Full Description (முழுவிபரம்): |
ஆரம்பத்தில் இருந்து மனித சமுதாயத்தில் கல்வியும் வளர்ந்து வந்துள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொரு ஜீவியும் கல்வி வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதைத் தேவையானதைக் கற்றுக்கொண்டே வந்துள்ளார்கள். கற்றல் என்பது மனிதரது இயல்பான பண்புகளில் ஒன்றானது. மனிதர்கள் தொடர்ந்து புதியவற்றைத் தேடியும் கண்டுபிடித்தும் கல்வியின் பல்பரிமாண விருத்திக்கும் சாதகமான தன்மைகளை உருவாக்கி வந்துள்ளார்கள்.
கல்விச் செயற்பாடு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு, கருத்துநிலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக நாடுகளின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியில் கல்விச்செயற்பாட்டின் பங்களிப்புக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படும் நிலைமைகள் படிப்படியாக மேற்கிளம்பின. கல்வியின் நவீன செல்நெறிகள் மனிதாயப்பட்ட போக்குகளின் மற்றும் அவற்றின் செயல்தன்மைகளின் உள்ளீடுகள் நிரம்பிய தளமாகவும் உருப்பெற்றன. இந்த நோக்கில் கல்வி பற்றிய சிந்தனைகளின் களம் மேலும் மேலும் விரிவும் ஆழமும் கண்டது, கண்டு வருகின்றது.
சமகாலத்தில் பாடசாலை மற்றும் உயர்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள் கல்விசார் அறிவுத் தொகுதியில் பெரும் மாற்றங்களை, பாய்ச்சல்களை உருவாக்கியுள்ளன. இன்று கல்விசார் அறிவுத்தொகுதி 'கல்வியியல்' அறிவுத்தொகுதியாக கற்கைப் புலமாக வளர்ச்சியடைந்துள்ளது. சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த அறிவுத் தொகுதிகளுக்கு ஈடாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பெரும் பாய்ச்சலாக வளர்ச்சி கண்டுள்ளது.
இத்தகு பின்புலத்திலேயே கல்வி பற்றிய நவீன சிந்தனைகள் முகிழ்ந்துள்ளன. இவை மேலைத்தேசம், கீழைத்தேசம் சார்ந்து பல்வேறு சிந்தனைப் பள்ளிகளாக உருப்பெற்றுள்ளன. ஆனால் தேடுதல் மனித குலத்தின் பண்பு அது. தனது தொடர்ந்த தேடுதலில் எப்போதும் பின்வாங்குவதில்லை. இதன் பயனாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பல்வேறு அறிவுத் தொகுதிகளுடன் ஊடாடி மேலும் வளர்ச்சி கண்டுள்ளன. வளர்ச்சி கண்டு வருகின்றன.
இதுவரை உலகின் பலபாகங்களில் இருந்தும் தத்துவார்த்த அடிப்படைகளை பல்வேறு ஆளுமைகள் விளக்கியுள்ளார்கள். இந்த விளக்கத்தின் விரிவாக்கத்தின் அடிப்படையில் கல்வியின் கருவூலங்கள் யாவும் சமூகம், மனிதர், இயற்கை பற்றிய விசாரணைகளாகவே நீட்சிப்பெற்றுள்ளன. இவை தொடர்ந்து மனித விடுதலை, சமூகமாற்றம் குறித்த தேடலுக்கும் வழிவகுத்துள்ளன. நாம் இத்தகு ஆளுமைகளை அவர்தம் சிந்தனைகளை, கோட்பாடுகளை, மாற்றுச் சிந்தனைகளை, தொடரும் உரையாடல்களை விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
இந்த நோக்கத்தின் காரணமாகவே 'கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்' என்னும் இந்நூல் வெளிவருகின்றது. இந்நூல் கல்வியியல் அறிவுத்தொகுதியில் ஒரு புதுப்பரிமாணம் எனலாம். சுமார் 25 கல்விச் சிந்தனையாளர்களின் தத்துவார்த்தப் புலப்பாடுகள் தத்துவ விசாரணைகள் தொடருறு அறிவுச் சேகரமாக மையம் கொள்வதை இனங்காணலாம். பன்னாட்டுக் கல்விப் பரப்பில் கல்வியியல் தொடர்பான மரபு வழிக்கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் நாம் இன்னும் ஆழமாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதன் பயனாகவே இந்நூல் வெளிவருகின்றது.
நாம் ஒரு தொடர் கற்றலை ,விவாதத்தை, உரையாடலை நிகழ்த்த வேண்டுமானால் மிகக்குறைந்த கால அளவில் மிக அதிகமான தத்துவச் சிந்தனைகளைக் கடந்து வரவேண்டி உள்ளது. பிளேட்டோ, ரூசோ....., மார்க்ஸ்....., புறூனர்....., பூக்கோ, லியாதார்த்... போன்ற ஆளுமைகள் சார்ந்து நாம் இயங்கும் போதுதான் 'கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்' என்னும் பொருட்பரப்பில் ஆழமான கற்றலை, தேடலை நிகழ்த்த முடியும். ஆகவே தமிழில் இது போன்ற நூல் தமிழ்ச்சிந்தனை மரபின் கோட்பாட்டு உறுதிப்பாடுகளையும் மதிப்பீட்டுப் பெருக்கங்களையும் உருவாக்கித் தரும் ஒரு செயல்தளமாகவும் நகர்கின்றது.
ஆக இத்தகு செயல்தளத்தை பேராசிரியர் சபா.ஜெயராசா தமிழில் எடுத்துத் தந்துள்ளார். அவருக்கேயுரித்தான மொழிநடையில் அறிவுத் தேட்டங்களை சமூகப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் பாங்கில் நூலை எழுதியுள்ளார். இதன்மூலம் பல்வேறு புதிய எண்ணக்கருக்களை கருத்தாடல் செய்ய முற்படுகின்றார். நவீனத்துவம், பின்னவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளை அடியொற்றி மேலைத்தேசத்தில் வளம்பெறத் தொடங்கிய சொற்களஞ்சியம் தமிழிலும் வரவு கொள்ளத் தொடங்க இந்த நூல் மூலம் புதுத்தடம் அமைக்கின்றார்.
நாம் வழமைபோல் இந்த நூலுக்கும் எமது ஆதரவை வழங்கி பேராசிரியரது முயற்சி தேடல் தொடர பக்கபலமாக இருப்போம். இது எமது கடமை ஆகும்.
சேமமடு பொத்தகசாலையின் இணை நிறுவனமான - சேமமடு பதிப்பகம் துணிந்து இது போன்ற நூல்களை தமிழில் வெளியிட வந்தமைக்கு நாம் சேமமடுவை பாராட்டுவதுடன் தொடரும் அவர்களது முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.
தெ.மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி
|