Full Description (முழுவிபரம்): |
தாயின் பலோப்பியக் குழாயில் கருக்கட்டல் நடைபெற்ற உடனேயே குழந்தையைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் உளவியல் குழந்தை வளர்ந்து பிள்ளையாகி பிள்ளை கட்டிளமைப் பருவத்துக்கு வந்து, இளைஞராகி, மத்திய வயதுக்கு வந்து, முதியவராகி இறக்கும் வரை அந்த மனிதரின் எண்ணம், உணர்வு, நடத்தை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கிய வாழ்க்கைக்கூறு ஆகிறது.
'மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி' என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எமது இந்து சமயத்தில் குறிப்பிட்டபடி மனம் எனும் தோணியை உறுதியாகப் பற்றிக் கொள்ளாவிட்டால் வாழ்வு எனும் பெருங்கடலை மகிழ்வுடன் கடக்க முடியாது. மகிழ்வுடன் வாழ்தல் என்பது உயிரிகள் அனைத்துக்கும் மிக இயல்பாக உள்ள உந்தல் அல்லது அதுவே அவற்றின் வாழ்வு இலக்கு. வேதனைப்படுவதற்கு எந்த உயிரியும் விரும்புவதில்லை. மனிதர்களுக்குத் தம்வாழ்வில் நிறைவேற்ற விரும்பும் வேறு உயர் இலக்குகள் இருக்கலாம். ஆயினும் சந்தோஷமாக, அமைதியாக வாழ்தல் என்ற இலக்கைத் தொலைத்து விடக்கூடாது. அந்த இலக்கு இல்லை என்றால் வேறு எந்த இலக்கையும் அடைந்து விடமுடியாது. அமைதியாக ஆறுதலாக வலைப்பந்தை எறிந்தோமானால் அது பேற்றுக் கம்பத்தின் வளையத்தினூடு விழுந்துவிடும். அதையே பதற்றத்துடனோ, பயத்துடனோ அல்லது கோபத்துடனோ எறிந்தோமாயின் பெரும்பாலும் விழாது.
சில மனிதர்களை நாம் புத்திசாலிகள் என்கிறோம். நுண்மதி மிக்கவர்கள் என்கிறோம். நுண்மதி என்பது காரணம் காணும் திறன் சூக்கும சிந்தனை, கற்றல்திறன், கற்றவற்றை உபயோகிக்கும் திறன், வேகமான சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் ஆற்றல், சூழலுக்கு இசைவாகும் திறன் என்ற பல விடயங்களோடு சம்பந்தப்பட்டிருந்ததாலும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு புத்திசாலித்தனம் தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இத்தகைய எண்ணங்கள் காரணமாக உளவியல் விஞ்ஞானம் பற்றிய தேடலில் ஓர் ஆர்வம் மாணவப் பருவத்திலேயே என்னிடம் இருந்தது. டேல் கார்னேகி (னுயடந ஊயசநெபநை) போன்ற எழுத்தாளர்களின் பிரபலமான நூல்களை மகாஜனக் கல்லூரி நூல் நிலையத்தில் இருந்தும், யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இருந்தும் பெற்று வாசித்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகலாம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, உளவியல் தொடர்பான நூல்களை மிக ஏராளமாகவே வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
ஆயினும், முறைமையான உளவியல் துறைக் கல்வியைப் பெற்று ஒரு உளவளத்துணையாளர் பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெறும் சந்தர்ப்பம் 1990களின் ஆரம்பத்திலேயே கிடைத்தது. பேராசிரியர் தயா.சோமசுந்தரம் அவர்களின் சிறப்பான வழிகாட்டலில் வேறு பல விரிவுரையாளர்களின் கற்பித்தலில் அது நிறைவேறியது.
உளவளத் துணையாளர் என்ற பின்னணியுடன் கல்விப் புலத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் பொறுப்பில் இருந்ததால், அனர்த்த சூழலில் மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பில் பணியாற்ற வந்த பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களோடும் பணிபுரிய நேர்ந்தது. அந்தச் சந்தர்ப்பங்களும் பேராசிரியர் தயா.சோமசுந்தரம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் எமது கல்வி வலயத்தின் அனைத்து சமூக உளவியல்சார் தொழிற்பாடுகளுக்கும் இணைப்பாளராக அமையும் பெருவாய்ப்பும், அநேக ஆசிரியர்களை ஆசிரிய உளவளத்துணையாளர்களாகப் பயிற்றுவித்த அனுபவமும் கிடைத்தன.
இக்காலகட்டத்தில் (1990-2006) பலவேறு தேவைகள் கருதி நான் எழுதிய பல உளவியல்சார் கட்டுரைகள் இருந்தன.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்த ஓய்வு பெற்றபின் மனநல மருத்துவர், வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களின் வழிகாட்டலுடன் கொழும்பில் உளநல ஆலோசகராகப் பணியாற்றுகிறேன்.
இந்த நிலையில்தான் இந்த உளவியல் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்க விரும்பும் தனது ஆவலைச் சேமமடு பொத்தகசாலை அதிபர் திரு.பத்மசீலன் அவர்கள் என்னிடம் வெளியிட்டார். அவரது அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு சில புதிய கட்டுரைகளையும் எழுதி இந்நூலைத் தொகுத்துக் கொடுத்தேன்.
சேமமடு பொத்தகசாலை அதிபரின் இந்தப்பணி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இந்தநூலுக்கு மிகப்பொருத்தமான அணிந்துரை ஒன்றை எழுதியுள்ள டாக்டர் எஸ்.சிவதாஸ் அவர்களுக்கும் இத்துறையில் என்னை உயரவைத்த பேராசிரியர் தயா.சோமசுந்தரம் அவர்களுக்கும், மறைமுக ஒத்துழைப்பை வழங்கிவரும் எனது கணவருக்கும் மகனுக்கும் எனது நன்றி என்றும் உரியது.
அதிகம் பேசுவதை விடுத்துச் செயற்படத் தொடங்குவோம்.
கோகிலா மகேந்திரன்
70, பசல்ஸ் ஒழுங்கை
கொழும்பு - 06
|