் 2010ஆம் ஆண்டின் பத்திரிகைத் துறையை கற்க வந்த ஒரு மாணவனாக அறிமுகமான முகிலன் 'நெடுந்தீவு முகிலன்' என்ற கவிஞனாக தன் அடையாளத்தை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் இந்த சமூக சிந்தனையுடன் ஊடகத் துறையில் அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
|