நாம் கதைகளால் நிரம்பிய உலகத்தில்தான் வாழ்கின்றோம். நமக்குக் கதையென்பது காலத்தின் தொல்வடிவங்களுள் ஒன்றாகும். நமக்குக் கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல் சார்ந்த உயிர்ப்பான தருணங்களாகும். நமது ஆத்ம ஈடேற்றத்தின் சடங்காக வாழ்முறைக்கான வளமான கூறுகளாக அடையாளம் காட்டும் களஞ்சியம். மானிட வாழ்வில் இந்தக் கதைகள் பண்டமாற்றம் போல் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றம் பன்முக ரீதியில் இன்றுவரை தொடர்கிறது.
கதை சொல்லலும் கேட்டலும் தொடர்ந்து கதை புனையும் பண்பையும் வளர்த்தெடுத்தது, கதையெழுதும் மரபையும் கண்டுபிடித்தது. ஆக கதைகள் நமது மகிழ்வுக்குரிய சாதனம். பொதுவில் கதைகள் எங்கும் நீக்கமற ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மானிட வளர்ச்சியின் உயிர்ப்புத் தளமாகவும் கதைக்களம் இடம்பெறுகின்றது.
பன்னாட்டுப் பண்பாட்டு அடையாளமாகவும் கதைகள் நீட்சி பெறுகின்றது. கதையின் வழியே நமக்கான வாழ்வியல் மதிப்பீடுகள் கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. தனிமனிதனின் ஆசைகள் விருப்புகள், இரகசியங்கள், மகிழ்ச்சியின்மைகள், இயலாமைகள், தோல்விகள், வீரம், துணிச்சல், நகைச்சுவைகள் போன்றவைகள் கதைகள் வழியே பரிமாறப்படுகின்றன. இதைவிட சமூகத்தின் மீதான தனிமனிதனின் கோபம், இயலாமை மற்றும் அதிகாரத்தை மறைமுகமாக பரிகசிப்பது போன்றவையும் கதைவழியேதான் நமக்குச் சாத்தியமாகின்றன. இதனால்தான் சிறார்களுக்கான கதைகள் தமிழில் அதிகம் வெளிவரவேண்டியுள்ளது. இன்றுவரை கதைகள் மூலம் தன்னையும் சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கதைக்களம் எம்மிடையே நீண்டு கொண்டிருக்கிறது. கதையை நாம் எதிர்கொள்ளும்போது கதையின் பகுதியாகவே நாம் மாறிவிடுவதோடு கதை சொல்லிகளாகவும் நாம் தொடர்ந்து அலைந்து திரிகின்றோம்.
‘கிராமத்துக் கதைகள்” என்னும் இத்தொகுப்பு சிறார் இலக்கியத்தில் புதுவரவு. இந்தக் கதைகளில் கதை சொல்லப்படும் சூழல் மற்றும் கதைசொல் முறை போன்றவற்றில் புதுமையும் புத்தாக்கமும் இழையோடுகின்றது. எமக்கு புதுக்கதைகளை இயற்றும் பண்பையும் கற்றுத்தருகின்றது. இந்த ரீதியில் இந்த ஆக்கம் வெற்றிகரமான படைப்பென்றே கூறலாம்.
|