Book Type (புத்தக வகை) : | பொருளியல் | |
Title (தலைப்பு) : | இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2013-02-01-120 | |
ISBN : | 97-895-568-501-92 | |
EPABNo : | EPAB/02/18819 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | அமிர்தலிங்கம், கோ | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2013 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 152 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 400.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | 1. அத்தியாயம் ஒன்று அட்டவணைகள் |
Full Description (முழுவிபரம்): | தற்போது இலங்கையில் வரிவிதிப்பு தொடர்பாக தமிழில் எந்தவொரு நூலும் காணப்படாத நிலையில் இவ்விடைவெளியினை நிரப்பும் வண்ணம் இலங்கையில் வரிவிதிப்பு : கோட்பாடும் நடைமுறையும் என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இப்பாடநூல் க.பொ.த. உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள், பொருளியல் ஆசிரியர்கள் மற்றும் பொதுஅறிவினைத் தேடுவோர் எனஅனைவரும் வரிவிதிப்பு தொடர்பான கோட்பாடுகளையும் வரிவிதிப்புதொடர்பாக இலங்கையில் எவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்பதனையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 1983 ஆம்ஆண்டிலிருந்துஆரம்பித்த இன யுத்தமானது பொருளாதாரம் மீது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. விரைவான அபிவிருத்தியை நாடு வேண்டி நிற்கும் ஒரு காலகட்டத்தில் கூடுதலாகப் படுகடன்களில் தங்கிருக்காமல் உள்நாட்டிலேயே நிதிவளங்களைத் தேடவேண்டியது அவசியமாகும். கோட்பாடு மற்றும் பலநாடுகளின் வரிதொடர்பானஅனுபவங்களைினை ஒப்புநோக்கி 1980 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரிதொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இலங்கையின் வரிவருமானத்தினைஅதிகரிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுபற்றி இந்நூல் விலாவாரியாக விளக்குகின்றது.
அணிந்துரை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவா;களின் “இலங்கையில் வரி விதிப்பு: கோட்பாடும் நடைமுறையும்” என்ற நூலிற்கு இவ்வணிந்துரையினை எழுதுவதில் அளப்பரிய மகிழ்ச்சி அடைகிறேன். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இவருக்கு பொது நிதி, சர்வதேச பொருளாதாரம், அபிவிருத்திப் பொருளியல் போன்ற துறைகளில் விரிவுரைகளை நிகழ்த்தியிருந்தேன். பொருளியல் சிறப்பு மாணவராக இருந்த இவர் பல்கலைக்கழகக்கல்வி முடித்ததும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்துகொண்டார். அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த தேசமானிய வாழ்நாள் பேராசிரியர்.w.d.லக்ஸ்மன் அவர்கள் தலைநகரில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகம் ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இருக்கவேண்டுமானால் மும்மொழியிலும் கற்கை நெறிகளைக் கொண்ட பல்கலைக்கழகமாக விளங்க வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவராக காணப்பட்டதனால் தமிழ்மொழிக் கற்கைநெறிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தர். இதன் மூலம் பல தமிழ் பட்டதரிகள் கொழும்பு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் குழாத்திலே இணைந்துக்கொண்டனர். அவ்வாறு இணைந்துகொண்ட அமிர்தலிங்கம் அவர்கள் துணைவேந்தரது மதிப்பீடு திறனை மெய்ப்பிற்கும் அளவிற்கு இன்று வளா;ந்து பொருளியலில் கலாநிதிப்பட்டமும் பெற்றிருப்பது அவரிற்கு கற்பித்த விரிவுரையாளர் என்ற வகையில் எனக்கும் பெருமை சேர்க்கின்றது. இவரது வளர்ச்சிகண்டு பெருமிதம் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
மக்கள் வங்கியின் ஆங்கில மொழி மூல ஆராய்ச்சி வெளியீடான “Economic Review” வில்இவரது கட்டுரையை வாசித்து இவரது புலமையும், பொது நிதி ( Public Finance ) அல்லது பொதுத்துறைப் பொருளாதாரத்தில் இவருக்கு இருந்த ஆர்வமும், ஆங்கில மொழித் தேர்ச்சியும் புலப்பட்டது. இன்று அவர் இந்தத் துறையிலேயே கலாநிதிப்பட்டம் பெற்று தமிழ் மொழி மூலமான ஓர் நூலை வெளியிடுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆங்கில மொழியை உழைப்பும், முயற்சியுமிருந்தால் தம்வசப்படுத்தலாம் என்பதற்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம் எனது மாணவர் என்றால் மிகையாகாது. இந்நூலாசிரியரின் வளர்ச்சி மேலும் பலருக்கு முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் அமைய வேண்டும் என்ற எனது அவாவின் காரணமாகவே அணிந்துரையில் இதனை எழுதியுள்ளேன். இனி அவரது நூலினுள்ளே செல்லலாம்.
