Full Description (முழுவிபரம்): |
நவீன அரசியல் சமூக வாழ்க்கையில் பொதுநிர்வாகம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர்வதற்கும் அவ் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உரியமுறையில் வெற்றி பெறுவதற்கும் பொதுநிர்வாகம் இன்றியமையாதது ஆகும். மாறாக அந்நிர்வாகக் கட்டமைப்பு சீரில்லாது காணப்படுமாயின் அவை நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கோ, அல்லது அதனால் ஏற்படும் அரசியல் ஸ்திரமின்மைக்கோ அடிப்படையாக அமையலாம். இன்றைய அரசுகள் சமூக நலன்பேணும் ஸ்தாபனமாக விளங்குவதனால் அரசாங்கம் தன்னில் உறைந்துள்ள அதிகாரங்களை நிர்வாகத்திற்கு பரவலாக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. இதனால் அவை நிர்வாக அரசுகளாக வளர்ச்சி யடைந்ததனை தொடர்ந்து அவை பற்றிய ஆய்வுகள் முக்கியம் பெற்றதோடு 'அரசியல் நிர்வாகம்' என்ற கல்வியும் அரசறிவியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
பொது நிர்வாகத்தில் இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருமாற்றம் ஒவ்வொரு நாட்டிலும் அதிகார பரவலாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இவ் அதிகாரப் பரவலாக்கின் விளைவுதான் இலங்கையின் மாவட்டச் செயலகம் ஆகும்;. இந்த வகையில் மாவட்ட செயலகத்தின் தோற்றத்துக்கான பின்னணி, நோக்கம், நிர்வாக கட்டமைப்பு, அதன் செயற்பாடுகள், மாவட்ட செயலகம் எதிர்நோக்கும் சவால்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் பொதுநிர்வாகத்தில் மாவட்டச் செயலகம் என்ற கட்டுரை அமைந்துள்ளது.
அரசின் அதிகாரம் முழுமையாக ஒரு இடத்தில் குவிந்தால் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றமுடியாது. இதனால் நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி 25 நிர்வாக மாவட்டங்களாக பிரித்து கிராம அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கோடும் நிர்வாக செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கோடும் மாவட்ட செயலகத்தில் இருந்து சில அதிகாரங்கள் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. இந்தவகையில் பிரதேச செயலகத்தின் தோற்றம், நிர்வாககட்டமைப்பு, ஒழுங்கமைப்பு, நோக்கம், ஆற்றும்பணிகள், எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றை உள்ளக்கியதாக இலங்கையின் பிரதேச செயலக முறை எனும் அமைந்துள்ளது.
அரசியல் கலாசாரம் என்பது மக்களை அரசியலை நோக்கி நகர்த்துகின்ற ஒன்றாகும். ஒருவரின் அபிவிருத்தி, ஆளுமை, உளவியல் காரணிகள், அறிவு மற்றும் நம்பிக்கை ஆகிய மொத்த அரசியல் கட்டமைப்பை பற்றியதாக அரசியல் கலாசாரம் அமைந்துள்ளது. இந்த வகையில் இலங்கையின் அரசியலில் குடும்பம், மதம் என்பன தாக்கத்தினை செலுத்துவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் அரசியலில் மதம் என்பதற்கு முதன்மை வழங்கப்பட்ட மையினால் ஏனைய மதத்தினை கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் தடைப்படுகின்றது. இதன் காரணமாக உறுதியான நிர்வாக அரசினை ஸ்தாபிக்க முடியாதுள்ளது. இது முரண்பாட்டு அரசியலுக்கு வழிவகுக்கும். இந்த வகையில் இலங்கை அரசியலில் மதத்தின் நிலை, மத அரசியலின் விளைவாக ஏற்படும் முரண்பாட்டு அரசியலின் தன்மை என்பவற்றை உள்ளடக்கியதாக இலங்கையின் மத அரசியல் கலாசாரப் போக்கு அமைந்துள்ளது.
இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் முரண்பாட்டுக் காரணிகளில் மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. சுதந்திரம் அடைந்த பின்பாக இலங்கை அரசியல் நிர்வாகத்தில் மொழி குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்றுவரை இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பனவாக விளங்குவதனைக் காணமுடிகின்றது. இவ்விடயங்களைத் தெளிவுபடுத்துவதாக இலங்கையின் 'மொழி அரசியல்' என்ற கட்டுரை அமைகின்றது.
