கொன்றைவேந்தன் |
கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களிற் சேர்க்கப்பட் டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 'சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு' என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். |