“இலங்கையில் வரி விதிப்பு: கோட்பாடும் நடைமுறையும்” என்ற இந்நூலினை ஆறு அத்தியாயங்களாக வகுத்து, முதல் மூன்று அத்தியாயங்களையும் வரி தொடர்பான கோட்பாட்டிற்காகவும், இறுதி மூன்று அத்தியாயங் களையும்இலங்கையில் நடைமுறையிலுள்ள வரிக்கட்டமைப்புப்பற்றியும், வரி வருமான அதிகரிப்பிற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளர்.
இலங்கையின்உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மகுட வாசகமான “உங்கள் வரி நல்ல எதிர்காலத்திற்கு” என்பதிலிருந்து வரி என்பது அரச வருமானத்தின் ஒரு முக்கியமான தோற்றுவாய் என்பது புலனாகின்றது. வரி வருமானங்களைக்கொண்டே அரசு பல்வேறு செலவினங்களை மேற்கொள்கின்றது. அரசு தனது மீண்டெழும் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவினங்கள் என்பனவற்றிற்கு வரி வருமானத்தையே நம்பியிருக்கின்றது. அரசாங்கம் ஆண்டுதோறும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும், வாழ்க்கைப்படிகளை வழங்கவேண்டும், இலவச சேவைகளை அளிக்கவேண்டும், நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்தி வேலைகளினை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்ற பாமரர்களும், படித்தவர்களும் எங்கிருந்து தேவையான நிதியினை பெற்றுக் கொள்வது என்பதனைச் சிந்திக்க மறந்து விடுகின்றனர். அரசு வரி மூலம் வருமானத்தை அதிகரிக்க முன்மொழிவுகளைச் செய்யும் போது கடுமையாக விமரிசிக்கின்றனர். வீண் விரயங்களைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதெனினும் வருமான அதிகரிப்பு என்பதும் அவசியமானது என்பதனை மறந்துவிடலாகாது. இதற்கு வரி பற்றிய ஆழமான புரிந்துணர்வு மக்கள் மத்தியில் அவசியமாகிறது. இந்நூல் அப்பணியை சிறந்த முறையில் செய்யும் என நம்புகின்றேன். நூலின் வடிவமைப்பிலிருந்து இது புலனாகின்றது.
முதல் அத்தியாயத்திலேயே வரி விதிப்பின் நோக்கம் பற்றி எடுத்தாராயப்பட்டுள்ளது. வரி மூலம் வருமானம் மட்டுமல்ல வேறும் பல நோக்கங்களையும் அடைய முடியும். இறக்குமதியினை கட்டுப்படுத்தலாம், வருமானப் பங்கீட்டினை மேற்கொள்ளலாம், உற்பத்தி வளங்களை நெறிப் படுத்தி வினைத்திறனை அதிகரிக்கலாம். எனவே பல்வேறு நோக்கங்களை அடைந்து கொள்ள அரசு வரி விதிப்பினை மேற்கொள்ளலாம். இதனை முதலாம் அத்தியாயம் விளக்குகின்றது.
