Book Type (புத்தக வகை) : கல்வியியல் Educational
Title (தலைப்பு) : மாற்றமுறும் கல்வி முறைமைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN: 2017-04-01-149
ISBN : 978-955-685-048-2
EPABNo : EPAB/2/19293
Author Name (எழுதியவர் பெயர்) : சோ.சந்திரசேகரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

1. கல்விச் சீர்திருத்தங்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள் 1

2. மாற்றத்துக்குள்ளாகும்  கல்விக் கொள்கைகள் 6

3. மாணவர்களின் திறன்களை வளர்க்காத  கல்வி முறைகள்  13

4. இலங்கையில் பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளின் கல்வி 21

5. புதிய கல்வி ஆலோசனைகளைத் தயாரிக்கும்  பணியில் தேசிய கல்வி ஆணைக்குழு 29

6. இலங்கையின் பாடசாலை வகைகளும்  அமைப்பு - புதிய ஆலோசனைகள் 36

7. பிள்ளைகளின் கல்வி பெற்றோர்கள்  ஆசிரியர்களுக்கான சில ஆய்வுக் குறிப்புகள் 44

8. உலகின் 'கல்வி வல்லரசாகப் பின்லாந்து உயர்ந்தது எப்படி? 51

9. கல்வித் துறைப் புத்தாக்கங்கள் 61

10. கணினிகளும் மாணவர்கள் சித்தியும்  69

11. தகவல் தொழில்நுட்பமும் கல்வியும்   சில அனைத்துலகச் செல்நெறிகள் 73

12. இலங்கையின் உயர்கல்வி  அண்மைக்காலப் போக்குகள் 77

13. கருத்துகளின் மையமாகும் பல்கலைக்கழகக் கல்வி 88

14. இலங்கையின் வெளிவாரிப் பட்டக் கற்கை நெறிகள் 94

15. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு  மாணவர்கள் 105

16. இலங்கையர்களின்  வெளிநாட்டுக்கல்வி முயற்சிகள் 112

17. இணையவழி உயர்கல்வி அண்மைக்கால முன்னேற்றங்கள்118

 

Full Description (முழுவிபரம்):

கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில் கல்வியியல் கற்கைநெறி சார்ந்த 200 நூல்கள் வரை இலங்கைக் கல்வியாளர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன என்பதை எமது மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது (இது பற்றிய நூற்பட்டியலொன்றை அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ளோம்). கல்விப் புலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இத்துறையில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்திருப்பதை இவ்விடத்து உளமாரப் பாராட்டுகின்றோம். இக்கல்வியியல் எழுத்துப் பணியின் தொடர்ச்சியாகவே இந்நூல் வெளிவருகின்றது. சேமமடு பதிப்பகம், அதன் உரிமையாளர் திரு.பத்மசீலன் ஆசிரியம் சஞ்சிகை ஆசிரியர் திரு.மதுசூதனன் ஆகியோர் இக்கல்வியியல் நூல் வெளியீட்டுப் பணியில் முன்னின்று உழைத்து வந்துள்ளனர். இந்நூல் வெளியீட்டையும் முன்னின்று செயற்படுத்துபவர்களும் அவர்களே. இவ்வகையில் தமிழ்க் கல்வியுலகம் அவர்களை சிறப்பாகப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டிய கடப்பாடொன்றுண்டு.

கல்வியியலைப் பல்கலைக்கழக மட்டத்தில் கற்க முற்பட்ட முன்னோடிகளுள் நானும் ஒருவன். 1964ஆம் ஆண்டளவில் நான் பேராசிரியர் சபா. ஜெயராஜாவுடன் ஒரு காலை மாணவனாகக் கல்வியயலைக் கற்கத் தொடங்கிய காலத்தில் ஒரு தமிழ் நூலாவது உசாத்துணையாக கிடைத்ததாக ஞாபகமில்லை. எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பல சிரமங்களுடன் ஆங்கிலக் கல்வியியல் நூல்களைப் படித்தோம். எவ்வாறாயினும் கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் மொத்தத்தில் 200 கல்வியியல் நூல்கள் வந்திருப்பது ஒரு வகையில் பாராட்டத்தக்கது. ஆனால் மறுபுறம், சராசரியாக ஆண்டுக்கு நான்கு நூல்களே என்று சிந்திக்கும் போது அதில் ஒரு பற்றாக்குறை இருப்பது தெரிகின்றது. எவ்வாறாயினும் 1964-1990 காலப்பகுதியில் வந்த நூல்களைவிட அதன் பின்னர் வந்த கல்வியியல் நூல்களே அதிகம். இவ்வாறு நோக்குமிடத்து 1990 இன் பின்னர் வெளிவந்த நூல்களின் ஆண்டுச் சராசரி அதிகமானது என்று கொள்ளலாம்.

