Full Description (முழுவிபரம்): |
என்னை எழுத வைத்தவர் 'தமிழர் தகவல்' ஆசிரியர் நண்பர் திரு. திருச்செல்வம். என்னைக் கொண்டு எழுதுவித்தவர் 'வெற்றிமணி' மற்றும் 'சிவத்தமிழ்' ஆகியவற்றின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.
பொதுவாக நான் என்றுமே எழுதுவதில் ஆர்வம் காட்டியவன் அல்ல. எப்படியோ திருச்செல்வத்தின் பார்வையில் பட்ட என்னை 'கனடா வாழ் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், புதிய சூழல், புதிய கலாசாரம், புதிய கல்வி முறை எனப்பல உள்ளனவே அவை பற்றி ஏதாவது எழுதுங்களேன் உபயோகமாக இருக்கும்' என வருந்தி எழுத வைத்தார். அவைகளைத் தொகுத்து இரண்டு நூல்களாகவும் வெளி-யிட்டுள்ளார். என்னை எழுத வைப்பதற்கு அவர் கையாண்ட உத்தி சாம, பேத, தான, தண்டம்.
'தமிழர் தகவல்' வழங்கிய கௌரவத்தினைப் பெறுமுகமாகக் கனடா வந்த சிவகுமாரன் மறைந்த எனது மகன் நினைவாக நான் சிறு-வர்களுக்காக எழுதிவைத்த சிறுகதைகள் சிலவற்றினை எடுத்துக் கொண்டு ஜெர்மனி சென்றார். 'மாறன் மணிக்கதைகள்' என அழகான நூலாக்கி அதனை ரொறன்ரோ எடுத்து வந்து அவனது முதல் ஆண்டு நினைவு நாளன்று வெளியீடு செய்தார். திரும்ப ஜெர்மனி செல்கின்ற போது ஒரு அன்புக் கட்டளையுடன் சென்றார். அவை போன்ற சிறுவர்-களுக்கான சிறுகதைகளை வெற்றிமணியில் பிரசுரிப்பதற்காக எழுது-மாறு வேண்டுகோள் விடுத்தார். அன்புக் கட்டளையை மீற முடிய-வில்லை. முயன்றேன். சில எழுதவும் செய்தேன். அவற்றில் சிலவற்றி-னைத் தொகுத்து எனது மாணவியும் பிரபல எழுத்தாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் 'மாறன் மணிக்கதைகள் -2' எனத் தாயகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
சிவகுமாரன் எந்த நேரமும் தனது பத்திரிகை பற்றிய சிந்தனை-யிலேயே இருப்பவர். ஆகவே, அவர் சிந்தனையில் அடுத்துத் தோன்றிய எண்ணம் என்னைக் கொண்டு விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவித்தால் என்ன என்பது. அது அன்புக் கட்டளையாக என்னிடம் வந்தது. பிடி-வாதக்காரர். கொஞ்சம் கூட நெகிழ்ச்சி காட்டமாட்டார். சொன்னால் சொன்னதுதான். நான் வேறு எந்தக் கட்டுரையோ, கதையோ எழுதினால் வரையறை செய்து விடுவார். இந்த நிர்ப்பந்தம் காரணமாக நான் விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்க வேண்டியவனாகிவிட்டேன்.
இத்தொகுதிக்கான அணிந்துரையினை எழுதியவர் எனது அன்பிற்குரிய அதிபரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான சைவப்-புலவர் சு.செல்லத்துரை அவர்கள். பின் அட்டையில் என்னைப் பற்றிய அறிமுகத்தினை எழுதியவர் பிரபல எழுத்தாளரும் என் அபிமான மாணவியுமான கோகிலா மகேந்திரன் அவர்கள். இவர்கள் இருவருக்கும் என் இதயபூர்வ நன்றிகள்.
வெற்றிமணி சிவகுமாரன் அவர்கள் திறவுகோல் இது ஒரு விண்-ணாணம் என்ற தலைப்பில் ஜேர்மனியில் வெளியிட்டார். கட்டுரையில் சேர்ப்பனவுகளுடன் அன்புக்குரிய மாணவி கோகிலாவின் அறிமுகம் மூலம் தாயக சேமமடு பதிப்பகத்தினூடாகத் திறவுகோல் விஞ்ஞானக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளிவருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொ.கனகசபாபதி
|