Full Description (முழுவிபரம்): |
இரண்டாம் உலக மகாயுத்தத்திலிருந்து இன்றுவரை பிரச்சி னைகள் மலிந்த உலகின் பிராந்தியங்களில் முதலாவதும், முக்கிய மானதுமான பிராந்தியமாக மத்திய கிழக்கு இருந்து வருகின்றது. மத்திய கிழக்கு நெருக்கடியானது அரபு - இஸ்ரேல் பிரச்சினையாக இருப்பினும் அதன் குவிமையமாக இருப்பது பலஸ்தீனப் பிரச்சினை யேயாகும். இதனைக் கருவாகக் கொண்டு 'பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலானது முடிவின்றி நீடித்துவரும் முறுகலான பிரச்சினைக்குப் புதிய பார்வை யையும், அணுகுமுறையையும் முன்வைக்க முற்படுகிறது.
மேற்குத்தேச அரசியல் தலைமைத்துவங்கள் நிலையூன்றிய நலன்கள் (Vested Interests) வயப்பட்டு பலஸ்தீனப் பிரச்சினையில் எப்போதும் பக்கச் சார்பான நிலைப்பாடுகளையே மேற்கொள்வதும், அதற்குப் பக்கபலமாகவே அந்நாடுகளின் ஊடகங்களும், நூல்களும், ஆய்வேடுகளும், சஞ்சிகைகளும் கருத்து வெளியிடுவதும் வெள்ளி டைமலை. 'புத்திஜீவிக் காலனித்துவம்' (Intellectual Colonialism) என்பதனை இனங்கண்டு, 'சமூக விஞ்ஞானங்களைக் காலனித்து வத்தின் பிடியிலிருந்து விடுவித்தல்' (Decolonization of social Science) என்ற துணிகரமானதும் சவால்கள் நிறைந்ததுமான முயற்சியை மூன்றாம் உலகைச் சேர்ந்த விழிப்படைந்த சில அறிஞர்கள் தமது மாற்றுக் கருத்துக்கள் வாயிலாகக் கணிசமான அளவில் முன்னெ டுத்து வருகின்றனர். அத்தகைய வரலாற்று முயற்சியைப் பிரதிபலிப் பதாகவும், பலப்படுத்துவதாகவும் இந்நூலின் வருகை அமைந்துள் ளது எனலாம். அவ்வகையில் பலஸ்தீன ஆய்வு தொடர்பாக ஏற் கனவே இருந்துவரும் சீரற்ற பாதையைத் தகர்த்தல் (Path - Breaking) என்பதும் பதிலாகப் புதிய பாதையைச் சமைத்தல் (Path - Making) என்பதுமே இந்நூலின் உள்ளுறையாக அமைந்திருக்கும் மகத்தான செய்தியாகும்.
பலஸ்தீனப் பிரச்சினையின் பிராந்திய - சர்வதேச தாக்கங்கள் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் சிறப்பு ஃ பொதுக்கலைமாணிப் பட்டம் பெறுகின்ற மாணவர்களின் மூன்றாம் வருட பாடவிதானத்தில் 'பலஸ்தீனம் - இஸ்ரேல்' என்ற பெயரில் ஒரு அலகு காணப்படுகின்றது. அதனைப் போதிப்பவராக இந்நூலின் தொகுப்பாசிரியரான திரு. கே. ரீ. கணேசலிங்கம் அவர் களே இருந்து வருகின்றார். தொகுப்பாசிரியரின் தனித்துவமான நான்கு கட்டுரைகளுடன் அவரது மாணவர்களாக இருந்து தற்போது உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் திரு. சி. திருச்செந்தூரன், திரு. தி. விக்னேஸ்வரன் ஆகியோர் தனித்து எழுதிய ஒவ்வொரு கட்டுரை யும், இணைந்து எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலை அணிசெய்கின் றன. பிற்கூறிய இருவரினதும் கட்டுரைகள் கன்னி முயற்சியின் அறுவடை போலத் தென்படாமல் கருத்துச் செறிவுடனும், தகவல் வளத்துடனும் துலங்குகின்றன.
ஆய்வுநூல் பாணியில் அமைந்திருக்கும் அதேவேளையில் பொதுவாகச் சமூக விஞ்ஞானங்களையும், சிறப்பாக அரசறிவியலை யும் சார்ந்த மாணவர்களும், ஆர்வலர்களும் பயன்படும் விதத்தில் காணப்படுதல் இந்நூலின் வரவேற்கத்தக்க மற்றோர் அம்சமாகும். பருமனில் சிறிதாக இருந்தாலும், புலமைசார் நோக்கிலும், பயன் பாட்டு ரீதியிலும் இந்நூல் பெரிதாகவே காணப்படுகின்றது.
புதுமை நாட்டமும், புத்தாக்கச் சிந்தனையும் கொண்ட தொகுப் பாசிரியரும், அவருடன் இணைந்துள்ள புதிய தலைமுறையைச் சேர்ந்த உத்வேகம் மிக்க இரு இளம் விரிவுரையாளர்களும் எனது முன்னாள் மாணவர்களும், தற்போது சக விரிவுரையாளர்களும், முன்னுதாரணமான பண்புகளால் நேசத்துக்குரியவர்களும் ஆவர். இப்பின்னணியில் அவர்களின் திறன்மிகு நூலை உரிமையுடனும், பெருமையுடனும், மகிழ்வுடனும், பாராட்டுவதையும், வாழ்த்துவதையும் அர்த்தம் மிக்க - உணர்வு பூர்வமான - ஆக்கபூர்வமான நிகழ்வாகவே கருதுகின்றேன். அத்துடன் இத்தகைய ஆக்கங்களை அவர்கள் வருங்காலத்திலும் வெளிக்கொணர்ந்து அரசறிவியல் கற்கைக்கு வளம் சேர்ப்பார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையும், ஆர்வமான எதிர்பார்ப்பும் ஆகும்.
பேராசிரியர். அ. வே. மணிவாசகர்
தலைவர் ஃ அரசறிவியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
|