இரண்டாம் அத்தியாயம் முற்றுமுழுதாக வரி விதிப்பு சார்ந்த தத்துவங்கள், கோட்பாடுகள் பற்றி விளக்குகின்றது. இப்பகுதி பாமர மக்களுக்கு கடுமை யானதாக இருந்தாலும் ஒரு வரியின் பின்புலத்தையும் அதன் தாக்கத்தையும் ஆராய அவசியமானது. கோட்பாட்டு ரீதியான தெளிவு இருந்தால் மட்டுமே வரிவிதிப்பின் விளைவுகளை உய்த்தறிய முடியும்.
அடுத்த அத்தியாயம் இரண்டு முக்கிய வரிக்கட்டமைப்பு பற்றி ஆராய்கின்றது. வரியில் நேர் வரி, நேரில் வரி என்ற இரு பிரதான கட்டமைப்பு உண்டு. வரி விதிப்பும் அதன் சுமையும் ஒரு புள்ளியில் இருக்கும் பட்சத்தில் அதனை நோ;வரி எனவும், வரிவிதிப்பு ஓர் இடத்திலும் வரிச்சுமை இன்னோர்டத்திலும் இருக்குமெனில் அதனை நேரில்வரி எனவும் வகைப்படுத்தியுள்ளனர். நேர் வரிக்கு உதாரணமாக வருமான வரியையும், நேரில் வரிக்கு உதாரணமாக பொருட்கள் சேவைகள் மீது விதிக்கப்படும் வரியையும் குறிக்கலாம். இது பற்றிய அனுகூலம்,பிரதிகூலம் பற்றி ஆராய்ந்திருப்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும்.
நான்காம், ஐந்தாம் அத்தியாயங்கள் இலங்கையின் வரிக்கட்டமைப் பையும், நடைமுறைபடுத்தப்பட்ட, தற்போது நடைமுறையிலுள்ள வரி முறைகளையும் ஆராய்கிறது. மேலும் வேறுபட்ட வரி முறைகளிடையே வினைத்திறன், விளைதிறன், நியாயத்தன்மை, நிர்வாக இலகுத்தன்மை போன்றவற்றையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருப்பதன் மூலம் வாசகர் மத்தியில் தற்றுணிவுடன் தீர்மானம் எடுக்கத்தூண்டும் முயற்சியில் ஆசிரியர் முனைந்திருப்பது வெளிப்படுகின்றது.
இறுதியாக ஒரு ஆய்வாளராக, துறைசார் நிபுணராக, ஆலோசகராக வரி மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அல்லது முன்மொழிவுகளை சுட்டிக்காட்டி நூலை நிறைவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. வெறுமனே பிணிக்கான காரணத்தை மட்டும் சொல்லாமல் பிணியை முற்றாக ஒழிப்பதற்கான வழிவகைகளையும் சொல்வது தான் சிறந்த மருத்துவருக்கான பண்பு. அதேபோல நல்ல ஆய்வாளரும் பிரச்சனையை ஆராய்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் காட்ட வேண்டும். அந்தப்பணியை சிறப்புற இந்த நூலாசிரியர் செய்து முடித்துள்ளார்.
இந்த நூல் பொதுத்துறை பொருளியல் அல்லது பொது நிதியில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரதும் எதிர்பார்க்கையை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நூல் க.பொ.த. உயர்தர மாணவர்கள்,கற்பிக்கும் ஆசிரியர்கள், பொதுப்பாரீட்சைக்குத் தயாராகும் பாரீட்சார்த்திகள், பட்டதாரி மாணவர்கள், தொழில் நுட்பக்கல்லூரி மாணவா;கள், தொழில்சார் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் என அனைத்து பிரிவினருக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. இப்பயன்தரு நூலை தமிழில் ஆக்கிப்படைத்த என் மாணவருக்கு எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துவதுடன் அவர் பணி மென்மேலும் வளர இறைவன் அருள் பாலிக்க வேண்டும் என அவன் தாள் வணங்கி பணிகின்றேன்.
பேராசிரியர். இ. நந்தகுமாரன்
|