கல்வியியல் நூல்வெளியீட்டு முயற்சியில் முதலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் ச.முத்துலிங்கம், ப.சந்திசேகரம் ஆகியோரின் எழுத்துப் பணிகளை இவ்விடத்து நினைவுகூர வேண்டும். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் கூட அவர்களுடைய கல்வியியல் நூல்கள் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரு பேராசிரியர்களின் கல்வியியல் நூல்கள் மொத்தத்தில் 5,6 வரைதான் என்றாலும் அவை கல்விப்புலத்தில் ஏற்படுத்திய தாக்கம் காத்திரமான தொன்றே. பின்வந்த நூலாசிரியர்களுக்கு இவர்ளே ஊக்கமளித்தவர்கள், உந்து சக்தியாக விளங்கியவர்கள் என்பதை இவ்விடத்து குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அவர்களிடம் பாடம் கேட்ட பெருமை எனக்குண்டு.

இன்று ஆசிரியர் கல்வியை வழங்கும் நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவனம் போன்றன தமிழ் பேசும் மாணவர்களுக்கு தமிழ்மொழி வழியில் கல்வியியல் கற்கை நெறிகளை நடாத்துகின்றன. கல்வியியலில் பல்வேறு துறைசார்ந்த பாடங்களை அவர்கள் கற்கும் போது ஆசிரியர்களின் விரிவுரைக் குறிப்புகளில் மட்டும் தங்கி இருக்க முடியாது.  

திறந்த பல்கலைக்கழகம் அவர்களுக்குத் தேவையான பாடத்தொகுதிகளை வழங்குகின்றன. இத்தகைய மாணவர்கள் மட்டுமல்லாது பாடசாலைகளில் பணியாற்றும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் தமது பிள்ளைகளின் பள்ளிக் கல்வியில் அக்கறையுடைய பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்களும் நாட்டிலும் உலகிலும் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் சிந்தனை மாற்றங்கள், அமைப்புரீதியான புத்தாக்கங்கள் என்பவற்றை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுண்டு. எமது நோக்கில், இன்றைய சனநாயக உலகில் ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும் தனது நாட்டின் பல்வேறு தேசிய இலக்குகளை அடைந்துகொள்ளும்  நோக்கில் வரையப்பட்டுள்ள கல்விமுறையின் பண்புகளைப் புரிந்து கொள்வது பயனுள்ளது. அத்தகைய அறிவை நாடுகின்ற உரிமையும் அவர்களுக்கு உண்டு. இதற்கும் மேலதிகமாகக் கூறுவதாயின் அவர்கள், அதாவது மேலே வகைப்படுத்திக் காட்டப்பட்ட பல்வேறு தரப்பினரும் உலகளாவிய ரீதியில் மாறிச் செல்லும் கல்வி முறைகள், கொள்கைகள், சிந்தனைகள் பற்றிய புரிந்துணர்வைப் பெறுதல் வேண்டும். இத்தகைய அறிவும் புரிந்துணர்வும் தேசியக் கல்விமுறை பற்றிய ஓர் ஆரோக்கியமான சனநாயகக் கலந்துரையாடலில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு பயனுள்ள பங்களிப்பைச் செய்ய வழிசெய்யும். அத்துடன் இன்றைய கல்விச் சிந்தனை யாவருக்கும் கல்வி வாய்ப்புகள், வாழ்க்கை நீடித்தகல்வி என்ற உயரிய கருத்துக்களை முன்வைப்பதோடு பல்வேறுதுறைசார்ந்த அறிவினை வெகுஜன மயமாக்கப்படுவதை வலியுறுத்துகின்றன.  

இந்நூல் பதிப்பில் உற்சாகத்துடனும் அக்கறையுடனும் செயற்பட்டு நூல் வெளியீட்டுக்குப் பிரதான காரணகர்த்தாக்களான சேமமடு பதிப்பக உரிமையாளர் பத்மசீலன் ஆசிரியம் சஞ்சிகை ஆசிரியர் தெ.மதுசூதனன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான முறைமைசார் மாற்றங்கள் சிந்தனைப்பாங்கான புத்தாக்கங்கள், செல்நெறிகள் பற்றிய எமது இந்நூல் மேற்கண்ட நியாயத்தின் அடிப்படையில் வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம்.

சோ.சந்திரசேகரன்