ஒரு நாட்டு மக்களின் நலன்பேணும் திட்டங்களையும் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் உரியமுறையில் உரியகாலப் பகுதியில் கொண்டுசெல்லும் நோக்கோடு நிர்வாக அரசுகள் செயற்படுகின்றது. மக்களின் நலன்கள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பன மறுக்கப்படு கின்ற போது புரட்சிகள், ஆட்சிமாற்றங்கள், வன்முறைகலந்த போராட்டங்கள் என்பன இடம்பெறும். இந்தவகையில் அரசியல் புரட்சி என்றால் என்ன?, புரட்சிக்கான காரணிகள் யாவை?, புரட்சி தொடர்பான அறிஞர்கள் கருத்துக்கள் என்பன பற்றிய மதீப்பீடாகவே அரசியல் புரட்சி அமைந்துள்ளது.
சமுகத்தில் அதிகாரம், அந்தஸ்து, பொருளாதாரம், உயர்சக்தி என்பவற்றை கொண்டுள்ள சிறு பிரிவினரே அரசியல் உயர்குழாம் ஆவர். அரசாட்சியிலும், அரசாங்க நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இவ் உயர்குழாம் விளங்குகின்றது. இவ் உயர்குழாமினரை அவர்களது கல்வி, சமூக அந்தஸ்து, சாதி, குடும்பம், பொருளாதாரம், புகழ் போன்ற பலகாரணிகள் அடையாளப்படுத்து கின்றன. இந்த வகையில் அரசியல் உயர்குழாம் என்றால் என்ன?, முக்கிய உயர்குழாம் கோட்பாடுகள், நவீனகோட்பாடுகள், இலங்கையில் உயர்குழாமின் தன்மை போன்றவற்றை உள்ளடக்கியதாக அரசியல் உயர்குழாம் என்ற கட்டுரை விளங்குகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரிகள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தொழிலாளர்களின் நலன்களை முதன்மைபடுத்தவும், ஏகாத்தியபத்தியத்திய ஆட்சியிலிருந்து சுகந்திரத்தினை பெற்றுக் கொள்கின்ற நோக்கோடும் இடதுசாரிகள் தோற்றம் பெற்றனர். இவர்கள் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கான மக்கள் வலுவினை கொண்டிந்த போதிலும், இடதுசாரித் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இந்த வகையில் இலங்கையின் அரசியலில் இடதுசாரிகள் ஏற்படுத்திய தாக்கத்தினையும் இடதுசாரிகள் சாதித்தவற்றையும், அவர்களின் வீழ்ச்சி என்பவற்றையும் தெளிவுபடுத்து வதாக இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற கட்டுரை அமைந்துள்ளது.
இந்த வகையில் இலங்கையின் அரசியல் நிர்வாகம் என்ற இந்நூல் பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரி மாணவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுக்கு பயனுள்ள நூலாக அமையும். இந்நூலை எழுதுவதற்கு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் ஆ. வே. மணிவாசகர் அவர்களுக்கும் இந்நூல்லினை எழுதுவதற்கு என்னை ஊக்குவித்து, ஆலோசனைகளையும் இந்நூலுக்கு அணிந்துரையினையும் வழங்கிய சிரேஷ்ட விரிவுரையாளர் கே. ரீ. கணேசலிங்கம் அவர்களுக்கும், இந்த நூல் தொடர்பாக ஆலோசனை வழங்கிய சிரேஷ்ட விரிவுரையர் கலாநிதி. வை.சுந்தரேசன், விரிவுரையாளர்களான திரு. சி. திருச்செந்தூரன், திரு.தி.விக்கினேஸ்வரன் ஆகியோருக்கும் நூலினை வடிவமைப்பதற் கும், வெளியிடுவதற்கும் ஆலோசனை வழங்கிய தெ.மதுசூதனன் அவர்களுக்கும், ஆசிரியர் மு.சீராளகந்தபாலன் உதவி விரிவுரையாளர் சி. நிரோசன், மற்றும் இ. பிரதீபன் ஆகியோருக்கும் உரிய காலத்தில் அச்சிட்டு தந்த சேமமடு பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சி. பிரசாத்
|