Full Description (முழுவிபரம்): |
சமகாலத்தில் அனைத்து நவீன அறிவுத் துறைகளிலும் ஊடாடி நிற்கும் அறிவியலாக உளவியல் மேலெழுந்துள்ளது. இது மேலும் ஓர் தனித்துவமான கற்கைப் புலமாகவும் விருத்தி பெற்றுள்ளது.
இன்று வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் அறிவுத்துறைச் செயற்பாடுகளில் உளவியலின் தேவை மீள மீள வலியுறுத்தப்படுகிறது. ஆகவே, இத்துறையை வளம்படுத்தும் நூல்கள் தமிழில் அதிகம் வெளிவர வேண்டும். இது அவசியமானதும் கூட.
இத்தேவையை நிறைவு செய்யும் வகையிலும் உளவியல்சார் புலமைத்துவத்தை மாணவர்களுக்கு தெளிவாக கையளிக்கும் விதத்திலும் பேராசிரியர் சபா.ஜெயராசா முனைப்புடனும் பொறுப்புடனும் நிதானமாக இயங்கி வருகின்றார். இந்த அறிகைத் தொடர்ச்சியில் 'உளவியல் முகங்கள்' என்னும் நூலை பேராசிரியர் நமக்குத் தந்துள்ளார்.
மரபுவழி உளவியல் தொடக்கம் நவீன உளவியல் ஈறாக நாம் விளங்கிக் கொள்வதற்கான படிமலர்ச்சிகளை 'உளவியல் முகங்கள்' நமக்கு அடையாளம் காட்டுகின்றது. இன்று அறிவியலில் காண்கிற பெரும்பாலான சிந்தனைகளின் வித்துகள் தத்துவங்களில் உள்ளன. மனிதரைப் பற்றியும் மனிதர் தொடர்பான துறைகளைப் பற்றியும் தத்துவவாதிகள் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் உள்ளம் பற்றிய சிந்தனைகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இவை உளவியலில் பல்வேறு புதிய போக்குகளை உருவாக்கி வருகின்றன.
தற்போதைய கணிப்புப்படி பிளேட்டோவிலிருந்து 'உளவியல் சிந்தனை வரலாறு' தொடங்குகிறது. இது பின்னர் கிரேக்கத் தத்துவம் கடந்து ஐரோப்பிய தத்துவவாதிகளான காண்ட், பெர்க்கிலி, தெக்கார்த்தே, ஜான்லாக், கோபென்ஹர், நீட்சே முதலியோரைக் கடந்து வளர்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் தான் அறிவியல் முறைக்கு உளவியல் வந்தது. உளவியல் வரலாற்றில் தத்துவமுறை உளவியல், அறிவியல்முறை உளவியல் ஆகிய இரண்டும் பெருங் கட்டங்களாகும். இவை பிளேட்டோ தொடங்கி வளர்ந்துவரும் படிமலர்ச்சியின் படிகளாகும். அவ்வரிசையில் உளப்பகுப்பாய்வு இடம்பெறுகிறது. தொடக்கத்தில் ஃப்ராய்ட், யூங், அட்லர் ஆகிய மூவரும் உளப்பகுப்பாய்வின் மும்மூர்த்திகள் என்பர். இப்போது அட்லருக்கு மாற்றாக லக்கான் இடம்பெற்றுவிட்டார்.
நவீன தத்துவத்தை மறுமலர்ச்சிக்காலம், அறிவொளிக்காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு எனப் பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் எல்லாவற்றுக்கும் இறுதியாக வந்து நின்று தத்துவத்தின் அடிப்படையையே கேள்விக் குறியாக்குவது பின்னை நவீனத்துவம். நவீனத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய ப்ராய்ட் பின்னை நவீனத்துவத்தில் லக்கான் வழியாக ஆதிக்கம் செலுத்துகிறார். இன்னொருபுறம் ஃப்ராய்ட் வளர்த்தெடுத்த நவீன உளவியலைச் செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர் லக்கான். இவரே நவீன உளவியலைப் பின்னை நவீனத்துவ உரையாடலுக்கு உட்படுத்தியவர். தொடர்ந்து இந்த மரபுகளை விளங்கிக்கொள்ள மார்க்சியம், இருத்தலியல், அமைப்பியல், பின்-அமைப்பியல், பின்னை நவீனத்துவம் போன்றவை குறித்த அக்கறை நமக்கு வேண்டும்.
இத்துடன் மொழியியல், சமூகவியல், குறியியல், தொன்மவியல், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் பெண்ணியம் போன்ற துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு வேண்டும். அப்பொழுதுதான் உளவியல்சார் சிந்தனைப்புலம், ஆய்வுநெறி யாவும் விரிவுபெறும். இந்தப் பின்புலத்தை 'உளவியல் முகங்கள்' என்னும் நூல் அடையாளப்படுத்துகிறது.
குறிப்பாக, 'கோளமய உளவியல்' 'பின்னவீனத்துவ உளவியல்' போன்ற மாற்று வகையான சிந்தனைகள் குறித்த தேடல் ஆய்வு இன்னும் எம்மிடையே பெருக வேண்டும். இந்தச் சிந்தனைகளை இந்நூல் எமக்கு அடையாளப்படுத்துகிறது. சமகால சிந்தனை மரபுகளில் இழையோடிவரும் 'கோளமய உளவியல்' குறித்த விமரிசன ரீதியான அணுகல்முறை நுண்ணியதாக விரிவு பெற வேண்டும்.
நாம் மாற்று உரையாடல்களுக்கான களங்கள் நோக்கி நகர வேண்டும். 'உளவியல் முகங்கள்' சமகால உளவியல் சிந்தனைகளில் மையம் கொண்டுள்ள சில போக்குகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமிழ் நிலைப்பட்ட சிந்தனைக்கும் தேடலுக்கும் இந்நூல் புதுவெளிச்சம் பாய்ச்சக் கூடியதாக உள்ளது.
இந்த ரீதியில் பேராசிரியர் சபா.ஜெயராசா மதிக்கப்பட வேண்டியவர் இத்துறைசார் விருத்தியில் அவர் காட்டிவரும் அக்கறைகள் புத்தாக்கம் மிக்கவையாக உள்ளன.
தெ.மதுசூதனன்
|