முகாமைத்துவக் கொள்கைகள் - ஓர் அறிமுகம் |
சமூக அறிவியல் துறைகளில் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதும் நேரடியாக வாழ்க்கைப் பயன்பாடுடையதுமான ஒருதுறை முகாமைத்துவம் எனலாம். இன்று முகாமைத்துவம் ஒரு புலமைசார் துறை என்ற முறையில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதோடு அத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல முகாமைத்துவக்கல்வி நிறுவனங்கள் உலகில் எழுந்துள்ளன. இத்துறைசார்ந்த ஆய்வாளர்கள் நூல்கள் சஞ்சிகைகளும் ஏராளம். ஐக்கிய அமெரிக்கா உலகில் பெரு வல்லரசானதற்கான காரணங்கள் பற்றிக் கூறும் முகாமைத்துவ மற்றும் எதிர்காலவியல் பெருமறிஞரான பீற்றர் ட்றக்கர் அந்நாட்டில் முகாமைத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை ஒரு காரணமாகக் கூறுகின்றார். உலகளாவிய மகத்தான சாதனைகளுக்குப் பின்னணியில் (பிரமிட், சீனப் பெருஞ்சுவர்) ஏதோவொரு முகாமைத்துவம் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். |