சங்கமிருந்து வளர்ந்த தமிழ்மொழி
தாரணி மீதினிலே
துங்கநலம்மிகச் சொல்லிசைச் சீர்கள்
துலங்கிட வாழியவே
தன்னிடை நின்று தழைத்த கிளைமொழி
தாம்பல தோன்றிடினும்
கன்னிமை யோடெழில் கற்பியல்பெற்று
கனிந்தவள் செந்தமிழ்த்தாய்
நாவிற்கினித்திடும் பண்டங்கள் போலிந்த
நாட்டினில் பாவலர்சொல்
பாவிற்கினித்திடும் பல்பொருள் யாப்பணி
பாலித்தவள் தமிழ்த்தாய்
விற்கொடியோடுயர் மீன்கொடி வீரம்
விளங்கு புலிக்கொடியும்
கற்கை நன்றாய கலைக்கொடியோடு
கலந்தவள் செந்தமிழ்த்தாய்
இந்தத்தமிழ்மொழி என்றென்றும் வாழ்ந்திட
ஏத்திப் பணிந்திடுவோம்
சந்ததம் அன்னவள் தாமரைப்போதடி
தம்மை வணங்கிடுவோம்.
|